வயசாச்சுல்ல…

வயசாச்சுல்ல…

இப்படி சொல்லி சொல்லியே நிறைய பேரு ஒரு பிரச்சினையில இருந்த தப்பிச்சுக்கறதும், பொறுப்பை தட்டி கழிக்கறதும், இல்லையின்னா மத்தவங்க அடுத்தவாங்களை இப்படி சொல்லி ஒதுக்கி வைக்கறதும், நம்ம ஊருல நடந்துகிட்டுத்தான் இருக்கு
இருபதில் இருக்கும் சுறுசுறுப்பு முப்பதில் கொஞ்சம் மட்டுப்படுது, அதே நாற்பதுக்கு போகும்போது புத்தி கொஞ்சம் நிதானப்படுது, அம்பதை தொட்டுட்டாலே ‘வயசாயிடுச்சோ’ அப்படீன்னு ஒரு எண்ணம் வந்துடுது. இது நமக்கு மட்டும்தானான்னு பார்த்தா நிறைய பேரு அந்த வார்த்தைய சொல்றாங்க.
ஆனா ஒண்ணை கவனியுங்க, ‘வயசாச்சில்லே’, அப்படீன்னு சொல்றது எப்ப சொல்றாங்கன்னு பார்த்தா, ஏதாவது காரியம் மெதுவா செய்யும்போது சர்வசாதாரணமா அவங்களை பார்த்து இவங்க இந்த வார்த்தைய உபயோகப் படுத்துவாங்க, இதுக்கும் சொன்னவருக்கும் இவருக்கும் வயசுல பெரிய வித்தியாசமிருக்காது,
அதே நேரத்துல நம்மைய ஒருத்தர் இப்படி சொல்லும் போது மனசுக்குள்ள ஏத்துக்க முடியாம் மென்மையா ஒரு கோபம் வரும், இல்லையின்னா, உண்மையிலேயே ‘வயசாயிடுச்சோ’ அப்படீன்னு ஒரு வருத்தம் வரும். “பாக்கறதுக்கு வய்சானவனாட்டம் தெரியறனான்னு அடிக்கடி கண்ணாடியை பார்த்துகிட்டிருப்போம், இல்லாட்டி நண்பர்கள் கிட்ட, உறவுகள் கிட்ட கேட்டுகிட்டு (ரொம்ப நெருங்கினவங்க) இருப்போம்.
புராணக்கதையில் ‘அவரு தவம் இருந்தாரு’, ‘இவரு தவம் இருந்தாருன்னு’ நிறைய படிச்சிருப்போம், கடவுள் தோன்றி உனக்கு என்ன வேணும்? அப்படீன்னு கேட்கும்போது ‘இளமையை’ கொடு அப்படீன்னு நேரடியா கேட்காம சுத்தி வளைச்சு கேட்டதா படிச்சிருப்போம், இதுல இருந்து என்ன தெரியுது? புராணக்கதை எழுதுனவருக்கும் ‘வயசாச்சில்லே’ அப்படீங்கற வருத்தம் இருந்திருக்கும். அதனால கடவுள் மூலமா அதை கிடைக்கறமாதிரி திருப்தியாருந்திருப்பாரோ என்னமோ !
இதை விட இன்னொரு வசதியும் இருக்கு எந்த ஒரு வேலையையும் தட்டி கழிக்கற யுக்தி. அநேகமா அந்த வேலைய மறந்திருப்பாங்க, அல்லது வேணும்னே செய்யாம விட்டிருப்பாங்க, வேலை சொன்னவங்க வந்து கேட்கும்போது அடேடே மறந்துடுச்சு, வயசாச்சுல்லே..
உண்மையிலே சின்ன பசங்கதான் இப்ப அதிகமா மறக்கறாங்க, ஏன்னா அவங்க கிட்ட இருக்கற செல்போனே எல்லாத்தையும் கொடுத்துடுது, இல்லையின்னா கெடுத்துடுது. ‘அதுதான் உலகம்’ அப்படீங்கற அளவுல அவங்க உலகம் ஓடிகிட்டிருக்கு. அப்படி இருக்கும் போது ஏதோ சின்ன வயசுல இருக்கறவங்க ‘ஞாபகமா’ செஞ்சிடுவான்னு சொல்றது சரிப்பட்டு வராதுன்னு தோணுது. காரணம் அவங்ககிட்ட இருக்கற அவசரம், எதையும் சட்டுனு முடியணும்னு எதிர்பார்க்கறது, இன்னும் இருக்குது.
சரி ‘அம்பதை தொட்டு’ தாண்டிட்டோமுன்னு வையுங்க, நமக்கு வயசை பத்தின சிந்தனையே இருக்காது, ஆனா நம்ம கூட இருக்கறவங்க, அல்லது நம்மை போட்டியா நினைக்கறவங்க, நம்மளை சீக்கிரமா ‘மடக்கறதுக்கு’ இந்த வார்த்தைய சொல்லித்தான் மழுங்கடிப்பாங்க. அதான் வயசாச்சுல்லே, முடியலையின்னா கம்முனு இருக்க வேண்டியதுதானே..அப்படீன்னு சொல்லி முடிச்சிடுவாங்க.
ஒரு சில நிறுவனங்கள் வேலைக்கு ஆளை கூப்பிடுவாங்க, அஞ்சு வருசத்துல இருந்து பத்து வருசம் அனுபவம் இருக்கணும், ஆனா வயசு இருபத்தி அஞ்சுல இருந்து முப்பதுக்குள்ளதான் இருக்கணும். அவன் படிச்சு முடிக்கவே இருபத்தி ஒண்ணு அல்லது இரண்டு ஆயிடும், அதுக்கப்புறம் ஒரு வேலை கிடைக்க இரண்டு மூணு வருசம் போராடணும், கிடைச்ச வேலையை தொடர்ந்து தக்க வச்சுக்கறதுக்குள்ளயே ஏகப்பட்ட சிக்கல், இப்படி இருக்கும்போது…அவனுக்கு வயசு முப்பதுக்குள்ளன்னா எப்படி? அனுபவம் கூட வேணும்னா வயசைய அதிகப்படுத்தி வேலைக்கு ஆளை கூப்பிடுங்களேன்.
இன்னொன்றும் இருக்குது, அதுவும் அம்பதுக்கு மேல இருக்கறவங்க ஒரு “சளி காய்ச்சல்னு” பக்கத்துல இருக்கறவங்ககிட்டே சொல்லிட கூடாது, அவங்க சுலபமா நமக்கு வைத்தியம் சொல்லிடுவாங்க, அதுதான் அந்த வார்த்தை வைத்தியம்தான் “வயசாச்சுல்லே”, இனிமேல் அப்படித்தான்னு.
இப்படி சுத்து முத்தும் வயசாச்சுல்லே, வயசாச்சுல்லேன்னு சொல்லியே நம்மளை ஓய வைச்சிடுவாங்க. இதுக்காகவே வயசு அதிகமாகறவங்க தன்னைய இளமையா காட்ட தன்னோட தோற்றத்துல சில மாற்றங்களை செஞ்சுக்கறாங்க.
இருந்தும் அதை எல்லாம் மீறி இன்னைக்கு எண்பது வயசுக்கு மேல இருக்கறவங்க கூட எத்தனையோ சாதிக்கறாங்க, சாதிச்சுகிட்டு இருக்கறாங்க, அதுக்கு முத காரணம் இந்த வார்த்தைய அதிகமா உபயோகப்படுத்தாத வங்களை ‘அண்டவிடாம’ இருந்திருப்பாங்க அப்படீன்னு நினைக்கிறேன்.
இருந்தாலும் “வயசாச்சுல்லே” அப்படின்னு நினைச்சுக்கறது தனக்கு தானே நாம நினைக்கறது கூட ஒரு தாழ்வு மனப்பான்மைதான்.
இதுல இன்னொரு செய்தியும் சொல்லிடறேன் இறையன்பு அவர்கள் எழுதிய “சாகாவரம்” நாவலை வாசிச்சிருகேன். அது ஞாபகம் வருது.
அற்புதமா எழுதியிருக்காரு. சுருக்கமா “தன்னை சுத்தி இருக்கற ‘நண்பர்கள்’ ‘உறவுகள்’ இளமையில, ‘சட்டு சட்டுன்னு’ இறந்து போறதை பார்த்த கதையின் நாயகன் “சாகா வரம்” வேண்டி நகரம், காடு, மலை இப்படி அலைஞ்சு கடையில ஒரு ‘ஞானிகிட்ட’ போய் சேர்ந்து அவர் கொடுத்த ஓலைச்சுவடிகளை படிச்சு (பாதி படிச்சுட்டு) ஞானி கூட இருக்கறப்ப அவர் இறந்துடறதும், அவரை நல்லபடியா அடக்கம் பண்ணிட்டு மறுபடியும் ஓலைச்சுவடியில் சொல்லியிருந்த “சாகா வரம்” இருக்கற இடத்தை நோக்கி பயணப்படறாரு.
கடைசியில…!
கதையின் முடிவுல அவர் சொல்ல வந்த கருத்து அப்படியே மனசுல போய் உக்காருது.
கதாநாயகன் ரொம்ப கஷ்டப்பட்டு (சொல்லொண்ணா துயரம்) கடைசியில அங்க போய் சேர்ந்தப்ப, அவரை பார்த்துட்டு முதல்ல ஒடி வந்த ஒருத்தர் “இங்க வராதே’ அப்படீன்னு கத்துறாரு, ஆனா அதை அலட்சியம் பண்ணி அங்க போய் சேர்ந்துடறாரு, கதையின் நாயகன்….ஆனா…!
அங்க ஏற்கனவே கொஞ்சம் பேர் இருக்கறாங்க, அவங்க யாருமே சந்தோசமாவே இல்லை.
அப்புறம்தான் அவங்ககிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா விசயம் வருது. “அந்த இடத்துலஇருக்கறவங்க யாருமே சாகவே மாட்டாங்க” ஆனா உங்களுக்கு,இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் எதுமே இருக்காது, மறந்துடுவீங்க, ஏன்னா காலங்கள் இருந்தாத்தானே வயசு ஏறுதுன்னு தெரியும், அதனால எதுவுமே இருக்காது. திடீருன்னு யாராவது நம்ம கதையின் நாயகன் போல உள்ளே வரும்போது முதல்ல அந்த முகத்தை பார்க்கறவங்களுக்கு, அவங்களோட பழைய ஞாபகம் வரும், அதுவும் கொஞ்ச நேரம், அப்புறம் மறைஞ்சிடும்.
பசியில்லை, தூக்கமில்லை, உணர்ச்சிகள் இல்லை,ஆக மொத்தம் எதுவுமே இல்லை. ஆனா யாருக்கும் மரணமே கிடையாது.
இதுனால அங்கிருக்கறவங்கள்ள சில பேரு “ஐயோ எங்களுக்கு சாவு,நோவு, துக்கம் எல்லாம் அனுபவிக்கற மனுச வாழ்க்கைதான் வேணும்னு தப்பிக்க முயற்சி பண்ணுனாலும், அந்த இடத்தை சுத்தி இருக்கற நதி மீண்டும் அங்கயே கொண்டு போய் விட்டுடும்.
கடைசியில கதாநாயகனும் தன்னை மறந்து (இறந்த, நிகழ், எதிர்காலம்) அதே மாதிரி எந்த உணர்வுமில்லாம அந்த இடத்தில மாட்டிக்கறான்.

இதுக்கும் வயசாச்சுல்லே.., அப்படீங்கறதுக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க நினைக்கலாம்.
குழந்தை, பாலகன்,சிறுவன், இளைஞன்,முதியவன், அடுத்து மறைவு இதுபாட்டுக்கு இயற்கையா போய்கிட்டே இருக்கட்டுமே. இதுக்குள்ள நாம படற துயரம், மகிழ்ச்சி, காதல், குழந்தை, அடுத்து அடுத்து என அனுபவித்து போய் சேர்வதில்தான் மனித வாழ்க்கை தத்துவம் இருக்கு.
இதுதானே எல்லா உயிர்களுக்கும் இறைவன் வச்சிருக்கற நியதி. நாம மட்டும் இதுல என்ன விதி விலக்கு,
விடுங்க சார்.. வயசாச்சுல்லே’ இந்த வார்த்தைய கண்டுக்காம கடந்து போவோம்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Nov-24, 11:42 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 22

சிறந்த நகைச்சுவைகள்

மேலே