தமிழ் மாதங்கள் பன்னிரண்டுஒரு பார்வை
ஆங்கில மாதம் என்றால் ஜனவரி, பிப்ரவரி எனத் துவங்கு கின்றன. தமிழ் மாதம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்கும். இதற்கான பெயர் காரணத்தை இனி காண்போம்.பெரும்பாலும் ஒரு மாதத்தில் பௌர்ணமி அன்று எந்த நட்சத்திரமோ அதுவே அந்த மாதத்தின் பெயராக இருக்கும். அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் இருக்கும்.
சித்திரை: இந்த மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தன்றுதான் பௌர்ணமி வரும். அதனால் சித்திரை மாதம் என்றானது.
வைகாசி: விசாக நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாதம்தான் வைசாகி. மதுரை என்பது மருதை எனத் திரிவது போல், சம்ஸ்கிருத ‘வைசாகி’ தமிழில் வைகாசி ஆயிற்று.
ஆனி: அனுஷ நட்சத்திர சம்மந்தமானது ஆனுஷீ. இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாதம் ஆனுஷீ மாதம். தமிழில் ‘ஷ’ என்ற எழுத்து உதிர்ந்து, ஆனி என்றாயிற்று.
ஆடி: ஆஷாட நட்சத்திரத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு உண்டு. பூர்வம் என்றால் முன்; உத்தரம் என்றால் பின். பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ‘ர்வ’ என்ற கூட்டெழுத்து சிதைந்தும், ‘ஷ’ உதிர்ந்தும் போக, தமிழில் பூராடம், உத்திராடம் என்கிறோம். இந்த இரண்டு நட்சத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆடி.
ஆவணி: ச்ராவணம் என்பது ச்ரவண நட்சத்திரத்தைக் குறிக்கும். முதலில் உள்ள ‘ச்ர’ அப்படியே தமிழில் ட்ராப் (drop) ஆகிவிட, ‘வணம்’ என்பதை ‘ஓணம்’ என்கிறோம். அது மஹாவிஷ்ணுவின் நட்சத்திரமாதலால் ,‘திரு’ என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நட்சத்திரத்தில் வருவதால், ச்ராவணி எனப்படும். இதில் சம்ஸ் கிருதத்துக்கே உரிய ‘ச்ர’ என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.
புரட்டாசி: ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம்தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. ‘அஷ்ட’ என்பது அட்ட எனத் திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால், ‘ப்ரோஷ்டபதி’ என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.
ஐப்பசி: ஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ மாதம்தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.
கார்த்திகை: க்ருத்திகை நட்சத்திரம்தான் கார்த்திகை. இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால், அது கார்த்திகை மாதமாயிற்று.
மார்கழி: மிருகசீர்ஷம் என்பது ‘மார்கசீர்ஷி’ என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி மாதம். அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.
தை: புஷ்யம்தான் தமிழில் பூசம். புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்துக்கு திஷ்யம் என்றும் பெயர். பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம். அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.
மாசி: மக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் ‘கி’ என்பது ‘சி’ யாக மருவி மாசி ஆயிற்று.
பங்குனி: பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்றும் அழைக்கிறோம். இந்த இரு நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால், இந்த மாதம் பல்குனி மாதம் எனப்படும். அதில், ‘ல’ எழுத்து மருவி பங்குனி என்றாயிற்று.
காஞ்சி மஹா பெரியவர் உரையிலிருந்து.....
படித்து பகிர்ந்தேன் ...

