மழை கவிஞர் இரா இரவி

மழை ! கவிஞர் இரா .இரவி !

தலைநகரை
தண்ணீர் நகராக்கியது
மழை !

நகரத்தை
நரகமாக்கியது
மழை !

பொய்த்தும் வாட்டியது
பெய்தும் வாட்டியது
மழை !

ஏழைகளை வாட்டியது
இன்னலில் ஆழ்த்தியது
மழை !

சாலையை எரியாக்கியது
ஏரியில் இடமில்லாததால்
மழை !

சாலைகளை வழியாக்கியது
நீர்வழிகளை அடைத்ததால்
மழை !

காலை வாரியது
தூர் வாராததால்
மழை !

உண்மையாக்கியது
சிறுதுளி பெருவெள்ளம்
மழை !


ஏழைக்குடிசைகள் மட்டுமல்ல
மாளிகைகளும் மூழ்கியது
மழை !

பேராசை மனிதர்களுக்கு
பாடம் புகட்டியது
மழை !

உணர்த்தியது
உண்ண முடியாது பணத்தை
மழை !

பணக்காரர்களுக்கும் உணர்த்தியது
பசியின் கொடுமையை
மழை !

புகட்டியது
பாசம் நேசம்
மழை !

சூறையாடியது
சொத்தின் ஆசையை
மழை !

வசதியானவர்களுக்கும் காட்டியது
வாழ்வின் நிலையாமையை
மழை !

பிறர் ஆட்டங்களை நிறுத்தி விட்டு
தான் ஆட்டம் போட்டது
மழை !

சிறிய ரொட்டியையும்
உயிர் காக்கும் அமுதாக்கியது
மழை !

வெளியேற முடியாமல்
சிறை வைத்தது
மழை !

சோதிடன் சொல்லவில்லை
சோதிடனும் மூழ்கினான்
மழை !

பெய்தது போதும் போதும்
பெய்யென வேண்டுகையில் வா
மழை !
.
.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (3-Dec-15, 6:28 pm)
பார்வை : 134

மேலே