2 ஆதாமின் அப்துல்லா- --பொள்ளாச்சி அபி
ரங்கோன் நகரம் வழக்கமாய் இருந்ததைவிட,அன்றைக்கு மிகவும் பரபரப்பாக இருந்தது .காரணம்,அன்று விடிவதற்கு முன்பாகவே வீதிதோறும் அலறிக் கொண்டிருந்த ஒலிபெருக்கிகளிலிருந்து வந்தவொரு செய்தி, “ இன்னும் ஓரிரு நாட்களில் ரங்கோன் மீதும் ஜப்பான் குண்டுகளை வீசலாம். ஆகவே தத்தம் உயிர், உடமைகளைக் காத்துக் கொள்ள நினைப்பவர்கள் நாளை மாலை இந்தியா செல்லவிருக்கும் கப்பலில் செல்லலாம்..”
இரண்டாம் உலகப் போர் உச்ச கட்டம் அடைந்திருந்தது எங்கெங்கும் போர் விமானங்களின் ஓங்கார சப்தமும்.குண்டு மழை பொழிவும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஜப்பானும், ஜெர்மனியும், பிரிட்டனும் போரில் தங்களின் சர்வ வல்லமைகளையும் பிரயோகித்துக் கொண்டிருந்தன. அதுவரை நடுநிலை வகித்து வந்த சோவியத் யூனியனை ஹிட்லர் தாக்கியதைத் தொடர்ந்து, சோவியத் யூனியனும் போரில் குதித்தது. பசிபிக் சமுத்திரத்தில் அமைந்திருந்த அமெரிக்காவின் முக்கிய கடற்படை தளமான “பேர்ல் ஹார்பரை”, ஜப்பானியர்களின் போர் விமானங்கள் குண்டுவீசித் தகர்க்க, அதுவரை போரில் ஈடுபட்ட நாடுகளுக்கு ஆயுதம் வழங்க சந்தர்ப்பங்களை எதிர்நோக்கிக் கொண்டிருந்த அமெரிக்காவிற்கும், இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.நவீன ஆயுதங்கள் உலகப் போரின் வேகத்தை,உச்ச கட்டம் நோக்கி நகர்த்தியது.பயத்தால் உறைந்து போயிருந்த உலக நாடுகள் எதிரெதிர் முகாம்களாகப் பிரிய வேண்டிய சூழ்நிலைகள் உருவாயின.
இதன் எதிரொலியாகவே, பத்தாண்டுகள்,இருபதாண்டுகள் என ரங்கோனில், பிழைப்பதற்காக தஞ்சம் புகுந்து சிறு வாணிபம், தொழில் செய்துவந்த மற்ற நாட்டு மக்கள் இப்போது செய்வதறியாது தவித்தவர்களாக,தத்தம் மனைவி மக்களுடன்,கையில் கிடைத்த சில உடமைகளை மட்டும் எடுத்துக் கொண்டு கப்பல் ஏறினார்கள்.
ரங்கோனில் செல்வந்தர்களாக வாழ்ந்தவர்கள் என்று எவரையும் அடையாளம் காண முடியாதபடி,உயிருக்கு பயந்த,உடமைகளைக் காப்பாற்ற முடியாத..ஏதிலிக் கூட்டங்களாய் மாறியிருந்தவர்களால் அந்தக்கப்பலின்; இரண்டு தளங்களும் நிரம்பியிருந்தன. அவர்களில், நாகூர் மீரான் மரைக்காயரும் ஒருவர்..,
இந்தியா செல்லும் வரை தாங்கள் பயணிக்கும் கப்பலுக்கு எவ்வித ஆபத்தும் சூழ்ந்து விடக் கூடாது என்பதே அதில் பயணித்திருந்த அனைவரின் பிரார்த்தனையாகவும் இருந்தது. ஆண்டவனிடம் தங்கள் குறைகளைச் சொல்லும்பொருட்டு,கண்ணீர் வழிந்த கண்களை மூடியபடி, வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்திக் கொண்டிருந்தவர்களின் காதுகள், போர் விமானங்களின் சப்தம் கேட்கிறதா..? என்பதையும் மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தன.
‘மக்ரீப்’ தொழுகைக்கு நேரமாகி விட்டதை உணர்ந்த நாகூர் மீரான்,அதுவரை தானிருந்த சந்தடி மிக்க தளத்தைவிட்டு, அமைதியான இடத்தைத் தேடி,மெதுவாக நடந்தார்.தங்கள் குடும்பத்துடன் ஆங்காங்கே அமர்ந்திருந்த சில முஸல்மான்கள் கண்களில் மின்னுகின்ற அச்சத்தோடும்,வழிந்த கண்ணீரோடும் அமர்ந்திருந்தனர். “வாருங்கள்..மக்ரீப் தொழுகைக்கு போகலாம்..” என்று அழைத்தார்.“மரண பயத்திலிருந்து நம்மை மீட்டுக் கொள்ள,நமக்கிருக்கும் நம்பகமான வழி நமது தொழுகையொன்றுதான். இனி நீங்கள் அச்சப்படத் தேவையில்லை..” தைரியமும்,நம்பிக்கையும், ஆறுதலும் நிரம்பியிருந்த நாகூர் மீரானின் அழைப்பை யாரும் சட்டை செய்யவில்லை.
கப்பலின் மேல்தளத்திற்கு வந்த நாகூர் மீரான்,காலடித் தடங்களால் ஈரமாகாமலிருந்த ஒரு மூலையைக் கண்டுபிடித்தார்.கையோடு கொண்டு வந்திருந்த விரிப்பை தரையில் விரித்து தொழுகைக்கு தயாரானார்.இப்போது கூட தொழுகைக்கு யாரேனும் வரக்கூடும் என்ற ஆசையில் திரும்பிப் பார்த்தார். அலைகளின் ஓசை தவிர சந்தடி எதுவுமில்லை.தூரக் கிழக்கிலிருந்து இருளின் கைகள் மட்டும் மெதுவாய் நீண்டு கொண்டிருந்தது.
தொழுகையை முடித்துக் கொண்டார் நாகூர் மீரான். அலைகளைக் கிழித்தபடி ஒரே சீராகப் போய் கொண்டிருந்தது கப்பல். கருத்த வானத்தில் நட்சத்திரங்கள் மெதுவாய் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன.அடிவானம் கண்ணுக்கு தெரியாத நிலையில்,நாகூர் மீரானும் மெதுவாய் தனது நினைவுகளால் பின்னோக்கிப் போய்க் கொண்டிருந்தார்.
கீழக்கரையில் வசித்துவந்த நடுத்தரக் குடும்பங்களில் ஒன்றுதான் மம்மது மரைக்காயருடைய குடும்பமும். வயிற்றுப் பிழைப்பிற்கு ஒரு சிறிய மளிகைக் கடை.மனைவி சாராவும்,மகன் நாகூர் மீரானும்தான் அவரது சொந்தங்கள்.கிடைப்பதைக் கொண்டு,நிறைவுடன் வாழப் பழகியிருந்த அவர்களது மகிழ்ச்சிக்கும் அதுவரை குறைவில்லை.
மகன் நாகூர் மீரானை,பள்ளிப்படிப்புடன்,இஸ்லாமிய மார்க்கக் கல்வியும் பயில வைத்தார் மம்மது.
மார்க்கக் கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்ட நாகூர் மீரான்,எட்டாம் வகுப்புடன் அரசுப்பள்ளிப் படிப்பை நிறுத்திக் கொண்டான்.மகனின் விருப்பத்திற்கு தடை விதிக்க மம்மதுவிற்கும் மனமில்லை.
மதரஸாவில் இருந்த பிள்ளைகளில் முதன் முதலாக, குரானின் முப்பது அத்தியாயங்களையும் படித்து மனப்பாடமும் செய்ததுடன்,அவற்றிற்குரிய பொருளை மிகவும் அழகான தேர்ந்தெடுத்த தமிழ் வார்த்தைகளுடன் மற்றவர்களுக்கு சொல்லுமளவுக்கு வளர்ந்திருந்தான் நாகூர் மீரான். அதற்காகவே மதரஸாவின் உஸ்தாத்தால் அனுமதிக்கப்பட்டதும், சில நேரம் அனுமதிக்கப் படாததுமான புத்தகங்களையும் அவன் படித்துக் கொண்டுதானிருந்தான்.
பள்ளிவாசலில் அடிக்கடி ‘பயான்’ நடத்தும் மகனின் வாக்கு வன்மையை மற்றவர்கள் புகழ்ந்து சொல்வதைக் கேட்டு,மம்மது மரைக்காயருக்கு பெருமிதம் தாளவில்லை.
எந்நேரமும் ஆண்டவனின் பெயரைச் சொல்லிக் கொண்டும், வேளை தவறாமல் தொழுகையை நிறைவேற்றிக் கொண்டும், மார்க்க நெறிப்படி தனது மளிகைக் கடையை நடத்திக் கொண்டும் இருக்கும் ஒரு குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியே நிறைந்திருப்பது,ஆண்டவனுக்குத்தான் பொறுக்கவில்லையோ என்னவோ..?
தனது அடியார்களுக்கு சோதனையைத் தொடங்கிவிட்டான்.
அன்றைக்குப் பார்த்து,நாகூர் மீரான்,பக்கத்து கிராமத்தில் நடைபெற்ற ஒருவிழாவில்,பயானுக்கு சென்றிருந்தான். மம்மது மரைக்காயர் தனது மளிகைக் கடையிலிருந்தார்.வெகு நாட்களாக, மளிகைக் கடனைத் திருப்பித் தராத.., பக்கத்து வீட்டு காதர் பாயின் மனைவி மரியம் பீவி,தனது முக்காட்டை சீர் செய்தபடி கடையை நோக்கி மூச்சு வாங்க,ஓடிவருவது தெரிந்தது.
மம்மது மரைக்காயருக்கு ஆச்சரியம் தாளவில்லை.‘கடனைத் திருப்பித்தருவதற்காக யாரும் இவ்வளவு வேகமாய் ஓடிவர மாட்டார்களே..!’ ஏதோ விபரீதம் என்று அவரின் உள் மனசுக்குள் மணியடித்த நொடியில், “பாய்..பாய்..உங்க பீவி.., திடீர்னு மூச்சுப் பேச்சில்லாம மயங்கி விழுந்துட்டா..!”
மம்மதுவுக்கு படக்கென்று ஏதோ உள்ளுக்குள் முறிந்து விழுந்தாற்ப் போலத் தோன்றியது. கடையை அப்படியே விட்டுவிட்டு,இறங்கி வீட்டுக்கு ஓடினார்.திண்ணையில் படுக்க வைத்திருந்த மனைவி சாரா, லேசாக வாயைப் பிளந்தபடி, மயங்கிக் கிடந்தாள். அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக,குதிரை வண்டிக்கும் சொல்லிவிடப்பட்டிருந்தது.
மனைவியின் அருகே சென்ற மம்மது,அவளைத் தூக்கி மடியில் கிடத்திக் கொண்டார்.உடல் சில்லிட்டுப் போயிருந்தது போலத் தோன்றியது.பதட்டத்துடன் மூச்சு வருகிறதா..? என்று மூக்கின் அருகில் கையை வைத்துப் பார்த்தார்.ஊஹூம்..அறிகுறியே இல்லை.மம்மதுவின் முகம் போன போக்கைப் பார்த்தே,மற்ற எல்லோருக்கும் சூழ்நிலை புரிந்துபோயிற்று. சாரா“மௌத்தாகி” விட்டாள்.“இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிவூன்..”என்று பல குரல்கள் கேட்டன. மாரடைப்பாக இருக்கும் என்றும்,இவள் ‘ஷஹீத்’ என்றும் பேசிக் கொண்டார்கள்.
இதனிடையே,மம்மது பூட்டாமல் வந்திருந்த கடையை மூடிப் பூட்டிவிட்டதாக,யாரோ ஒருவர், மம்மதுவிடம் கொடுக்கச் சொல்லி,சாவியை மற்றொருவரிடம் கொடுத்துச் சென்றார்.
அதற்குப்பின் வழக்கம்போல,அனைத்து சடங்குகளும் நிறைவேற்றப்பட்டு,சாம்பிராணிப் புகையால் வாசனையிடப்பட்ட,ஐந்து வெள்ளை ஆடைகளை ‘கபனாக’அணிவித்து,ஓட்டமும்,நடையுமாக, சாராவின் ஜனாஸாவைக் கொண்டு சென்று கபர்ஸ்தானில், நல்லடக்கம் முடியும் வரை மம்மதுவும், நாகூர் மீரானும் ‘ஒப்பாரி’ போல எந்த வார்த்தைகளையும் சொல்லிவிடக் கூடாது என்ற கவனத்துடன்,கண்ணீர் சிந்தி,அழுது கொண்டிருந்தனர்.
மூன்று நாட்கள் துக்கம் முடிந்தது.மனச் சோர்வினால் மேலும் சில நாட்கள்,மம்மது தனது கடையைத் திறக்கவில்லை.
அன்றைக்கு வழக்கம்போல கடையைத் திறந்து வியாபாரத்தைப் பார்த்தால்,மனதுக்கு சற்று ஆறுதலாய் இருக்கும் என்று நினைத்து, கடைக்கு சென்று பூட்டைத் திறந்தவருக்கு, அதிர்ச்சிதான் காத்திருந்தது.
ஆமாம்..கடையில் இருப்பு வைத்திருந்த மளிகைப் பொருட்களில் பெரும்பாலும் காணாமல் போயிருந்தன.முதலீட்டை மோசம் செய்யும் அளவிற்கு நட்டமாகிவிட்டது என மம்மதுவுக்கு உடனே புரிந்து போனது. “யா..அல்லா..எனக்கு ஏன் இந்த சோதனை..?” இடிந்துபோய் அமர்ந்து விட்டார்.
சாராவின் மரணத்தைத் தொடர்ந்து,இப்படியொரு அதிர்ச்சி தனக்கேற்படும் என்று மம்மது கனவிலும் நினைக்கவில்லை.“எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம்..” என்று நினைக்கிற மனிதர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது போலும்..,என்ன மனிதர்கள்..? சே..மனிதர்களா இவர்கள்..?, மம்மதுவுக்கும் லேசாக நெஞ்சு வலிப்பது போல இருந்தது. கை,கால்கள் திடீரென்று வலுவிழந்து போனது போலத் தோன்றியது.
தள்ளாடியபடி,வீட்டிற்கு வந்த மம்மதுவின் நிலையைக் கண்ட நாகூர் மீரான், ‘உலகம் ஏன் இப்படி ஏழைகளையே வஞ்சிக்கிறது..? எல்லாம் வல்ல அல்லா..எங்களைக் காப்பாற்று..!’ என்று இறைஞ்சிக் கொண்டான்.
“மம்மது இனி கடையைத் திறக்கப் போவதில்லை..,உடல்நலமின்றிப் படுத்துவிட்டார்.பாவம் பிழைப்புக்கு என்ன செய்வார்.நாகூர் மீரானும் அனுபவமில்லாதவனாயிற்றே..?” ஊருக்குள் பேச்சுக்கள் வளர்ந்து கொண்டிருந்தது.
‘ஆமாம்..பிழைப்பிற்கு இனி என்ன செய்வது..? கடையைத் திறந்து மார்க்க நெறிப்படி வியாபாரம் செய்துகொண்டிருந்தால்,நாமும் பிழைக்க வழி கிடைக்காதா என்ன..? இத்தனை ஆண்டுக்காலம் தானும்,தனது குடும்பமும் வயிறார சாப்பிட,வழி செய்த ஆண்டவன்,இப்போது மட்டும் கைவிட்டு விடவா போகிறான்..? நாகூர் மீரானுக்கும் அப்படித்தான் தோன்றியது. அனுபவமில்லாவிட்டால் என்ன..ஆண்டவன் துணையிருக்கிறான்..’ முடிவு செய்த நாகூர் மீரான்,பக்கவாதத்தால் தளர்ந்து போய்க்கிடந்த மம்மதுவிடம் கூற,அவரது முகத்தில் மலர்ச்சி தெரிந்தது.
பொருட்களை எங்கே வாங்குவது..? இஸ்லாத்தின்படி எவ்வளவு லாபம் வைத்து விற்பது..? என சில அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.நாகூர் மீரானும் கடையைத் திறந்து வியாபாரத்தைக் கவனித்தான்.சிறு முதலீட்டுடன் கூடிய அந்தக் கடையில்,எப்படியோ இருவரின் சாப்பாட்டிற்கான வருவாய் வந்து கொண்டிருந்தது.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.ஆனால்,நாளுக்கு நாள் மம்மதுவின் உடல் நலிவடைந்து கொண்டே வந்தது.மருத்துவர்கள் கொடுத்த எந்த மருந்தும் அவரைக் குணமாக்கவில்லை.இதற்கு மேல் எங்களால் எதுவும் செய்வதற்கில்லை என்று மருத்துவர்களும் கையை விரித்துவிட்டனர்.
மிகுந்த சிரமத்திற்கிடையில்,தந்தைக்கு வேண்டிய பணிவிடைகளையும், நாகூர் மீரானே செய்துவிட்டு,கடையில் வியாபாரத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான்.
மகனின் துன்பத்தைக் கண்டோ என்னவோ..சகிக்க முடியாத மம்மதுவும் சில மாதங்களில் ஆண்டவனிடம் போய்ச் சேர்ந்தார்.
தாய்,தந்தை இருவரையும் ஆண்டவனின் அழைப்புக்கு அனுப்பிவிட்ட நாகூர் மீரானின் வாழ்க்கையில் வெறுமை பிடித்தாட்டியது.தந்தைக்கு பணிவிடை செய்வதில் செலவாகிக் கொண்டிருந்த பெரும்பாலான நேரம் இப்போது மிச்சப் பட்டிருந்தது.இடையில் சில மாதங்களாக விட்டுப் போயிருந்த மார்க்கக் கல்வியில் மீண்டும் கவனம் செலுத்தினான் நாகூர் மீரான்.
இப்போது நாகூர்மீரான் பெரும் கல்விமானாகி விட்டார்.ஆலிம்களும்,உலமாக்களும் கூட போற்றும் அளவிற்கு அவர் வளர்ந்துவிட்டார்.தந்தை இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பார்..?.., ‘ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும்…’குறள் மனசுக்குள் ஓடியது.
யாருக்காகவும் காத்திராத வருடங்கள் சில உருண்டோடி விட்டிருந்தன.நாகூர் மீரானின் வயதும் இருபத்தைந்தை எட்டியிருந்தது.அப்பகுதியில்,மேலும் சில கடைகள் புதிதாக உருவாகியிருந்தன.இஸ்லாமியர்கள் சிலரே மட்டமான பொருட்களை,குறைந்த விலைக்கு விற்றுக் கொண்டிருந்ததால், வாடிக்கையாளர்கள் திசை மாறியிருந்தனர்.நாகூர் மீரானின் கடையில் முன்போல வியாபாரமும் இல்லை.
மார்க்கக் கல்வியின் மீது காட்டிய ஈடுபாடு,ஏறக்குறைய இருபத்தெட்டு வயதைக் கடந்தும்,அவருக்கான திருமணம் என்ற ஒன்றையே மறக்கடித்திருந்தது. சிலபோது அதற்கான வாய்ப்புகள் வந்தபோதும்,தனக்கு இப்போது இஷ்டமில்லை என்று தட்டிக் கழித்துவிட்டார்.
ஆனால்..,இப்போது சில நாட்களாக ஏதோவொன்றைத் தான் இழந்துவிட்டது போல உணரத் துவங்கியிருந்தார்.வெறுமை வாட்டிய பொழுதெல்லாம் புத்தகங்கள் மட்டுமே அவருக்கு துணையாக இருந்தது.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு மாற்றம் இருந்தால் நல்லது என்று அவருக்குள் தோன்றிக் கொண்டே இருந்தது.
சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருப்பதால்,அவ்வப்போது தமிழகத்தில் பெரும் கிளர்ச்சிகள் நடப்பதும், அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு, சிறைவாசம்..என்று தகவல்கள் பரவிக் கொண்டிருந்தன.இதனால், தினமும் அமைதியற்ற சூழலே நிலவிக் கொண்டிருந்தது.
இந்தநேரத்தில்,தங்கள் வணிகத்தை பெரிய அளவில் செய்து பொருள் ஈட்டுவதற்காக, கீழக்கரையிலிருந்த வணிகர்கள் பலர் ரங்கோன் செல்வதை அறிந்தார் நாகூர் மீரான்.அவருக்குள் ஏதோவொரு பரபரப்பு தொற்றிக் கொண்டது.
உடனடியாக,தனக்கு சொந்தமான அந்தச் சிறிய வீட்டையும், மளிகைக் கடையையும் விற்றுவிட்டு, வணிகர்களுடன் ரங்கோனுக்கு கிளம்பிவிட்டார். அங்கே இறங்கிய பின்தான் தெரிந்தது தமிழகத்திற்கு சற்றும் குறைவில்லாத நிலையே ரங்கோனிலும் நிலவுகிறதென்று.
தமிழர்களும்,தமிழ்பேசும் இஸ்லாமியர்களும் நிறைந்த ஒரு பகுதியில்,அவரும் தஞ்சமானார். தமிழ்நாட்டிலிருந்து வந்தவர் என்ற அபிமானத்தால் சிலர் உதவி செய்ய, தனக்குத் தெரிந்த ஒரே தொழிலான மளிகைக்கடையைத் துவங்கினார்.பதிமூன்று ஆண்டுகள் வேகமாகக் கடந்த நிலையில்தான,ரங்கோனில் குண்டு வீசப்போவதாக ஜப்பானின் அறிவிப்பு.ஒரு நாடோடியைப் போல தனது நிலை மாறிப்போனதை எண்ணி மனம் வருந்தினார் நாகூர் மீரான்.
----------------- தொடரும்.
==========================
தோழர்களின் புரிதலுக்காக --
"பயான்" - பள்ளிவாசல் மற்றும் விழா மேடைகளில் செய்யப் படும் மதப் பிரச்சாரம்,,
"ஷஹீத்"- சொர்க்கத்திற்கு செல்பவர்
===================================