முதல் முரண்

அவன் சட்டையை நானும்
என் சட்டையை அவனும்
மாற்றி அணிந்தோம்...
ஒரு தட்டில்
இருவருக்கும்
பசியாற்றினோம்...
வகுப்பறையில்
மிக நெருக்கமாக
அமர்ந்தோம்...
வெளிவந்த முதல் நாள்
திரைப்படம் பார்க்க
விடுப்புகள் எடுத்தோம்...
இதழ் மாற்றி இதழ் மாற்றி
ஒரு சிகரெட்டை
புகைத்து முடித்தோம்...
தேர்வுகளின்
முந்தைய இரவில்
முட்டிமோதி படிக்க முயன்றோம்...
வினாதாள்
கடுமையாக வந்தால்
முகம் பார்த்து புன்னகைத்தோம்...
முடிவுகள் வந்ததும்
கிளியர் செய்ய
சபதங்கள் எடுத்தோம்...
துன்பங்கள் வரும்போது
தோள் கொடுத்தோம்...
இன்பங்கள் வரும்போது
பகிர்ந்தளித்தோம்...
இப்படியெல்லாம் இரண்டு வருடம்
என்னுடன் இருந்த அந்த அவன்
'நீங்க என்ன ஆளுக' என கேட்பதில்
தொடங்குகிறது
எனக்கும் அவனுக்குமான
முதல் முரண்.

எழுதியவர் : கோபி சேகுவேரா (7-Dec-15, 8:05 pm)
Tanglish : muthal muran
பார்வை : 64

மேலே