பாட்டி எழுப்பி விடுகிறாள்

................................................................................................................................................................................................

இளம் பரிதி எழுந்து
பனை மரத்தில் பல் துலக்கி,
மேகத் துவாலையால் முகம் துடைக்கு முன்னே
எழுப்பி விடுகிறாள் பாட்டி......
பச்சை விளக்கு வை..
பாவை நோன்பு இரு...
மாடம் சுற்று..
மாரியம்மனுக்குப் பூப்போடு...

இளநங்கை வீட்டிலிருந்தால்
ஒரு பொழுது சும்மா விட மாட்டாள்...
அப்படி நட.. இப்படி நில்..!
நல்ல கணவன் அமைய வேண்டுமாம்..
அதற்குத்தான் ஆர்ப்பாட்டம்..!
இருக்கட்டும்....

கண்டிப்பாரோ கவனிப்பாரோ இன்றி
ஊர் சுற்றி விட்டு ஒரு மணிக்கு வருகிற அண்ணன்..
தோராயமாக வரும்
சாராய வாடையில் தம்பி..

அது சரி,
இதே போல் ஒவ்வொரு வீடுமிருந்தால்
நல்ல கணவன்
நடுவானத்திலிருந்தா வருவான்?

நம் வீட்டுப் பெண்ணுக்கு
நல்ல துணை தேடும் குடும்பங்கள்
வரப் போகிற மருமகளுக்கு
குணக்கேடர்களை செதுக்கிக் கொடுப்பது
என்ன நியாயமோ, தெரியவில்லை..!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (7-Dec-15, 11:40 am)
பார்வை : 82

மேலே