மகனிடம் இளமையை பெற்ற மன்னன்

தாகத்தை தணிப்பதற்காக கிணற்றை எட்டிப்பார்த்த யயாதி மன்னன், அந்த கிணற்றின் உள்ளே பெண் ஒருத்தி வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து திகைத்துப் போனான். அரசன் என்பதால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வேட்டையாடுவதற்காக காட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தான் யயாதி. அப்படி வந்த நேரத்தில் பல இடங்களில் சுற்றித்திரிந்ததன் காரணமாக தாகம் ஏற்பட்டது. தண்ணீர் தேடி அலைந்தபோது தென்பட்ட கிணற்றை உற்று நோக்கியபோதுதான் அதில் பெண் இருப்பதைக் கண்டான்.

அசுர குல குருவின் மகள்

அந்தப் பெண் பேரழகு கொண்டவளாக இருந்தாள். அவளது அழகில் சற்று மயங்கிப் போனாலும், பின் சுதாரித்துக் கொண்டு, ‘பெண்ணே! நீ யார்? உன் குலம் யாது? எப்படி இந்த பாழுங்கிணற்றுக்குள் வந்தாய்? என்று கேள்விகளை தொடுத்தான்.

அந்தப் பெண்ணோ கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையிலா இருக்கிறாள்! எப்போது கிணற்றில் இருந்து வெளியே போவோம் என்ற தவிப்பில் அல்லவா இருக்கிறாள். அந்த தவிப்பு அவளது பேச்சில் வெளிப்பட்டது. ‘முதலில் கிணற்றில் இருந்து வெளியே வர எனக்கு உதவுங்கள். அதன்பிறகு உங்கள் கேள்விகளை வைத்துக் கொள்ளலாம்’ என்றாள்.

ஒரு வழியாக அந்தப் பெண்ணை கிணற்றில் இருந்து மீட்பதற்காக, அவளது வலது கரம் பற்றி வெளியே தூக்கினான் யயாதி. வெளியே வந்தவள் பெரும் மூச்சு விட்டபடி சற்று நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். பிறகு யயாதி மன்னனின் கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கினாள்.

‘என் பெயர் தேவயானி. நான் அசுர குலத்தின் குருவான சுக்கிராச்சாரியாரின் புதல்வி. என் தோழி சர்மிஷ்டையுடன் காட்டுக்கு வந்தேன். விருஷபர்வ ராஜாவின் மகளான அவள், என்னையும் என் தந்தையையும் இழிவாக பேசியதுடன், என்னை இந்த பாழுங்கிணற்றுக்குள் தள்ளி விட்டு விட்டாள்’ என்று தன் கதையைக் கூறினாள்.

திருமண விருப்பம்

கதையை கூறி முடித்ததும் யயாதி மன்னனை விழுங்கும் வகையில் தன் பார்வையை செலுத்தினாள். பிறகு, ‘மன்னனே! நான் ஒரு பிராமணப் பெண். என் வலது கரத்தைப் பற்றி தூக்கிய ஆண் யாராக இருந்தாலும் அவர்தான் என் கணவர். எனவே நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று யயாதியிடம் வேண்டுகோள் வைத்தாள்.

யயாதி மன்னனுக்கு தேவயானியின் மீது ஆசை இருந்தாலும், ‘பெண்ணே! நீயோ பிராமணப் பெண். நானோ சத்திரியன். உன் தந்தை உலகத்துக்கே ஆச்சாரியார். எப்படி நான் உன்னை மணப்பது முறையாகும்? எனவே அந்த எண்ணத்தை மறந்து நீ உன் வீட்டிற்குச் செல்!’ என்று கூறி குதிரையில் ஏறி புறப்பட்டுச் சென்று விட்டான்.

இதற்கிடையில் மகளைக் காணாது பதறிப்போன சுக்கிராச்சாரியார், தேவயானியைத் தேடி காட்டிற்கு வந்தார். அங்கு தனியாக நின்று கொண்டிருந்த மகளிடம் விவரம் கேட்டறிந்தார். விருஷபர்வ மன்னனின் மகளால் ஏற்பட்ட அவமானம் குறித்து தந்தையிடம் குமுறிய தேவயானி, இனியும் தான் நாட்டிற்கு திரும்ப விரும்பவில்லை என்று சுக்கிராச்சாரியாரிடம் தெரிவித்தாள்.

வேலைக்காரியாக...

மகளின் மனவேதனையை கண்டு கோபமுற்ற சுக்கிராச்சாரியார், நேராக தனது மகளுடன் அரசவைக்கு சென்று, ‘நீயும் உன் அசுரர்களும் அழிந்தாலும் சரி. இனி நான் உனக்கு உதவப்போவதில்லை. என் மகளை அவமானம் செய்த பெண்ணைப் பெற்றவன் நாட்டில் இனி நான் இருக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

விருஷபர்வனும், சர்மிஷ்டையும் அவரை பின் தொடர்ந்து அவரது கோபத்தை தணிக்க முயற்சித்தனர். ‘என் வீட்டு வேலைக்காரியாக சர்மிஷ்டை இருக்க வேண்டும். நான் திருமணம் செய்து செல்லும் வீட்டிலும் அவள் எனக்கு வேலைக்காரியாக இருக்க வேண்டும். இதற்கு ஒப்புக்கொண்டால் என் தந்தை இந்த நாட்டில் இருப்பார்’ என்று கூறினாள் தேவயானி.

சர்மிஷ்டை தன் தந்தைக்காகவும், நாட்டுக்காகவும் வேறு வழியின்றி இதற்கு ஒப்புக்கொண்டாள்.

யயாதியுடன் திருமணம்

ஒரு நாள் கானகத்தில் மீண்டும் யயாதி மன்னனை சந்தித்தாள் தேவயானி. அவனைத் தன் தந்தையிடம் அழைத்துச் சென்று மணம் செய்து வைக்கும்படி வேண்டினாள். சுக்கிராச்சாரியாரும் சம்மதம் தெரிவித்து யயாதி, தேவயானி திருமணத்தை நடத்தி வைத்தார். இருவரும் மகிழ்ச்சியுடன் நாட்களை நகர்த்தினர்.

இந்த நிலையில் தேவயானியின் வேலைக்காரியாக இருந்த சர்மிஷ்டையின் பேரழகால் யயாதி மன்னன் கவரப்பட்டான். அவளும் அப்படியே. இருவரும் ரகசியக் காதல் கொண்டு, திருமணமும் செய்து கொண்டனர். இதுபற்றி தெரியவந்ததும் தனக்கு துரோகம் செய்து விட்ட கணவன் குறித்து தந்தை சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டாள் தேவயானி.

சுக்கிராச்சாரியார் சாபம்

மகளுக்கு ஒன்று என்றால் பொறுத்துக் கொள்ளாத சுக்கிராச்சாரியார், யயாதிக்கு சாபம் கொடுத்தார். ‘இளமை இருக்கும் இறுமாப்பின் காரணமாகத்தானே என் மகளுக்கு துரோகம் செய்தாய். இன்று முதல் நீ இளமையை இழந்து முதுமை அடைவாய்!’ என்று சாபமிட்டார். நடு வாலிபத்தில் இளமையை இழப்பதை எண்ணி யயாதி மன்னன் வருத்தமுற்றான்.

யயாதி மன்னனுக்கு ஏற்கனவே அழகிய 5 குமாரர்கள் இருந்தனர். இருப்பினும் அவனுக்கு சுகத்தையும், ஆசைகளையும் அனுபவிக்கும் ஈடுபாடு குறையவில்லை. முனிவரின் சாபத்தால் இளமை போய்விட்டால் எப்படி சந்தோஷங்களை அனுபவிப்பது என்ற கவலையில் ஆழ்ந்தான்.

சுக்கிராச்சாரியாரிடம், எனக்குள் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள இளமையை திருப்பித் தாருங்கள் என்றான்.

அதற்கு சுக்கிராச்சாரியார், ‘மன்னா! நான் இட்ட சாபத்தை திரும்பப் பெற முடியாது. உன்னுடைய மூப்பை யார் விரும்பி ஏற்கிறார்களோ, அவர்களது இளமையை நீ பெற்றுக்கொள்ளலா£ம்’ என்று தீர்வு கூறினார்.

மகனிடம் பெற்ற இளமை

முதுமை நிலைக்கு மாறிய யயாதி மன்னன், தன் ஐந்து புதல்வர்களையும் அழைத்தான். ‘உங்களுடைய இளமையை எனக்கு யாராவது தந்து, என் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவுங்கள். எனக்கு இளமையை தரும் நபருக்கே, அடுத்து அரசாளும் உரிமையை வழங்குவேன்’ என்று கூறினான்.

அரச பதவிக்கு ஆசைப்பட்டு இருக்கும் இளமையை இழக்க யாராவது முன்வருவார்களா? மகன்களின் முதல் நால்வரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தந்தையின் நிலையைக் கண்டு மனம் கலங்கிய கடைசி புதல்வனான புரு என்பவன் தந்தைக்கு இளமையை தர சம்மதித்தான். மகிழ்ச்சியில் மகனை ஆரத்தழுவினான் யயாதி. மறுகணமே புருவிடம் இருந்த இளமை யயாதிக்கு வந்தது. புரு வயோதிகன் ஆகிப் போனான்.

இளமையை மீண்டும் பெற்ற யயாதி மன்னன் தன்னுடைய இரு மனைவிகளுடனும் பல ஆண்டுகள் இன்பம் அனுபவித்தான். அதன்பிறகு குபேரனுடைய உத்தியான வனத்தில் ஒரு தேவதையுடன் நிறைய ஆண்டுகள் இன்புற்றிருந்தான். பல பெண்களை பல காலம் அனுபவித்த போதிலும், யயாதி மன்னனின் ஆசை அடங்கவில்லை. பெண் சுகத்தில் திருப்தி அடையவே இல்லை. அப்பொழுதுதான் அவனுக்கு வாழ்க்கையின் ஆழமான அர்த்தம் விளங்கியது. ஆசைக்கு அளவில்லை. ஆசை அடங்காது என்ற உண்மை புரிந்து தன் கடைசி மகனாக புருவிடம் வந்தான்.

ஆசை அடங்காது

‘மகனே! தீயில் எண்ணெய் ஊற்ற ஊற்றத் தீ எரியுமே தவிர, அது ஒருபோதும் அணையாது. அதுபோல பொன்னும், பொருளும், பெண்ணும் மனிதனுக்கு சாந்த நிலையை கொண்டு வராது என்பதை நான் புரிந்து கொண்டேன். இந்த இளமையை நீயே வைத்துக்கொள்’ என்று தன் புதல்வனிடம் பெற்ற இளமையை அவனுக்கே திருப்பிக் கொடுத்தான். பின்னர் தன்னுடைய முதுமையுடன் கானகத்திற்கு சென்ற யயாதி மன்னன், தவத்தில் ஈடுபடத் தொடங்கினான். இப்போது அவனது மனம் ஆசையில் இருந்து விலகி, அமைதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (19-Dec-15, 9:01 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 557

மேலே