நீங்களே தலைப்பு வைத்துக்கொள்ளுங்கள்

அவள் பர்ப்பிள் பைத்தியக்காரி
அவளுக்கு பிங்க் பிடிக்காது
அதற்காகவே அவளை பிடித்துப்போகலாம்!

யாரோ யாருக்கோ அர்ப்பணிக்கிற
பண்பலை பாடல் ஒன்று
என்னோடு தொடங்கி
உன்னோடு தொடர்ந்து
நம்மோடு முடிகிறது.

அன்புள்ள என தொடங்கி
அன்புள்ள என முடிகிற
உன் எல்லா கடிதங்களிலும்
ஆசிர்வதிக்கப்பட்டவனாகிறேன் நான்

உதிர்ந்தது ஒரு சருகு
அசைகிறது ஒரு குளம்!

உடைந்த நிலா என்கிறேன்
பிறைநிலா என்கிறாள்!

வளையலும் கொலுசும் தூங்கட்டும்
நீயும் நானும் விழித்திருப்போம்

இந்த கனவில் என் பெயரை கத்திக்கொண்டே
ரயிலை நோக்கி ஓடிக்கொண்டிருப்பவனுக்கு
என்ன ஆனதென்றே தெரியவில்லை.
நான் காப்பாற்றி இருக்கலாம் அல்லது
அவன் ரயிலுக்கு இரையாகியிருக்கலாம்.
வேறொரு கனவில் முழங்காலுக்கு மேல்
சேலையை உயர்த்தி இன்னும் நெருங்கி வருபவளை
என்ன செய்தேன் எனத்தெரியவில்லை.
அவளிடம் நான் விழுந்துவிட்டேனா அல்லது
அவளை தள்ளிவிட்டேனா தெரியவில்லை.
பாதி தூக்கத்தில் பாதி கனவில் தட்டி எழுப்புவர்களுக்கு
இவர்களைப்பற்றி தெரியப்போவதில்லை.
நிச்சயம் வேறு யார் கனவுகளிலும்
வேறு யாரையும் இவர்கள் சந்திக்கப்போவதில்லை.
நான் மட்டுமே வாழ்ந்த,நான் மட்டுமே ரசிக்க முடிகிற
முடிவு தெரியாத அல்லது முற்றுப்பெறாத
என் கனவுகள் யாவும் எனக்கானவை!

உங்களுக்கும் தெரியும் தானே
இரவு பத்துமணிக்கு மேல்,கசங்கிய வேட்டியை
தோளில் மாட்டிக்கொண்டு வரும் சித்தப்பாக்கள்
கதவுதட்டும்போது
”இவனுக்கு ஒரு சாவு வரமாட்டேங்குதே”
என புலம்பும் அம்மாச்சிகளை.
உங்களுக்கும் தெரியும் தானே
”இந்தாள இங்கிட்டு பாத்தீகளா” என
தேடிவரும் சித்திமார்களை.
உங்களுக்கும் தெரியும்தானே
கடைசி சித்தியின் தாவணி முந்தானைக்குள்
ஒளிந்துகொண்டு மிரட்சியோடு இருக்கும்
அஞ்சு வயசுப்பையனை
நிலைதடுமாறியபடியே இழுத்துப்பிடித்து
மிக்சர் ஊட்டிவிடும் சித்தப்பாக்களை .
உங்களுக்கும் தெரியும் தானே
எப்போது இந்த சித்தப்பன்கள் சண்டையிடுவார்கள்
எப்போது இந்த சித்தப்பன்கள் யாரிடம் வம்பிழுப்பார்கள்
எப்போது வேடிக்கை பார்க்கலாம் என்று காத்திருப்பவர்களை.
உங்களுக்கு தெரியும் தான் அல்லது
தெரியாதது போல காட்டிக்கொள்ள முயற்சிப்பீர்கள்.
ஏனெனில் இந்த சித்தப்பன்களை
கடந்துவிட நினைத்து ரசித்துக்கொண்டிருக்கிறீர்கள்!

எந்த பக்கம் இருந்து
தொடங்க வேண்டுமென தெரியவில்லை
இந்த வானத்தை அளவெடுக்க!

இந்த கடற்கரையில் கடல்அலையில்
இருவர் கால் நனைத்துக்கொள்கின்றனர்.
இன்னும் இருவர் சிறுபிள்ளையைபோல
கடற்கரை மணலில் வீடு கட்டி
விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.
அலை வந்து மோதுகிற
சிதிலமடைந்த படிக்கட்டிலிருந்து
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அவரவர்க்கு அவரவர் விரும்பியதை செய்ய
அனுமதித்திருக்கிறது இந்த கடல்!

தூக்கம் தொலைத்த இரவுகளில்
யாருக்கும் தெரியாமல்
சமையலறையில் இருந்தோ
போர்வைகளுக்குள பதுங்கியோ
ஒவ்வொரு வார்த்தையாக சேகரித்து கேட்கிறாள்
உனக்கு ஏன் பூனை பிடிக்கிறதென?

நான் சாமி பார்த்த
திருவிழாக்கள் எல்லாம்,
நீ சாமி பார்க்க வராத
திருவிழாக்கள் தான்.


உங்கள் சிரிப்பை அப்படியே
சிரித்துக்காட்டுகிற ஒருத்தி
உங்கள் நடையை அப்படியே
நடந்துகாட்டுகிற ஒருத்தி
நீங்கள் தலைசீவுவதை அப்படியே
சீவிக்காட்டுகிற ஒருத்தி
நீங்கள் சாப்பிடுவதைப்போல அப்படியே
சாப்பிட்டுக்காட்டுகிற ஒருத்தி
நீங்கள் உயர்த்துவதைப்போல அப்படியே
புருவத்தை உயர்த்திகாட்டுகிற ஒருத்தி
உங்களை மட்டும் உங்களைவிட அதிகமாகவே காதலித்துக்கொண்டிருக்கிறாள்!


புரிந்தும் புரியாமல் இருக்கிற நானும்
தெரிந்தும் தெரியாமல் இருக்கிற நீயும்
இரவை விடியச்செய்வது இல்லை

சேமிக்க சேமிக்க
குறைந்து கொண்டே போகின்றன முத்தங்கள்
செலவழிக்க செலவழிக்க
தீர்ந்தபாடில்லை அந்த முத்தங்கள்!

எழுதியவர் : புகாரி (27-Nov-15, 2:43 pm)
பார்வை : 90

மேலே