அன்புள்ள மகளே
என் தாயின் மழலைப் பருவம்
என் விழிகளின் அருகில் விளையாடுகிறது
என் குழந்தையாய்.
என்னைப் பெற்ற தாயை விட
உன்னைப் பெற்ற தாயை விட
நான் பெற்ற நீயே இருக்கின்றாய்- என்
இதயத்தில் குடிகொண்ட தேவதையாய்.
இதழ்கள் தவிர முகத்தில்
இதர இடங்களில்
சிதறும் சாதத்துடன்
நீ சாப்பிடும் அழகு
வார்த்தைகள் இன்னும்
பூர்த்தியாய் வரவில்லை- இருந்தும்
இனிய மழலையில்
அப்பா என
நீ கூப்பிடும் அழகு
இவைதான் இந்த பூவுலகில்
நான் கண்ட முதல் அழகு.
நீ பிறந்த தினத்தின் அன்றே
என் இறந்த காலம் இறந்து விட்டது
என் துயரங்கள் பறந்து விட்டது
நானும் வளர்கிறேன் உன்னுடன்
தகப்பனாய் அல்ல
ஒரு தோழனாய்.