மழை என்ன செய்தது பிழை

வான் கிழித்து
நிலம் குதிக்கும்
நெடுமழை!
அடர் மழை!
இன்றளவும் தொடர் மழை!

மாதம் மும்மாரி பெய்த நிலத்தில்
வருடம் மும்மாரி பெய்தாலே
எங்கும் வெள்ளச்சேதம்
ஏழைகளுக்கு உள்ளச்சேதம்


வடிகால் அடைத்து
வளாகங்கள் கட்டிவிட்டால்...
ஏரிகள் தூற்று
ஏரியாக்கள் ஆக்கிவிட்டால்...
காரி உமிழாதோ மாரி!
மழை...
ஊறி மிதக்காதோ, வேளச் சேரி!!


இருப்பிடம் இழந்து
போக்கிடம் தெரியாமல் புலம்புவது
மக்கள் மட்டுமல்ல
மழையும் தான்!


நீங்கள் வாழ்வதற்காக
தன்னையே
நிலம் புதைக்கும் மழை!
என்ன செய்தது பிழை!!


விருந்தினரைப்போல்
வரவேற்கப்படவேண்டிய மழையை
அகதியைப்போல்
அலையவிட்டது
யார் குற்றம்?


பணம் செய்ய
மழை நடக்கும்
பாதை அடைத்த
பெருமுதலாளிகள் குற்றம்!


நாற்பது விழுக்காடு,
ஐப்பது விழுக்காடு,
கமிசனுக்காய்...
நிலமகளை
தனியார்களுக்கு
தாரைவார்த்துக் கொடுத்த
அறம் பிழைத்த
அரசியல்வாதிகளின் குற்றம்!


ஐந்தாக,
இரண்டாக,
விரிவது விரலல்ல...
வலையென்று அறியாமல்
கோட்டையில் அமரவைத்து
தான் மட்டும்
குடிசையிலே தூங்கிவிட்ட
அப்பாவி வாக்காளர்களின்
அளப்பரிய குற்றம்!


நீங்கள் வாழ்வதற்காக
தன்னையே
நிலம் புதைக்கும் மழை!
என்ன செய்தது பிழை!!

- தஞ்சாவூரான்

எழுதியவர் : கவிஞர், தஞ்சாவூரான் (28-Nov-15, 11:13 am)
பார்வை : 110

மேலே