மெல்லிசைக்காற்று நின்று போனது
ஐஸ் பெட்டியில் உறங்கிப்போனது
ஓர் அற்புத ஆர்மோனியப் பெட்டி
ஏழு உலகையும் கட்டி ஆண்டது - அது
ஏழு ஸ்வரங்களில் பாடல் கட்டி.
வாலி, பாலசுப்ரமணியம்
வாணி, ஜெயச்சந்திரன்
மற்றும் பல இசைமேதைகள்
உன்னால் ஆனார்கள்
உலகுக்கு அறிமுகம்
இன்று உன் பிரிவால்
உலகம் பார்க்கிறது
அவர்கள் அழுகைமுகம்
கவிஞர்களின் தமிழ் ரயிலுக்கு
தண்டவாளம் போட்டது உன் இசை
அதனால்தான் நல்வழியில்
திரும்பியது திரையுலகின் திசை
நல்லிசை, மெல்லிசை
தொல்லிசை, சொல்லிசை
இன்னிசை, பண்ணிசை
இவ்விசைகள் யாவும்
அடக்கமானது உன்னுள்- இன்று
நீ அடக்கமானாய் மண்ணுள்
உன் இறப்பால் உறைந்தது
உடலோடு கலந்த குருதியல்ல
உன் உயிரோடு கலந்த சுருதி
பட்டுக்கோட்டை வரிகளுக்கு
பாட்டுக்கோட்டை கட்டியது உன் கரங்கள்
கண்ணதாசன் எழுத்துக்களை
வண்ணமயமாக்கியது உன் ஸ்வரங்கள்
ஓவியக்கவிஞன் வாலியை
காவியக்கவிஞன் ஆக்கியது உன் இசை வரங்கள்
தேனான உன் இசை மீது
பற்று வைத்ததால்தான் உன்னை
வரவு வைத்துக்கொண்டான் எமன்.
கணவனைக் காலனிடமிருந்து மீட்ட
சாவித்ரிபோல உன்னை மீட்டெடுக்க
கலியுகத்தில் இல்லையே ஓர் உமன்
உன் விரலையும் குரலையும்
இரண்டறக்கலந்து நீ தந்த இசையால்
எங்கள் இதயத்தின் வலி போனது
இசையே உயிர்மூச்சென தேடி வந்த
இளைஞர்களுக்கு அதுவே வழியானது
இருண்டு போன இசைப்பிரியர்கள் வாழ்விற்கு
வெளிச்சம் தரும் ஒளியானது
கான வயலில் இன்று நடக்கும் அறுவடைக்கு
நீதான் நட்டாய் இசைநாற்று
உன் இசைக்கு இசைந்ததால் இனிமேல்
இயற்கையும் கொடுக்கும் இசைக்காற்று