யுகாக்னி
பராசக்தியிடம்
காணிநிலம் கேட்ட
அக்னிக்குஞ்சொன்றை
எட்டயபுரக் கூடொன்று
அடைகாத்து நெருப்புமழையைப்
பெற்றுத்தந்தது. ...
அந்நியனுக்கெதிரான
வெடிகுண்டின் கந்தகத்தை
மகரந்தமாய்
பூசிக்கொண்டு மலர்ந்தது
இந்த வேள்வித்தீ. ..
மீசைமுளைத்தயிந்த
நெருப்பு மழை
தனது கவிதைக்கதிர்களால்
வெள்ளையனை
சுட்டுப்பொசுக்கியது..
கவிதைக் கங்குகளை
அள்ளி வீசிய
சுதந்திர தேவியின்
இந்த தேசியச் சொத்து
இறுதிவரை-
வறுமையின் கைகளிலேயே
அடகு வைக்கப் பட்டிருந்தது. ..
தமிழ்த்தாயின் தவப்புதல்வனின்
வீட்டு அடுப்பில்
எரிய மறுத்த நெருப்பு
அவன் கவிதைகளில்
எரிந்தது. ...
ஒரு யுகாக்னியை
தனது முண்டாசுக்குள்
முடிந்து வைத்திருந்த
சூரயபுத்திரனே....
எங்கும்....
எப்போதும்....
எந்நிலையிலும்...
யுகாக்னிக்கு மரணமேது ....