ஒரு ஆத்மா அழுகிறது

அந்த நாள்(25.07.2012)
என் வாழ்வின் மிக
முக்கியமான நாள் - அன்று
என் வீட்டில் பந்தல் போடப்பட்டிருந்தது,
வாழைமரங்களும் கட்டப்பட்டிருந்தன,
மேளங்கள் கூட முழங்கிக்கொண்டிருந்தது,
ஊரெங்கும் எனக்கான
சுவரொட்டிகள் ஒட்டபட்டிருந்தன..

என் நண்பர்களும்
உறவினர்களும்
ஒன்று சேர்ந்து வந்திருந்தனர்
என் வீட்டிற்கு...!
ஏதோ விஷேசம் என எண்ணினேன்..!

ஆனால்..,
புன்னகை மட்டுமே பூத்திருக்கும்
என் நண்பர்கள் முகத்திரையில்
புதுமையாய் ஒரு சோகம்..!
வழக்கம் போல
அவர்களை வரவேற்க
வாசலுக்குச் சென்றேன்.
ஆனால் - அவர்களோ,
என்னை கவனிக்காது
என் போல் இருந்த,
ஒரு உடலுக்கு மாலையிட்டனர்
கண்ணீருடன்...!

என்ன நிகழ்கிறது என
ஏதும் புரியாதவளாய் நான்..!
கதறி அழும் என் அன்னையை
கட்டி அணைக்க எண்ணி
காற்றை அணைக்கிறேன்...!
வாழ நினைக்கிறேன்,
வாய்விட்டு கதறுகிறேன்!
எவர் காதிலும் விழவில்லை
என் கதறலும் புலம்பலும்..!

எல்லாரும் சொல்கிறார்கள்
நான் இறந்துவிட்டேன் என்று..!
ஆனால்,
இறந்தது "நான்" தான் - என்பதை
என் மனம் உணர்வதற்குள்
இடுகாட்டில் எரிகிறது..
"என் பிணம்"..!!!
கண்ணீருடன்
பள்ளி பேருந்து விபத்தில்
பலியான சிறுமியின் ஆத்மா...!

எழுதியவர் : காயத்ரிசேகர் (6-Dec-15, 9:28 am)
பார்வை : 592

மேலே