மீண்டெழுவோம் நாங்கள் மீண்டெழுவோம்
மீண்டெழுவோம்!நாங்கள்
மீண்டெழுவோம்!
அதி காலை செங்கதிரோன் வரவில்லை
அந்தி மாலையில் மதிஉம் வரவில்லை
இருண்ட வானில் வெள்ளிஉம் முளைக்கவில்லை
அகன்ற வானில் நீலத்தைக் காணவில்லை
வளியில் ஏனோ வண்ண மாற்றம்
நீலம் மறைந்து கருமை நிறைந்தது
வானில் கதிரவனை காரிருள் மறைக்க
திடீரென அழுகிறது வான் காரணமெதுவோ?
அதற்கென்ன கவலையோ!மீளாத்துயரில் வீழ்ந்ததோ?
அதனுடைய கண்ணீரெல்லாம் இங்கே நன்னீராய்
நிலம் மறைந்து நீர் நிறைந்தது
பரவையாய்;நிறம் மட்டும் வேறாய்
காகிதக் கப்பல் மிதந்தது வீட்டிலிருந்தன்று
இன்றோ வீடே காகிதக் கப்பலாய்
மாரி பொழிந்து ஏரி நிறைந்தது
அவ்வாறே உடைந்ததேரி நிறைந்தது சேரி
குப்பைக் கூவம் குளித்து விட்டது
குளிர்ந்த நீரில் நன்றாக!நன்றாக!
ஓட்டின் வழி கரைந்து வந்ததன்று
தலைவாயில் வழி நிறைந்து வந்ததின்று
மாடியில் ஒளிந்தாலும் தேடி வருகிறது
பகையன்னவோ? எங்கள் மீது மழைக்கு!
மனிதன் மேலேறி தப்பி விடுவான்
மற்ற உயிர்கள் தப்புவ தெப்படியோ?
ஐயோ பாவம்! ஐயோ பாவம்!
எவற்றையும் தொலைத் தலைகிறோம் அகதியாய்!!
எங்களின் உரவு குறைந்து விட்டதின்று
எங்களை அரவு சூழ்ந்து விட்டதின்று
உருத் துடனே வாழ்கிறோம்;இருப்பினும் இறுதியாக
மீண்டெழுவோம்!நாங்கள் மீண்டெழுவோம்! உறுதியாக
எங்களைத் தவிக்கவிட்டது தண்ணீர்!தண்ணீர்!
தனித்துவிட்டது தண்ணீர்!தண்ணீர்!இருப்பினும்
மீண்டெழுவோம்!நாங்கள் மீண்டெழுவோம்!உறுதியாக
தெரியும் இஃது இயற்கைனியதி என்று!
நாங்கள் மீண்டெழுவோம்!இச்சூழ்நிலையை வென்று!
பழிக்க மாட்டோம் மாரியை இப்போதும்!
பழித்தால் நாமிருக்க மாட்டோம் எப்போதும்!
இங்கே உதவும் உள்ளமுண்டு ஏராளம்!
அவர்கள் அள்ளிக் கொடுப்பதிலோ தாராளம்!
உதவுங்கள் எங்களுக்கு மனமாற!இன்று
வாழ்த்துவோம் உங்களை உளமாற!நின்று.