ஓடா வலிகள்
ஒரு புராதன காலம் போல
தருணங்களை அகழ்ந்து கொண்டிருந்தேன்.
முற்றத்தில் அடுக்கு செவ்வரத்தை
நின்ற இடம் நன்றாக ஞாபகம் இருக்கிறது .
நட்புக்களோடு நின்ற கோலம் வெளிவருவது
நிகழ்ந்து கொண்டிருந்தது முற்ற படைகளில் .
பயமாக இருந்தது என்பதை விட
அந்த பக்குவம் வரவில்லையே என்று
இன்றைய பக்குவத்தின் பின் தான்
எனக்கும் தெரிந்தது
என்ன தான் இருந்தாலும்
அப்படி நடந்திருக்க கூடாது
ஆழ்மனம் இன்னும் ஆழமாய் சிலாகித்தது
சிந்தனையின் ஓட்டம் இன்னும் வலுப்படுத்துகிறது
மீள மீள
இறந்த காலத்தையே
இழுத்துப் போட்டு நச்சரிக்கிறது மனம்.
அந்த அழகான பூவை கண்டுவிட்டு
ஏன் பேசாமல் வந்தேன் ?
கொய்து வந்திருந்தாலும்
குறைசொல்லாத பூ அது
என இப்போது தானே
புத்தியில் உறைக்கிறது.
அதை காணாமலேயே இருந்திருக்கலாம்
வாழ்வின் கடைசி அத்தியாயம் வரை
அந்தப் பூ வராதிருந்திருக்கலாம் . சீ
வலி இல்லாத இதயம் எதற்கு
வந்ததே நல்லது....
பூங்கன்று புடுங்கிய நிலமென்றாலும்
பூங்கன்று நின்ற இடம்தானே....
- பிரியத்தமிழ் -