மன வெள்ளம்
சிறுதுளி பெருவெள்ளம் - உணர்ச்சிபூர்வ
---- எடுத்துக்காட்டு தமிழக தலைநகர்.
அன்றுவான் பார்த்த விழிகளணைத்தும்
---- இன்று விழிபிதுங்கியது வெள்ளத்தால்!!!
வாசல்வரை வரும் உம்மை,
வீட்டிற்குள் அழைப்ப தில்லையென,
வடுவாய் மனதில் கொண்டாயோ?
விசாரிக்க வந்து சென்றாயோ?
மார்பளவு நீரிருந்தும் வயிற்றில்
மட்டும் தீ ஏனோ?
வென்றது, வருனனா? அக்கினியா?
தலைகளின் மனித நேயமா?
பசுமை வண்ண தோட்டத்தில்
புது வெள்ள கூட்டங்கள்
நிரம்பிக்கொள்ள என்ன நாட்டம்
தீராத விதைத்தவ னலையோட்டம்!!!
திரும்பும் முனையொங்கும் நீர்ச்சூழ்ந்து
திருப்பு முனையை தந்தது.
திரும்பிப் பார்க்க நொடிகளின்றி,
திரும்ப சுனாமி வந்தது.
பிணம்திண்ணும் கழுகளாய் - சில
தலைமையும் செய்ய - பல
வர்த்தகங்கள் கூறுபோட - இல
மனிதநேய குறைபாடு உதவும்கரங்களிடம்.
விடுவிடு வென்னும் குழந்தைகூட
விடுமுறையை இன்று வெறுத்தது,
மடமட வென விலைவாசியோ
விண்ணை இன்று தொட்டது.
அறிக்கைவிடும் தலைவர்கள், சேதத்தையும்
கொஞ்சம் சென்று பார்க்கட்டும்
கொள்கை கொண்ட தலைவர்கள்,
கொடுமை களையும் கலையட்டும்
நீர் இன்றி அமையாது உலகு
நீர் இன்றியும் அமையாது தலைவர்களே!!!
நீர் இன்று வினையாகி போனதால்,
நீரும் வினையாக வேண்டாம். வேண்டாம்.
நீலி கண்ணீர் விட்டு எம்மை
துயரம் மறக்க சொல்கின்றீர்
பீலி வார்த்தை பேசி பேசி
திரையில் மறைந்துக் கொள்கின்றீர்
கடுகு கரங்கள் ஒன்று கூடி,
மலையாக நின்ற போதும்
கையில் ஒன்றும் இல்லை இன்று
சென்று நாளை வாவென்றீர்.
பூஜ்ஜிய நிலையில் மக்கள்
பூஜ்ஜியங்களை கூட்டும் தலைவர்கள்
புன்னகை மறந்த மக்கள்
புன்னகை கழிக்கும் மாக்கள்
எங்கள் சோகம் கண்டு அதீத
கண்ணீர் விட்டாய்போலும் மேகமே?
இனி எங்கள் கோனை கேட்டு
ஆணையேற்று சிந்து மேகமே!!!