5ஆதாமின் அப்துல்லா - பொள்ளாச்சி அபி

மதியநேரத் தொழுகை முடிந்து, துவா ஓதிவிட்டு திரும்பிய நாகூர் மீரான்,முஸ்தபாவைத் தேடினார். தொழுகை முடிந்து சென்று கொண்டிருந்த கூட்டத்திலும் அவரைப் பார்க்க முடியவில்லை. அவருக்கு அதிசயமாக இருந்தது. ‘இதுவரை ஒரு தொழுகையையும் தவறவிடாத முஸ்தபா இன்றைக்கு எங்கே போனார்.அதுவும் முக்கியமாக இன்றைக்கு ஜும்மா தொழுகையாயிற்றே..? அவருக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா..?’
பள்ளிவாசலுக்கு வெளியே யாருடனோ பேசிக் கொண்டிருந்த யாகூப் கண்ணில் பட்டார்.
“யாகூப்..,” நாகூர் மீரானின் குரலைக் கேட்டு,திரும்பிப் பார்த்தவர்,அவரை நோக்கி வந்தார்.
“யாகூப்..நம்ம முஸ்தபா பாயை இன்னைக்கு காணலையே..என்ன ஆச்சு..? உங்களுக்கு ஏதாச்சும் தகவல் தெரியுமா..? அவருக்கு உடம்புக்கு ஏதாவது..,”
“ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே பாய்..,முஸ்தபா பாயின் அண்ணன் சிலார் சாயபு, கோயமுத்தூரில் ‘மௌத்’ஆகிட்டார்னு சேதி வந்தது. அதுக்காகத்தான் குடும்பத்தோட அவர் போயிருக்கிறார்.ரெண்டு மூணு நாள்ளே வந்துருவார்..”
“இன்னாலில்லாஹி..வ இன்ன அலைஹி ராஜியூன்..” யாகூப் தெரிவித்த சேதியைக் கேட்டு,நாகூர் மீரான் வாய்விட்டு சொல்லிக் கொண்டார்.
மூன்று நாட்கள் கழிந்திருந்தன.
அன்றைக்கு மதியநேரத் தொழுகைக்கு முஸ்தபா வந்துவிட்டது தெரிந்தது.
தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலுக்கு முன்பாயிருந்த திண்ணைக்கு வந்தபோது, முஸ்தபாவும், யாகூப்பும் அவருக்காகக் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டார் நாகூர் மீரான். “முஸ்தபா பாய்..ஊரிலிருந்து எப்போ வந்தீங்க..? உங்களுக்கு ஒரு அண்ணன் ஊரிலேயிருப்பதா சொல்லவே இல்லையே..?” மூன்று நாட்களாகப் பார்க்காமல் இருந்த ஆதங்கத்துடனும், முஸ்தபாவின் அண்ணன் மௌத்தாகிப் போன கவலையும் தொனிக்க கேட்ட நாகூர் மீரான்,முஸ்தபாவின் அருகில் அமர்ந்து கொண்டார்.
முஸ்தபாவின் முகத்தில்,துக்கத்தின் சாயல் படர்ந்தது. “எனக்கு அண்ணன் ஒருத்தர் இருக்காருன்னு,உங்க யாருகிட்டேயும் இப்ப வரைக்கும் சொல்லலை. அதனாலத்தானோ என்னவோ,அவரு மௌத்தாகிட்டாருன்னு உங்ககிட்டே சொல்லவேண்டிய நெலமைக்கு ஆண்டவன் என்னை ஆளாக்கிட்டான்..” குரலில் வருத்தம் தொனிக்க அவர் பேசியது,நாகூர் மீரானுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது.இங்கு வந்த நாள் முதலாய், முஸ்தபாவை இவ்வளவு கவலையுடன் அவர் பார்த்ததில்லை.
“என்ன செய்யுறது..நம்மளைப் படைச்ச ஆண்டவன்,எப்போ விரும்புறானோ அப்ப அவங்கிட்டே தனது விருந்தாளியாய் அழைச்சுக்குவான் பாய்..,நீங்க கவலைப்படாதீங்க..”, நாகூர் மீரானின் குரலில் உண்மையான அக்கறையும்,ஆறுதலும் தொனித்தது.யாகூப்பும் ஆதரவாய் தலையாட்டிக் கொண்டிருந்தார்.
“மௌத்தாகிப் போன என் அண்ணனோட கடைசிக் காலம் வரைக்கும்,அவரோட கவலையாயிருந்த ஒரு விஷயம்., இப்போ என்னோட கவலையாப் போச்சு..!, என்றபடி,இலக்கின்றி எங்கோ வெறித்தபடி ,துக்கத்துடன் ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப் படுத்தினார் முஸ்தபா.
முஸ்தபாவின் இந்தப் புதிர்ப் பேச்சு..நாகூர் மீரானையும்,யாகூப்பையும் சற்றுக் குழப்பத்திலாழ்த்தியது.
“பாய்..கொஞ்சம் வெவரமாத்தான் சொல்லுங்களேன்..” நாகூர் மீரான், முஸ்தபாவின் தோளில் ஆதரவாய் கை வைத்துக் கொண்டே கேட்டார்.
முஸ்தபாவிற்கும் சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தால் ஆறுதலாய் இருக்கும் போலிருந்தது.யாகூப் ஏதோவொரு கதையைக் கேட்கத் தயாராவது போல,தன்னை தளர்த்திக் கொண்டு,சுவற்றோரம் நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டார்.
“நானும்,அண்ணன் சிலார் சாயபுவும் கோயமுத்தூரிலே,சின்னதா ஒரு பலசரக்குக் கடையை நடத்திட்டு இருந்தோம்.சொல்லிக்கிற மாதிரி,பெரிய வருமானமெல்லாம் எதுவுமில்லே.., அதை வெச்சுகிட்டே அண்ணன்,அண்ணி,அவங்களோட ரெண்டு பசங்க,ரெண்டு பொண்ணுங்களையும், என்னையும் பாத்துகிட்டாரு. எனக்கு நிக்கா ஆகற வரைக்குமே ஒண்ணாத்தான் இருந்தோம். எனக்கு நிக்கா முடிச்ச பொண்ணு இந்த ஊரு,ஏதோ கொஞ்சம் நெலம் இருக்கு.அதையும் மருமகனான நீங்கதான்,மகனாயிருந்து பாத்துக்கணும்னு,எங்க மாமனாரு கேட்டுகிட்டதுக்காக,நிக்கா முடிஞ்ச கையோட நான் இந்த ஊருக்கு வந்துட்டேன்.அப்படி நான் வந்ததுக்கு முக்கியமான காரணம் என்னன்னா..,ஏதோ என்னாலே மிச்சமாகுற வருமானம்,அண்ணனுக்கும் கொஞ்சம் உதவியா இருக்குமேன்னுதான்.
எப்படியோ நான் நெனச்சபடியே அண்ணனும், குழந்தைங்க சற்றுப் பெருசானதுக்குப் பிறகு, பசங்களுக்கு ,பஞ்சு மில்லுலே வேலை வாங்கிக் குடுத்துட்;டாரு. இதுக்கு நடுவிலே அண்ணி இறந்துட்டாலும், ஒத்தையாளா நின்னு, மூத்த பையன் ஜமேஷாவுக்கும்,அவனுக்கு சின்னவளான கைருன்னிசாவுக்கும், அதுக்கப்புறம் சின்ன மகன் மதார்ஷாவுக்கும் நல்லபடியா நிக்கா செஞ்சு வெச்சுட்டாரு.மூத்த பையனுக்கு கொழந்தைங்க இல்லே.சின்னவனுக்கு ஒரு பெண்குழந்தையிருக்கு.
கடைசிப் பொண்ணு பாத்திமாவுக்கு நிக்கா பண்ணி வெக்கறதுக்கு இல்லாம,அண்ணனும் ஒடம்பு சொகமில்லாமப் போயி படுத்துட்டாரு. அந்தப் பசங்களுக்கும் பொறுப்பு இல்லே..,சரி பாத்திமாவோட அக்கா கைருன்னிசாவையாவது ஏதாவது ஏற்பாடு செய்யச் சொல்லலாமுன்னா.., அவளோட புருஷன் திடீர்னு மாரடைப்புலே இறந்ததுக்கப்புறம்,அவளே இரண்டு பொண்ணு,ரெண்டு ஆணுன்னு.., குழந்தைகளை வெச்சுகிட்டு அல்லாடுறா. அவ புருஷன் அஜீஸ்,கவர்ன்மெண்ட் காலேஜிலே ப்யூனா வேலை பாத்துட்டு இருந்ததினாலே,ஏதோ கொஞ்சம் பென்சன் வருது.அஜீஸ் பேருலேயிருக்கற ரெண்டு வீட்டோட வாடகையும் வருது. அதெல்லாம் அவ குடும்பத்தை ஓட்டறதுக்கே பத்தாது..”
“அப்ப,அந்தப் பொண்ணு பாத்திமா..?” யாகூப்தான் முஸ்தபாவை இடைமறித்தார்.
“யாரோட ஆதரவுமில்லாம தனிச்சுப் போன அந்தப் பொண்ணை, கையோட நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்..அறிவு தெரியாத காலத்திலிருந்து என்னையப் பாசமாப் பாத்துகிட்ட அண்ணனுக்கு வேற எப்படி நான் நன்றியைக் காட்டுறது.., ஆண்டவன்தான் எனக்கு நல்லவழியைக் காட்டணும்.!” முஸ்தபா வானோக்கி உயர்த்திய இரு கைகளுடனும்,ஒரு நைந்த புன்னகையுடனும் சொல்லிக் கொண்டார்.கண்கள் கண்ணீரால் நிரம்பியிருந்தது.
சில விநாடிகள் நீடித்த அமைதியைக் கலைத்தார் நாகூர் மீரான், “ பாய்..,உங்க வேண்டுதலை அல்லா நிச்சயம் நிறைவேற்றுவான். கவலைப் படாதீங்க.!, ஆறுதலாய் ஒலித்த வார்த்தைகளைக் கேட்டு,ஆதரவாய் தலையை ஆட்டிக் கொண்டார் முஸ்தபா.
-----தொடரும்