கடவுளின் சுமை

கடவுளின் சுமை

விளம்பரமில்லாத
மனிதாபிமானத்தின் மூலம்
விஸ்வரூபமெடுக்கும் கடவுள்களை
விளம்பரப்படுத்திக் கொன்றுவிட்டு
தகனம் செய்யத் தெரியாமல்
சுயநலம்கொண்டு அவதானமாக
தங்கள் வெள்ளை வேட்டியில்
கறைபடாமல் நின்றுகொண்டு
குழம்பியக் குட்டைக்குள்
மதப் புழுக்கள் மாட்டி தூண்டிலை
வீசிவிட்டுத் திசைமாறிப்போன
மீன்களுக்காகக் காத்திருக்கின்றன
சில பதாகைப் போதைகள்

உயிரைக் கையில் பிடித்துகொண்டு
உணவுக்காகப் போராடும்
மீன்களில் பரிதாபப்படும்
தூண்டில்காரர்களிடமிருந்து
இப்போது மனிதாபிமானத்தைக்
காப்பாற்றவேண்டியது
கடவுளுக்குப் பெரும் சுமையாகிப்போனது.

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-Dec-15, 2:31 am)
பார்வை : 91

மேலே