தியானம் செய்யும் முறை
ஜபம் செய்வது எதனால்?
இறைவனை அனுபூதியில் உணர்ந்து அவரோடு ஒன்றிணைவதற்கு எளிய வழி ஜபம் செய்வதுதான்.
*மனதிற்குள் செய்வது மானசீக ஜபம்.
*தனக்கு மட்டும் கேட்கும்படி சொல்வது உபாம்சு.
*பிறருக்கும் கேட்கும்படி உச்சரிப்பது உச்சாடனம்.
மந்திர ஜபம் ஆத்மார்த்தமாகச் செய்யப்பட்டு வந்தால் ஒருவரது உடல், உள்ளம், செயல் மூன்றிலும் ஆக்கப்பூர்வ விளைவை உண்டாக்கும். ஜபம் யோகத்தின் ஓர் அங்கமானதால் ஜபயோகம் என்றும் அழைப்பர். கீதையில் பகவான் யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம் என்கிறார்.
ஜபம் பகவானையும் பக்தனையும் இணைக்கும் பாலம். ஒரு முகப்படுத்தப்பட்ட மனதோடு ஜபித்தால் மனம் தூய்மை அடையும். அது மெல்ல மெல்ல அடங்கி, இறைவனிடம் லயிக்கிறது. விரைவில் வீண் எண்ணங்களிலிருந்தும் ஆசைகளிலிருந்தும் விடுபடுகிறது. மனம் அவற்றோடு ஒன்றுவதில்லை.
காலக்கிரமத்தில் மனம் சாந்தமாகி, அகத்திலும் புறத்திலும் தெய்வ சாந்நித்தியத்தை உணர்கிறது. தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் தெய்விக சக்தியே செயல்படுவதை ஜப யோகி உணர்கிறார். ஜபத்தை ஆர்வத்துடன் செய்யும் சாதகர் தமது உலகக் கடமைகளைப் பற்றின்றி அமைதியாக நிறைவேற்றி கடவுளுக்கு அர்ப்பணிக்கிறார்.
நெருப்பு தன்னிடம் வந்ததைச் சாம்பலாக்குவதுபோல் ஜபம் ஒருவரின் பாவங்களை, கர்ம வினைகளைச் சாம்பலாக்கிவிடுகிறது. ஜபத்தின் மகத்துவத்தைத் தெரிந்தோ, தெரியாமலோ செய்தாலும் அது உயர் பலனை அளிக்கும். பணம் இருப்பவர் தான, தர்மங்கள் செய்யட்டும். அது இல்லாதவர்கள் ஜப தவத்தின் மூலம் சேவை செய்யட்டும் என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். தொடர்ந்து ஜபம் செய்து வந்தால், புறச்சூழ்நிலையிலும் கூட மாற்றம் பெறும்.
நாம ரூப பேதங்கள் கொண்டது இவ்வுலகம். தரையில் விழுந்தவன் தரையினை ஊன்றி எழுவதுபோன்று மற்ற நாமரூப பேதங்களில் கவனம் செலுத்தாது ஒருவர் இறைநாமத்தை மட்டும் பற்றி, ஜபித்து வந்தால் உலகிற்குப் போக்கு வரவற்ற முக்தி பெறுகிறார்.
இறைநாம சக்தி பற்றி ஒரு பழம்பாடல் விளக்குகிறது:
அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்-நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும்தோன்றும் முருகா என்று ஓதுவார் முன்.
அன்புடன் முருகா என ஓதுவாரிடம் பகைவரைக் கண்டு அஞ்சும் முகம் தோன்றினால் உடனே அவர்கள் முன் அவர்களைக் காத்தருள உன் ஆறுமுகம் தோன்றும். அத்தகையோர் கொடிய வினைகளால் துன்புறும் போது அஞ்சேல் எனக் கூறி அவர்கள் முன்பு அபயம் அளிக்கும் வேல் தோன்றும். ஒருமுறையேனும் முருகா என்று நினைத்தால் உனது அழகிய இரு திருவடிகளும் அவர்கள் முன்பு தோன்றி அருளைப் பொழியும்.