விரயமான விடியல்
நறுமணத்தோடு
நாளைத் துவக்க
காத்திருந்த மலர்களுக்கு,
பெருத்த ஏமாற்றம்!
நறுமணம் இதுவரை
காற்றில் கலக்கவில்லை.
மழை நிற்குமொன
காத்திருந்து, காத்திருந்து
கண்கள் பூத்துக்கொண்டிருந்தனர்
மக்கள்.
தும்பிகளுக்கும்
தேன் சிட்டுகளுக்கும் இன்று
பட்டினிதான்.
நந்த வனங்களுக்கு இன்று
அறிவிக்கப்படாத விடுமுறை
மழையில் நனைத்து மலர்பறிக்க
எவருமே, தயாராக இல்லை.
பூக்குவளைகளின்
வருகைக்காக
கையை பிசைந்தபடி
காத்திருந்தனர்
'பூ'பண்டாரங்கள்.
தோத்திர கீதங்களைக் கேட்க,
பள்ளி கொண்டபடி
படுத்திருந்தார் கடவுள்;
காதுகளை தீட்டியபடி.
பாமாலை முடிந்தும்
பூமாலை வரவில்லை!
மாலை வந்தபின்பும்
மழை விடுவதாக இல்லை
இறுதியில்,
நந்தவனங்களில்
வாடி உதிர்ந்தன மலர்கள்
கன்னிமையோடு...........
~கவுதமன்~