மூடினார் யாரடியோ
மூடினார் யாரடியோ...?
*********************************
காமம் இலாதவோர் களிப்பினையே அந்தக்
கடியினில் காட்டிடுவாய்!
நாமம் இலாதவோர் நட்பினையே உந்தன்
நயனத்தில் கூட்டிடுவாய்!
சேமம் இலாதவோர் சிறுபொழு தெனினும்
சேர்த்தணைத் துறங்கிடுவாய்!
பூமியி லே,நல் வரமென வந்தாய்!
பிள்ளைக் கனியமுதே!
வெள்ளை யுடையினில் வீதியில் செல்லினும்
வேதனை முகம்காட்டாய்!
பள்ளி நடப்புகள் பகிர்ந்திடும் முன்னர் உன்
பசியையும் தான்மறப்பாய்!
துள்ளி வருங்கன்று துவண்டு விழும்மடி
தூர்ந்ததோ என்வாழ்விலே!
வெள்ளமும் இன்றுனை வீதியோ டிழுத்ததாம்
வேதனை என்சொல்குவேன்!
அள்ளி முடித்த,என் கூந்தலில் அவரின்
ஆவிவைத்தேன் என்றார்!
பள்ளி வகுப்பிலோ, பாதிப்பா லத்திலோ,
பாழுற்ற வீதியிலோ?
அள்ளித்தூர் வாராத ஆற்றுவாய்க் காலரின்
அரசியல் பைகளிலோ?
முள்ளிவய்க் கால்,எதில்? முத்தமிழே! உன்னை
மூடினோர் யாரடியோ?