துணிவுத் தணல்

ஆறு தலைமுறையாய்
அன்னியரின் ஆளுமையால்
சகிப்புத்தன்மையின்
எல்லைக்கே சென்றுவிட்டோம்!

சுதந்திரத்தின் விடியல்
சுவாசத்தில் மட்டுமே
எண்ணச் சிறை தன்னில்
இன்றுவரை கட்டுண்டோம்!

சங்கிலிக்கு பழகிய
மாபெரும் யானைபோல்
அரும்பில் இருந்தே
கட்டளைக்கு பணிந்துவிட்டோம்!

இயல்பான வளர்ப்பின்றி
இன்றைய சமுதாயம்
பழமை சிறைதன்னில்
மாறாமல் சிக்கிவிட்டோம்!

கல்விதான் அறிவென்று
கட்டளை பிறப்பித்து
திறமையை பின்தள்ளி
படைப்பாற்றல் சுருக்கிவிட்டோம்!

கட்டாய வேற்றுமையை
வேண்டி திணித்துவிட்டு
தாழ்வு சிக்கலை
ஆழ் மனதில் ஏற்றிவிட்டோம்!

உன்னுள் மறைந்திருக்கும்
மரபணுவை உசுப்பிவிட்டு
இடைச்செருகலாய் வந்த
தாழ்வை தகர்த்துவிடு.

துணிவுத்தணல் கொண்டு
சவாலெல்லாம் சுட்டெரித்து
முனைப்புடன் முன்சென்று
முடிவின்றி முன்னேறு.

எழுதியவர் : ஸ்ரீராமுலு (20-Nov-15, 8:15 pm)
பார்வை : 141

மேலே