மாமழை போற்றுதும் ~ஆதர்ஷ்ஜி
மாமழை போற்றுதும் !~ஆதர்ஷ்ஜி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊர்ப்பக்கம் பெய்தாலாவது பயனுண்டு என்றார் அப்பா .
ஒரு மணியாவது கழித்து வந்திருந்தால்
துணிமணியாவது காய்ந்திருந்திருக்கும் என்றாள் அம்மா.
கடைவீதி செல்லத் தடையான மழையை
குடையாலே கொல்லத் தயாரானாள் மனைவி.
பட்டாசு வெடிக்கும்வரை போய்விட்டுப்பின்
பள்ளி திறக்கும் நாளில் வரவேண்டினான் மகன் .
கதவைத் திறந்து மழை பார்த்து அமர்ந்தேன் நான்.
மின்னல் பிடித்திறங்கி பேனாவில் மையாகி
மழையே எழுதிக் கொண்டதுபோலொரு கவிதை என் ஏட்டில் !
வந்து மழையாய் கொட்டி விட்டாலும் கவிதையை
வாசித்துக் காட்டத்தான் யாருமில்லை எல்லாருமிருந்த வீட்டில்...!
~ஆதர்ஷ்ஜி