சிரிப்பே நல்ல மருந்து தான் - முனைவர் செ சைலேந்திர பாபு, ஐபிஎஸ்
சிரிப்பே நல்ல மருந்து தான்!
நன்றி – முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.
குழந்தை ஒரு நாளில் 400 முறை சிரிக்கிறது. பருவ வயதை எட்டியவர்கள் 17 முறை சிரிக்கிறார்கள். பல பெரியவர்கள் ஒரு முறைகூட சிரிப்பதில்லை. சிரிக்காமல் இருப்பது கற்பிக்கப் பட்ட பழக்கம் என்றே கூறலாம்.
மன அழுத்தம் ஏற்படுவதற்கான ஒரு காரணம் சிரிக்காமல் இருப்பதே ஆகும். சிரித்து வாழ்ந்தால் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. சிலர் உயர்ந்த பதவியில் இருப்பதால் சிரிப்பதில்லை. சிரித்தால் அவர்களது கௌரவம் குறைந்து போய்விடும் என்று நினைக்கிறார்கள். காவலர்களைப் பார்த்து நான் சிரிப்பேன். அப்போது அவர்கள் சிரிக்கத் தயங்குவார்கள். திருப்பிச் சிரிப்பதா வேண்டாமா, பெரிய அதிகாரிகளைப் பார்த்து சிரிப்பதா என்ற சந்தேகம் அவர்களுக்கு வரும். என்னிடம் பழகிய பின்னர் மனம் விட்டுப் புன்னகை புரிந்து விடுவார்கள்.
நமது மனநிலையின் தன்மைக்கேற்ப உடலில் வேதியில் மாற்றங்கள் நிகழ்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு வாகனம் நம்மை நோக்கி மோத வருகிறது என்றால் நாம் பயந்து வேர்த்து விடுகிறோம். டாக்டர் ஓர் ஊசி போடும் போது கூட பதட்டம் அடைந்து உடலையே இறுக்கி கொள்கிறோம். ஆனால் ஒரு குண்டூசி கையில் குத்திவிட்டால் அவ்வளவு இறுக்கம் இல்லை.
வரும் ஆபத்தைப் பற்றிச் சிந்திப்பதால் மூளையில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது மனிதனின் பரிணாம வளர்ச்சியில், புலி துரத்தும் போது ஓடவும், புலியை எதிர்த்துப் போராடவும் ஏற்பட்ட வேதியியல் மாற்றங்களாகும். ஆதி மனிதர்கள் இதுபோன்ற ஆபத்துகளை எப்போதாவது ஒருமுறை சந்தித்திருந்தனர்.
ஆனால், இந்த நவீன உலகில் மன உளைச்சல் தினமும் பலமுறை ஏற்படுகிறது. அடிக்கடி இது போன்ற வேதியல் மாற்றத்திற்கு உள்ளாகிறோம். நோய்வாய்ப்படுதல், தொழில் நட்டம், கணவன் மனைவி சண்டை, பிள்ளைகளின் ஊதாரித்தனம், கடன் தொல்லை போன்ற நிகழ்வுகள் மனிதனின் உடல் வேதியல் மாற்றங்களை ஏற்படுத்துகிறன்றன. இதனால் மகிழ்ச்சி போய்விடுகிறது. உடல் நலம் கெடுகிறது. உடல் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.
எனவே, எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்க பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதையும் மீறி மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்றால், மனவருத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதை உடனே களைய வேண்டும். நல்ல எண்ணங்களுடனும், நல்ல மனப்பான்மையுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பவர்களுக்கு உடல்நலம் நன்றாக இருக்கும். முதுமை எளிதில் வந்துவிடாது.
சிரிப்பே ஒரு நல்ல மருந்து என்பது பழமொழி. சிரிப்பதால், உடல் நல்ல வேதியல் மாற்றங்கள் ஏற்பட்டு நமது இறுகிய தசைகள், தளர்கின்றன. சிரிக்கப் பயன்படும் தசைகள் முகத்தைத் தளரச் செய்கின்றன. வாய்விட்டுச் சிரிக்கும்போது எடுக்கும் ஆழ்ந்த சுவாசம் நுரையீரலை விரியச் செய்கிறது. இதன் மூலம் உடல் ஆக்ஸிஜன் அதிகம் வினியோகிக்கப் படுகிறது. சிரிக்கும்போது நமது மூளையில் Endorphin என்ற திரவம் சுரக்கிறது. இது நம்மை அதிக நேரம் மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்கிறது. மன அழுத்தம் நீங்கிவிடுகிறது.
.
நகைச்சுவைகளை ரசியுங்கள்
மற்றவர்களைப் பார்த்து புன்னகை புரிவதையே சிரித்தல் என்றேன். வாய்விட்டு சிரிப்பதும் நல்ல மருந்துதான். அன்றாடம் பத்திரிக்கைகளில் நகைச்சுவைகள் வெளியாகின்றன. அவற்றையும் படித்து வாய்விட்டுச் சிரிக்கலாம்.
மகாத்மா காந்தியே நகைச்சுவையை விரும்பி இருக்கிறார். “எனது வாழ்க்கையில் நகைச்சுவை இல்லை என்றால் நான் எப்போதோ இறந்து போயிருப்பேன்” என்றார் அவர்.
.
சமீபத்தில் நான் கேட்ட சில நகைச்சுவைகள்
புவியியல் ஆசிரியர் ஒருவர், உலக வரைபடத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு, ஒவ்வொரு நாட்டையும் காட்டுகிறார். அப்போது அந்த உலக வரைபடம் கீழே விழுந்து விடுகிறது. ஆசிரியர் அதைக் காலால் மிதித்து விட்டார். ஒரு மாணவர் ஆசிரியரைப் பார்த்து “சார்” என்றான். “என்ன?” என்று கேட்டார் ஆசிரியர். ”இந்த உலகமே உங்கள் காலடியில்” என்றான் மாணவன். வகுப்பில் உள்ள அனைத்து மாணவரும் சிரித்துவிட்டனர்.
ஒரு தொடக்கப்பள்ளி முதல் வகுப்பில் ஆசிரியர் ஒருவர் ‘சொர்க்கம்’ என்றால் என்ன என்பது பற்றியும், ‘நரகம்’ என்றால் என்ன என்பது பற்றியும் விளக்கினார். பின்னர், யார் யார் என்னுடன் சொர்க்கத்திற்கு வருகிறீர்கள் என்று கேட்டார். ஒரு சிறுமியைத் தவிர அனைத்து குழந்தைகளும் கைகளைத் தூக்கினர். அந்த மாணவியிடம் ஆசிரியர் “நீ சொர்க்கத்திற்கு ஏன் வரவில்லை?’ என்று கேட்டார். அதற்கு அச்சிறுமி “எங்கம்மா பள்ளியிலிருந்து நேராக வீட்டிற்குத்தான் வரவேண்டும், வேறு எங்கும் போகக்கூடாது என்று சொல்லியிருக்காங்க” என்றாள்.
.
வாய்விட்டுச் சிரிப்பது, புன்சிரிப்புப் போல் நோய் தடுக்கும் சக்தியைத் தரும் ஒரு யுக்திமுறையாகும்.
.
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்
தெரியாது என்று சொல்வதற்கும் கிடையாது என்று சொல்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது.
# தெரியாது என்றால் எனக்கு தெரியவில்லை என்று அர்த்தம்.
# கிடையாது என்றால் இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் அறிந்த நானே கூறுகிறேன் அப்படி ஒன்றும் கிடையாது என்று அர்த்தம்.
எனவே நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
.
‘கஷ்டம் யாருக்குத்தான் இல்லை. உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு’
.
"யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்.
சுதந்திரமாக வாழ்வதற்குரிய ஒரே தகுதி இது தான்."
.
"பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான்"
.
“பணம் இருந்தால் உன்னையே உனக்கு தெரியாது
சேவை குணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது”