சரியும் தவறும்

சரியும் தவறும் சந்தித்துப் பேசின

சரி: “என்னை
ஆதரிப்போரே அநேகம்”

தவறு: “அவர்கள்
தேர்ந்தெடுப்பதென்னவோ
என்னைத்தான்”

சரி: “எல்லாக் காலத்திலும்
அறிவுறுத்தப்படுபவன்
நான்”

தவறு: “அதற்குக் காரணம்
என் ஜீவிதத்தின் நீட்சி”

சரி: “என்னைச் செய்வோருக்கு
அமைதியைப் பரிசாய்(க்)
கொடுப்பவன் நான்”

தவறு: “என்னைச் செய்வோருக்கு
அனுபவ விருது
வழங்குபவன் நான்”

சரி: “என்னருகில் இருக்கிறது நீதி?”

தவறு: “என் காலடியில் கிடக்கிறது சட்டம்”

சரி: “மதங்களையும் மீறி
மனிதகுலத்திற்கே
வலியுறுத்தப்படுபவன் நான்”

தவறு: “மனிதகுலத்தையும் தாண்டி
உயிரினங்களோடு
உறவாடுபவன் நான்

சரி: “என்னைக் காதலிப்போரே அதிகம்”

தவறு: “அவர்கள்
என்னை மணந்து கொள்வதுதான்
துரதிர்ஷ்டம்”

சரி: “உன்னோடு பேச
வந்ததே தவறு”

தவறு: “இப்போதாவது
உணர்ந்தால் சரி”

-ப்ரணா (எனது "தானியம் கொத்தும் குருவிகள்" தொகுப்பிலிருந்து...)

எழுதியவர் : ப்ரணா (10-Dec-15, 7:48 am)
பார்வை : 133

மேலே