தந்தை பெரியார் - சுயமரியாதை சுடரொளி

தடிஊன்றி அடிபதித்த தன்மானத் தலைவன்
தலைநிமிர வைத்த திராவிட இயக்கமவன் !
சமத்துவம் உருவாகிட சமூகத்தை உழுதவன்
சமதர்மம் காத்திட நடைபயணம் கண்டவன் !

சுயமரியாதை பாதையில் சுழன்ற சுடரொளி
சுயசிந்தனை வென்றிட களம்நின்ற போராளி !
பகுத்தறிவு கொள்கைக்கு வித்திட்ட விவசாயி
பதமறிந்து பழகுவதற்கு விதமறிந்த விசுவாசி !

குனிந்த சமூகத்தை நிமிரவைத்த வல்லவன்
தள்ளியே நின்றவரை அள்ளி அணைத்தவன் !
மனிதரில் பாகுபாடு சாதியெனும் வேறுபாடு
மனதிலே அகன்றிட மண்ணிலே பிறந்தவன் !

முடியாத நிலையிலும் விடியாத மக்களுக்கு
மடிகின்ற நேரம்வரை போராடி மறைந்தவன் !
மரணத்தின் வாயிலிலும் பிரியும் நொடியிலும்
மாறிவிட்ட சமுதாயம் மலர்ந்திட துடித்தவன் !

பதவிஎனும் பட்டாடை தவிர்த்த பரந்தமனம்
உதவியென வந்தோரை மகிழ்வித்த மனம் !
ஈடில்லா குணமுள்ள ஈரோட்டு சிங்கமவன்
தரணியே போற்றிடும் தமிழரின் தங்கமவன் !

எளிமையான உரையால் உலகையே கவர்ந்தவன்
ஏற்றுக்கொண்ட கொள்கையில் சிகரம் தொட்டவன் !
முப்பொழுதும் சிந்தித்தவன் இப்பொழுது இல்லை
எப்பொழுதும் வாழ்வான் தமிழர்களின் நெஞ்சில் !


பழனி குமார்
01.12.2015

எழுதியவர் : பழனி குமார் (1-Dec-15, 2:47 pm)
பார்வை : 2661

மேலே