அரும்புகள் போட்டிக் கவிதை

அரும்புகள்...போட்டிக் கவிதை

யாழ் தோற்கும் இனிய மொழி
வாய்மொழிய வசியந்தான்
வறுமை வலி போக்கும்
மழலை அரும்பு வாசம்தான்..!!

மணம் முடித்த மறு திங்கள்
உறவுகளின் எதிர்பார்ப்பில்
கருவினிலே அரும்பாகும்
காலமெல்லாம் பொய்த்த தின்று..!!
..
பொருளீட்டும் முனைப்பினிலே
அரும்பிற்கு தடை விதிப்பார் - கரு
தரிக்காமல் போவதற்கோ
மாத்திரையும் விழுங்கி வைப்பார்..!!

மலட்டிற்கு மாத்திரையை
விலை பேசி விற்றபின்னே
குலம் தழைக்க குழந்தைக்கும்
வரம் வேண்டி வருந்திடுவார்..!!

குதிகால் செருப்பணிந்து
கோணல் மானல் நடையினிலே
கருவில்லம் இடம் மாற
அரும்பங்கு பூப்பதில்லை..!!

சுயநலத்தில் விளைநிலத்தை
களர் நிலமாய் மாற்றிவிட்டு
அரும்புகளை அயல்நிலத்தில்
அறுவடை கொடுமைகளாய்..!!

இயற்கையை கட்டிவைத்து
இன்னல்கள் தாம் பெறுவார்
உண்மை உணர்கையிலே
ஆவதுதான் யாதுமில்லை..!!

மகிழ்ச்சிக்கு மடைபோடும்
தடை எல்லாம் உடையட்டும்
அவரவர் மடிகளிலே
நல்லரும்புகள் மலரட்டும்..!!

எழுதியவர் : சொ.சாந்தி (17-Nov-15, 11:24 pm)
பார்வை : 182

மேலே