அவளும் இனிய காதலும்

அவளும் இனிய காதலும்

*****
அவள்
உணர்வில்
மதுவின் சுரப்பு
அமிழ்தத்தின்
சுவைத்திரட்சி

உயிரில்
பௌர்ணமி நிலவு
ஈரத் தடவுகை
நாடிகளின்
உச்ச பாய்ச்சல்

விடுவிக்க முடியாத
ஏக்கங்களின்
கடலலை
ஏகி
வேட்கையுடன்
விசும்பும் இதயத் துடிப்பு

அவள் நினைவுகள்
வளர் தாடை
புல் வெளிகளில்
மார்பு மண்டிய
புதர் நெரிசலில்
தளர்ந்த தேடல்களில்
தாளாத சோகங்களில்
பூத்த புன்னகைகளில்
பொக்கிஷ
இருப்புக்கள்

அவள்தான்
அடவி படர்ந்த
அகலக் கானகம்
மொய்க்காத தேனீக்கள்
இரைச்சலில்
அடைந்தழியும்
மதுக்கலசம்

காதலின்
அடங்கா அருவி
பிறவியெடுக்கும்
மலை முகடு
அதன்
அடித்தாவாரத்தில்
படர்ந்திருக்கும்
பசிய கொடி

என்
தவிப்பை
வேரறுத்துப் பாயும்
அருவி
அறியும்
பூமியின் நீரோட்டத்தில்
ஆழத்தை அளக்கும்
கருவி

ஒரு
அருவியின் கருணையை
இழுத்துச் சேர்க்கும்
நில மண்ணாய்
வாழ நினைக்கும்
வண்ணக் கடல் அவள்

நிழல்
இருளின் நடுவிலும்
நிதானம் இழக்காதவளாய்
தன்
ஒருமை பற்றிய
நிச்சயத்துடன்
வாழ்வைக் கடக்கிறது
வருடல்களற்ற
வருடக் கடல்

- பிரியத்தமிழ் -

எழுதியவர் : பிரியத்தமிழ் : உதயா (11-Dec-15, 5:57 pm)
பார்வை : 214

மேலே