மழையென்பது யாதென

மழை பெய்யத் தொடங்கியது
தூரலில் ஆரம்பித்து
துரத்தி அடித்தது...

இன்றைய உணவு
மீந்து போகுமென்ற உறுதியில்
நாளைய முதலீட்டின் கேள்விக்குறி
ஞாபகத்திற்கு வந்தது
தள்ளுவண்டி இட்லிக் கடை பாட்டிக்கு...

குஞ்சுகள் நனைவதை தடுக்க
வழியில்லாததைக் கண்டு
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...

அறுவடைக்கு தயாரான பயிர்களெல்லாம்
அப்படியே மூழ்கிப் போயின
வட்டிக்கு வாங்கிய
விவசாயிகளின் கடன்களைப் போலவே...

கூட்டி அள்ளுவதற்குள்
கரைந்து விட்டது
கடலோரத்தில் உற்பத்தி செய்த உப்பு..
'கல் உப்பு' என்று பெயர் வைத்தால் மட்டும்
கரையாமல் இருக்குமா என்ன?

எவ்வளவு மழைப் பெய்தாலும்
அப்படியே நின்றிருக்க
எறும்புகளொன்றும் எருமைகள் அல்ல..
பாவம்
யாரோ விட்ட காகித கப்பலில்
கரையேற துடித்துக் கொண்டிருக்கிறது...

ஊர் முழுக்க நீர்
இருப்பினும்
குடங்களோடு அலைந்துக் கொண்டிருகிறார்கள்
குடிநீருக்காக...

மின்சாரக் கம்பி விழுந்த குளத்தில்
மீட்கப் பட்ட உடல்களைக் கண்டு
கதறிய கண்களெல்லாம் குளமானது...

கொட்டும் மழையில் ஒரு
கோடிஸ்வர பிணம்
அடக்கம் செய்ய முடியாமல்
அப்படியே கிடந்தது..
வெட்டியான் யோசித்தான்
அனாதைப் பிணமாவதற்கு
ஒரு மழை போதுமென்று...

ஒழுகின்ற சத்தத்தில்
அழுகின்ற சத்தம் அடங்கி வட்டது
குடிசை வீட்டு குப்பத்து ஏழைகளுக்கு...

'தண்ணீரில் கண்டம்' என்பது
இப்படி ஏதோ ஒரு மழையிலிருந்து கூட
உருவாகியிருக்கக் கூடும்....

மழையென்பது யாதெனில்
எல்லா நேரங்களிலும்
வெறும் நீராக இருப்பதில்லை
கண்ணீராகக் கூட இருந்து விடலாம்...

-- மீள் பதிவு... 02/05/2015
===========================

பின் குறிப்பு;
அன்று எழுதிய போது ஏன் மழையை பற்றி திட்டுகிறீர்கள் என்று சொன்னவர்கள் எல்லாம்
என்னிடம் மீண்டும் பதிவிடக் கேட்டுக் கொண்டதற்கிணங்க பதிவிட்டது...

எழுதியவர் : ஜின்னா (8-Dec-15, 1:07 am)
பார்வை : 371

மேலே