சிறகு தைத்த முத்தங்கள்

முத்தங்களின்
பிறப்பிடம்
ஆண்டுக்கு
ஓர் முறை
முளைப்பதில்லை!

ஆயுள் வரை
உதடுகளே.....

சேமிப்பின்
ரகசியம்
முத்தங்கள்
சேருமிடங்களே!

உச்சிமோர்ந்தால்
உள்ளம்
சேமிப்பகம்

உதடு பிழிந்தால்
உயிரே
சேமிப்பகம்

மறைத்ததில் விழுந்தால்
வெட்கம்
சேமிப்பகம்

பூக்களில் புதைந்தால்
சிறுபுன்னகை
சேமிப்பகம்

கலவியில் நிகழ்ந்தால்
தனிமை
சேமிப்பகம்

காயத்தில் கலந்தால்
கண்ணீர்
சேமிப்பகம்

சேருமிடங்கள்
புனிதமானது
செலவழிக்கும்
வழிமுறையே
புரியாதது


சிறகு தைத்த
முத்தங்கள் சேர்க்க
சம்மதமெனில்!

அண்ணனாக!
தம்பியாக!
தந்தையாக!
காதலனாக!
மட்டுமே....

நிலைப்பேழையில்
உடல்கிழிந்த‌
ஓர் பொம்மையில்
தேடுங்கள்!

விபச்சாரியின்
சிறகு தைத்த‌
முத்தங்களை

எழுதியவர் : புலவூரான் ரிஷி (8-Dec-15, 8:40 pm)
பார்வை : 125

மேலே