கவிதை

உரிமைகள் பறிக்கப்படும்:
====================

அடுக்குமாடி குடியிருப்பில்
தங்கும் வசதி.
ஆடி காரில் பயணம்
ஐ ஃபோன் இலவசம்
மூன்று தலைமுறைக்கு
அரசு வேலை.
இ எஸ் பி எஃப் லொட்டு லொசுக்கு
பரிசீலிக்கப்படும்.
தீபாவளி பொங்கலுக்கு
மூன்று மாத சம்பளம்
போனசாய்...!
நெசமாத்தான் கேக்குறேன்
மலம் அள்ள வரேளா.


- வினையன்

=======================

நீங்கள் என்னை சூத்திரன்
என்றழைத்தபோது.?
என் கையில் சவரக் கத்தி
இருந்தது.
என் கையில் பிணமெரிக்கும்
கட்டை இருந்தது.
அனல் தின்னும் பறை காய
தீக்குச்சி இருந்தது.
பல புதுச் செருப்புகள் தைத்தே
இருந்தது.
நீங்கள் நம்பிக் காட்டிய
குரல்வளையை
கிழித்தாரில்லை.!
தன்னந்தனி சுடுகாட்டில்
பயந்துபோய்
வந்தாரில்லை..!!
நீங்கள் எரித்தீரென்று
பதிலுக்கு
எரித்தாரில்லை..!!!
கண்டதும் கழட்டச் சொன்னீர்
செருப்பை - இருந்தும்
கிழிந்த உம் செருப்பை
தைக்காதவரில்லை.?
இன்றோ பேனா பிடித்துவிட்டோம்.
பிரபஞ்சம் சுற்றுகின்றோம்.
ஜில்லெட் கொண்டு
சிரைத்துக்கொள்.!
மின் சுடுகாட்டில்
சாம்பல் அள்ளு.!!
சத்தமில்லாமல்
காடு சேர்..!!!
கிழிந்தால் தூக்கியெறி.
உனக்கும் எனக்கும் ஒரே
வடிவ 'தீ' தான்
கனன்று கொண்டிருக்கிறது.


-வினையன்

எழுதியவர் : வினையன் (17-Nov-15, 7:44 pm)
Tanglish : kavithai
பார்வை : 51

மேலே