தேவதைகள் தூங்குகிறார்கள் _ பாகம்_12
அப்போது....சட...சட வென துப்பாக்கிச் சத்தம் கேட்டது....
அந்தக் கட்டிடத்தை போலீஸ் சுற்றி வளைத்திருந்தது....
(தொடரும்......)
பாகம் 12
துப்பாக்கிச் சத்தம் கேட்டதும், கூட்டத்தில் இருந்த ஒருவன் வெளியில் எட்டிப் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட கத்தினான்....
`அய்யய்யோ.... ஓடிடுங்கடா.... துப்பாக்கியோட நூறு போலீஸ்க்கு மேல இருக்காங்க.....நாம செத்தோம்...` சொல்லிக்கொண்டிருக்கும் போதே கடத்தி வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்த அனைவருமே தப்பித்து ஓடுவதை விஷாவால் உணர முடிந்தது.
விசாந்தினி நல்லபடியாக மீட்கப்பட்டாள்.
******
விஜி, விஷாவின் கைவிரல்களோடு தன் கைவிரல்களையும் சேர்த்துக்கொண்டான்.
விஷாவின் பதட்டத்தை நன்றாக உணரமுடிந்தது அவனுக்கு.
இயக்கத் தோழர்கள் விஷாவை, விஜியிடம் கொண்டுவந்து சேர்த்தனர்.
அவனின் தலைமறைவு வாழ்க்கை, அவளுக்கு அவன்மீது வெறுப்பு எதனையும் விதைக்கவில்லை.
மாறாக, அவன் மீது இன்னும் அதிகமான நம்பிக்கையையே கொடுத்தது. விஷா அவன் பேரில், இன்னும் உறுதி கொண்டாள். இன்னும் காதலானாள். இன்னும் அன்பானாள்.
ஆனால், காவல் நிலையமும், நீதிமன்றமும் அவளைக் கலவரப்படுத்தியிருந்தது. சித்தப்பாவின் சொத்தின் மீதான ஆசை அவளுக்குத் தெரியும்தான் என்றாலும். அந்த சொத்துக்காக இந்த அளவிற்கு செல்லுவார் என்று அவள் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.
தன் சித்தப்பாவின் திட்டம் முழுவதையும் அவள் போலீஸிடம் தெளிவாக விளக்கியிருந்ததால் அன்றிரவே அவளின் சித்தப்பா கைது செய்யப்பட்டார்.
போலீஸ் அவளை மீட்டுச் சென்ற இரவு, காவல்துறையின் வழக்கு தொடர்பான நடவடிகைகள் முடித்த பின்னர், பெண் காவலர்கள் உதவியுடன் ஒரு மகளிர் விடுத்திக்கு இரவு தங்க வைக்க அனுப்பி வைத்தனர்.
மறுநாள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவளிடம் வாக்கு மூலம் பெற்றார்கள்.
நடந்த சம்பவம் முழுவதையும் சொன்னாள்.
விஜி தொடர்பான அவளது வாக்குமூலத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.
விஜியும் அவளடைய சொத்துக்களை அபகரிக்கவே அவளைக் காதலிப்பதாக நடிப்பதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவள் மறுத்தபோது, நீதிமன்றம் அந்த மறுப்பை ஏற்கவில்லை.
இரண்டு மாதகாலத்திற்குள் விஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் . அதற்குள், இந்த வழக்கு தொடர்பான விரிவான புலன் விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்திரவிட்டது.
அப்போது நீதிபதியிடம் விஷா... அவர் ஆஜராக தானும் உதவி செய்வதாகவும், ஆனால் அவர் உயிருக்கு எந்தவிதத்திலும் போலீஸால் பாதிப்பு ஏற்படாதிருக்க இந்த நீதிமன்றம் உத்திரவிட வேண்டும் என வேண்டினாள்.
அவள் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம். போலீஸிடம் அதற்கான உத்திரவாதத்தினைப் பெற்றது.
அப்போதுதான் விஷா நிம்மதியானாள்.
இப்போது அவளின் பதட்டமெல்லாம், மறுபடியும் விஜியைப் பிரியப் போகிறோமே என்பது பற்றிதான். அவன் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
போலீஸில் ஒப்படைத்தால், அவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பார்கள், நீதிமன்றம் சிறையில் அடைக்கும், உடனே பிணை கிடைக்கும் என்று சொல்லிவிடமுடியாது. மாதக்கணக்கில் ஆகலாம்.
விஜி புரட்சிக்காரன்தான் ஆனால் தீவிரவாதி இல்லை. ஆனால் காவல் துறை இன்னமும் இவனை தீவிரவாதியாகத்தான் பார்க்கிறது.
அன்று தான் காவல் நிலையத்தில் இருந்தபோது கூட, தன்னிடம் விஜி பற்றிய அவர்களின் விசாரணை அப்படித்தான் இருந்தது. இவனைப்பற்றிய எனது வார்த்தைகளை அவர்கள் கேட்பதாகவே இல்லை. மாறாக இவன் தன்னை ஏமாற்றப் போவதாகவே சொன்னார்கள். தங்களின் காதலையும் கொச்சைப் படுத்தினார்கள்.
இந்த நிலையில் நான் எப்படி இவனை மீட்கப்போகிறேன்....? காதல் வாழ்க்கையைத் துவங்கப் போகிறேன்.? இனி இவன்தான் எனக்கு எல்லாமுமாக இருக்கப்போகிறான். அதற்கு நான் எததணை காலம் காத்திருக்க வேண்டும்?
இங்கே... பொது இடத்தில் ஒருவன் தனக்குப் பசிக்கிறது என்று சொல்வதே புரட்சி என்றுதானே கற்பிதம் செய்யப்படுகிறது. இவன் மற்றவர்கள் பசி பற்றியும் பேசியதால் தீவிரவாதி என்று சொல்கிறார்கள்.
எங்கள் மென்பொருள் துணையில் ஹெச்.ஆர். மேனேஜரைவிட ஒரு தீவிரவாதி இருந்துவிட முடியுமா..?
மாற்றுக் கருத்து தீவிரவாதம்... மாற்றுக் கருத்து புரட்சி என்றால்... இனி இயந்திரங்களைக் கொண்டே மனது இல்லாத மனிதர்களை உருவாக்கிக் கொள்ளட்டும்....
விஷா இப்படியாக நினைக்கத் தெரிந்தவள் இல்லை. இப்படியான சிந்தனையும் அவளுக்கு இருந்ததில்லை. ஆனால் விஜி மீதான காதல் அவ்வாறான சிந்தனைகளை அவளுக்குள் விதைத்துள்ளது.
விஜி அவளை ஆறுதல் படுத்தினான்.
விஷா அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள். ஆறுதலாக இருந்தது. அப்படியே இருக்கவேண்டும் போலிருந்தது. ஆனால், நீதிமன்ற உத்திரவு அவளைத் துரத்திக்கொண்டே இருந்தது.
`விஜி.... இன்னும் ரெண்டு நாள் கழிச்சி, நீ சரண்டர் ஆகலாமே...`
`இல்ல.... விஷா... போலீஸ்ல நான் சிக்கினா... வேற மாதிரி சிக்கலாகிடும்... இனி, நீதிமன்றம் உன்ன நம்மாமப் போயிடும்... இந்த சிக்கல்ல இருந்து நான் தப்பிக்க, எனக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு நீ நீதிமன்றத்துல எனக்கு ஆதரவா வாங்கின உத்தரவுதான், அத கெடுத்திர வேண்டாமே....`
`அதுவும் சரிதான்.... போலீஸ்டேசன் தானே போற..?`
`இல்ல...இல்ல அது பெரிய தப்பு... நான் நீதிமன்றத்துல தான் சரண்டர் ஆகப்போறேன்... எங்க இயக்கத் தோழர்கள் வழக்கறிஞரை ரெடி பண்ணிட்டாங்க... நீ கவலைப்படாம இரு, நான் சீக்கிரம் வந்திடுவேன்... அதுவரைக்கும் இந்த புத்தகத்தை படிச்சிக்கிட்டு இரு, உனக்கு தெம்பாக இருக்கும்` என்று சொல்லி ஒரு புத்தகத்தைக் கொடுத்தான்.
அதன் தலைப்பு... `சேகுவேராவின் வாழ்வும், வரலாறும்..` என இருந்தது.
*********
காதல் மகா சமுத்திரத்தைவிட மேலானது.
எப்போது ஆர்ப்பரிக்கும் எப்போது அடங்கிப்போகும் என்பது பல நேரங்களில் நம் கணிப்பைவிடவும் மாறாய் அமைந்து விடுவதுண்டு.
கடல் பற்றிய அபிப்ராயம் அவரவருக்கு மட்டும் சொந்தமானது, அவரவர்களின் அபிப்ராயம் கடலைப்பற்றிய முழுமையான வடிவமாகவோ அல்லது அதன் தீர்க்கமான இயல்பை வெளிப்படுத்துவதாகவோ அமைந்துவிடாது.
கடல் பற்றிய எனது பார்வையையும் மற்றவர் பார்வையையும் யாரால் ஒப்பிட்டு விடமுடியும்..?
கடலின் தூரத்தையும், ஆழத்தையும், பரப்பையும் விஞ்ஞானம் கணித்துவிட்டது. ஆனால் காதலை?
கலாப்பிரியா சொன்னது போல்... `காதலைக் காதல் என்றும் சொல்லலாம்..` என்று நல்ல பிள்ளையாக , ஒரு கடலினை தூரமாய் நின்று வேடிக்கை பார்ப்பதோ.... ஆவலில் அதன் அலையில் கால் நனைத்து வருவதோ... கொஞ்சம் படகில் ஏறிப் பயணிப்பதோ... அல்லது தைரியத்தில் மூச்சு நிற்கும்முன் மூழ்கி வெளி வருவதோ அவரவர் விருப்பம்...
ஆனால் நான் காதலை முழுவதும் அறிந்தவன் என்பதோ அல்லது காதலின் இலக்கணத்தைச் சரியாக சொல்லிவிடமுடியும் என்ற தலைக்கணம் கொள்வதோ... சிறுபிள்ளைத்தனமாக ஆகிவிடும்.
விஜியும் சரி... அவனின் ஜப்பான் மூக்கழகி விஷாந்தினியும் சரி பதின்பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தான்... காதல் பேரலையின் சிறு தூரல்கள் தெறித்த போதெல்லாம்... சிறு புன்னகையில் கடந்து வந்தவர்கள் தான்.
எதிர் பாலினங்களின் அருகாமையும், பார்வையும் எப்போதுமே காதலைத் தந்துவிடாது .
காதலுக்கான செடி எல்லோருக்குள்ளும் கிளைப் பரப்பி மூடிய மொட்டுக்களுடன் விரிந்து கிடக்கும்...
எவன் பார்வையோ , எவள் பார்வையோ பட்டதும் பூத்துவிடாது.
எந்தப் பார்வைக்குப் பூக்க வேண்டும் என்பது, செடிக்குத் தோன்ற வேண்டும், மொட்டுக்குத் தோன்ற வேண்டும்.....
சென்னை மென்பொருள் வளாகம், கொஞ்சமாய் இயல்பும்... பெருவாரியாய் வணிகமும் சேர்ந்த காதலின் சந்தை. ஆனால், அந்த சந்தையில் கூட விஷாவின் காதல் மலர்கள் பூக்கவில்லை. காதல் பூக்க செலுத்தப்பட்ட ஆயிரமாயிரம் பார்வைகளுக்கும் அடிபணியாத அம்மொட்டு.... விஜியின் ஒற்றைப் பார்வையில் செடி மொத்தமுமாக பூத்துக்குலுங்கி விட்டது.
காதலுக்கான செடி விதைப் போட்டு வளர்க்கப்படுவதில்லை... வளர்ந்த செடியை பூப்பூக்க வைப்பது.
ஒரு புரட்சிக்காரனுக்கும், அந்த இரவில் காதல் பூப்பதாக இருந்திருக்கிறது. பூத்தும் விட்டது.
காதலை அறிவித்த தேதிக்கும் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட தேதிக்குமான கால அளவைக் கொண்டே இங்கே காதல் மதிப்பிடப்படுகிறது.
அப்படியில்லை என்று மறுக்கும் மற்றுமொரு வகையான காதலே இவர்கள் இருவருக்குள்ளும் பூத்திருந்தது.
விஜி நீதிமன்றத்தில் சரண்டர் ஆன போதும், அவனை விராரிக்க போலீஸ் காவலில் எடுத்த போதும், மறுபடியும் சிறையில் அடைக்கப்பட்ட போதும், நினைவாகவும், நிழலாகவும் , நிஜமாகவும் அவனுடனேயே இருந்தாள்.
அப்பா இறந்ததற்கான காரியங்கள் முடிக்கப்பட்ட பின்னரும் சில உறவினர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டார்கள்.
அவர்கள் எவ்வளவு ஆறுதலாக இருந்தாலும்... விஜியின் நினைவுகளும், அவன் மூச்சுக் காற்றின் அருகாமையுமே, அவளுக்கு அவசியமாக இருந்தது.
கடந்த இரண்டு மாதத்தில் வாரம் தவறாமல் சிறைக்குச் சென்று சந்தித்துவிட்டு வந்தாள்.
வலைக் கம்பிகளின் வழியே வந்த அவன் மூச்சுக்காற்றின் வெது வெதுப்பை விரல்களின் வழியே தவறாமல் வாங்கிக்கொண்டு வந்து அவன் கொடுத்த புத்தகத்துக்குள் சேர்த்து வைத்தாள்.
இந்த இரண்டு மாதத்தில் அந்தப்புத்தகத்தை ஆறு முறைக்கு மேல் படித்து முடித்திருந்தாள்.
படிக்கும் போதும், படித்த பின்னரும் தன்னை `ஹில்டா` வாக கற்பனை செய்து கொண்டாள்.... தோழர் `சே..` வை கியூபாவுக்கும், பொலிவியாவுக்கும் ஹில்டா அனுப்பி வைத்துவிட்டு காத்திருந்தது போல் தான் விஜியை சிறைக்கு அனுப்பி வைத்துவிட்டு காத்திருப்பதாக கற்பனை செய்து கொண்டாள்.
தோழர் `சே` மனைவி ஹில்டாவின் தியாகம் பெரியது, அதைவிட `சே`வின் தியாகம் பெரியது. இருந்தும், விஷாவுக்கு இப்போதைக்கு அந்த ஒப்புமையே மன நிம்மதியையும் தைரியத்தையும் தந்தது.
சிறையில் அவனுக்கான உணவு நேரத்தைத் தெரிந்து வந்து, அதையே தனக்கான உணவு நேரமாகவும் மாற்றிக்கொண்டாள்.
வீட்டின் உறவினர்களும் அவளின் நிம்மதிக்காக வேறு வழியின்றி தங்களையும் மாற்றிக்கொண்டிருந்தனர்.
விஜியை மறக்க வைக்க அவர்கள் எடுத்த அத்தணை முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை என்றானபோது, அவர்களுக்கும் இதைத் தவிர வேறுவழியில்லாமல் போனது.
*******
அவனுக்காக... அவன் பறித்துக் கொடுக்கும் பூக்களைக் கோர்த்துச் சூட்டிக்கொள்ள என்றே, வீட்டில் ஒரு மல்லிகைச் செடியை அன்றே நட்டுவைத்திருந்தாள்...
விஷாவுக்கு மல்லிகைப்பூ என்றால் அவ்வளவு ஆசை. அதற்காகவே அதை நட்டுவைத்தாள். விஜிடனான முதல் சந்திப்பின் போதே, அவனிடம் பூ வாங்கித்தரக் கேட்டாள், அவனும் கூட சற்று ஆச்சர்யப்பட்டும், திகைத்தும் போனான்.
அவனை ஒவ்வொரு நாளும் காதலால் திகைப்பூட்ட வேண்டும் என்று அப்போதே நினைத்திருந்தாள்.
ஆனால், அவன் வருவதற்குள், இது மொட்டுவிடத் தொடங்கியிருக்கிறது...
விஷாவுக்குள் ஒரு தவிப்பு வந்துவிட்டது.
முதல் பூவிலிருந்தே அவன் பறித்துக் கொடுக்க, தான் பூக்களைக் கோர்த்துச் சூட்டிக்கொள்ள ஆசைப்பட்டிருந்த வேளையில் ஏன் இந்தச் செடி அவசரப்பட்டு மொட்டுக்களை விட்டிருக்கிறது..?
காதல் கடல் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது.
முதல் பூவுக்கு அவன் வரவேண்டும்.
விஜி உடனே வெளியில் வரவேண்டும்.... அதற்கான அதிகபட்ச முயற்சியை எடுத்துவிடுவது என தீர்க்கமாக முடிவு செய்துவிட்டு கைபேசியை எடுத்தாள்...
இயக்கத்தின் தலைமைத் தோழர் எதிர்முனையில்.... ` ஹலோ...` என்றார்.
(தொடரும்......) *
*(கதையை தொடர விரும்புவோர்... தோழர் கவிஜியை தொடர்பு கொள்ளவும்...)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
