மிச்சமில் லாதிறங்கு

[ஜின்னாவின் கஜல்-275036-படித்து எழுதியது]
காட்சிப் பிழையோடி! -உந்தன்
கண்களில் மின்னுவதும்!
மோட்சம் இலையோடி-அதில்
மூழ்கத் தவம்செய்வேன்!

ஆட்சிப் பிழையோடி –கண்கள்
அங்கிங்காய் ஓடுவதேன்!
ஆட்சிக்குள் நானிருக்க-கப்பம்
அளித்துமே காத்திருப்பேன்!

சூட்சுமம் சொல்லிடடி! –உன்னுள்
சுவையென நான்கரைவேன்!
சூத்திரம் காட்டிடடி! –உன்னைச்
சுற்றுமோர் கோளாவேன்!

சாட்சிகள் ஏதுக்கடி?- உந்தன்
சாய்த்தவோர் பார்வைசொலும்!
மீட்சி,நீ கொடுத்திடு!வா!-என்னை
மிச்சமில் லாதருந்தி!

உப்புக் கரிக்காதே –கண்ணில்
ஒருதுளி நீவடித்தால்
கொப்பளித் தே,வடியும்- என்னுள்
குடம்,நிறை ஆனந்தம்!

மப்புக் கூடிவிடின்- பலரும்
மழைவரும் எனச்சொல்வர்!
தப்பவர் சொல்வதுமே –உன்முகம்
தாங்காத வான்கருக்கும்!

சுற்றும் உலகிதுவும்- உன்னைச்
சுற்றியே பார்ப்பதற்கு!
கற்றிலேன் தமிழின்னும்! –உன்மேல்
காதலால் கவிசெய்வேன்!

முற்றிய பாலையென –நானும்
மூச்சிழந் தேகிடந்தேன்!
பெற்றவோர் மழையெனவே- நீயும்
பெய்திடு! குடித்திடுவேன்!

அச்சமிங் கேதுக்கடி!- பிறர்க்கு
அவலம்ஒன் றில்லையடி!
மிச்சமில் லாதபடி –எந்தன்
மேல்விழுந் தே,இறங்கு!
=================== ============

எழுதியவர் : காளியப்பன் எசேக்கியல் (12-Dec-15, 9:07 am)
பார்வை : 112

மேலே