வயலுக்க நீ வந்தா வரும் மழை

அருங் கோடை இடி,இடிக்கு
அடி வானம் மழையடிக்கும்
தரிசெல்லாம் மண் கனியும்
தளிர் விட்டு பூ அணியும்
வாய்க்காலில் நீர் சுழிக்கும்
வக்கடையில் மீன் சினைக்கும்
ஆள் விரட்டி கொக்கரிக்கும்-உன்
அழகில் அது சொக்கி நிக்கும்


வரப்பால் நடந்து புள்ள
வந்தாய் என்றால் மெல்ல
‘புரை’க்காலும் எழுந்து நின்று
புதினமாய் பார்க்கும் ஒன்ன
பரண் திடலும் வாய்மூடி-உன்
பவனிதனை ரசித்து சொக்கும்
பதக்கடையும் நெல் மணியாய்
பயிராகி முளைத்து நிக்கும்


மனப்பால் அழ நிறஞ்சி
மண்ணெல்லாம் வழிந்தோடும்
நினைப்பால் நெல் விளஞ்சி
நெஞ்செல்லாம் கதிராடும்
அறுகம் புல் அடி துளிர்க்கும்
அயல் காணி நீர் சுரக்கும்
வயலெல்லாம் கலர் பூக்க
வண்ணாத்தி சிறகடிக்கும்


அன்பில் உயிர் சோறாக்கி
ஆசை மீன் கறியாக்கி
பாக்க வருவாயே புருசன
ஆருக்கு வரும் கரிசன?
நீ வாற நேரமெல்லாம்-என்
நெனப்பில் மழை பொழியும்
பூ நீ உதிர்ந்திட்டா –என்
பொழப்பு எதில் முடியும்?!


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (21-Nov-15, 6:13 pm)
பார்வை : 183

மேலே