தமிழை வாழவைப்போம்
அகத்தினில்   தமிழை   விரும்பிடுவோம்
நிகரெந்த   மொழியேன்று  முழங்கிடுவோம்
புகவந்த   ஆங்கிலம்   அகற்றிவிட்டு
சுகந்தரு    தமிழை    சுவாசிப்போம்
முற்றும்    ஆங்கிலம்   ஆனதனால்
சற்றும்   தமிழ்மேல்   பற்றில்லை
வற்றும்    தமிழை   வளர்த்திடவே
முற்றும்   தமிழாய்   மாற்றிடுவோம்
விக்கிடும்    நிலையினை   விரட்டிடுவோம்
சிக்கலைத்    தீர்த்திட    எழுந்திடுவோம்
மக்கிடத்   தொடங்கும்   தமிழ்மொழிக்கே
பக்கபலம்   தந்து    காத்திடுவொம்
விரிகடல்   இலக்கணம்   அறிந்திடவே
விரல்விட்டுக்   கடைந்தே   விளங்கிடுவோம்
அகத்தியம்   முழுதும்   அறிந்திடுவோம்
நகக்கண்ணில்   வைத்தே   போற்றிடுவோம்
செந்தமிழ்   செழிக்கக்   களையெடுப்போம்
செந்நீரை  அதற்கு   விலைகொடுப்போம்
அயல்மொழி   என்ற    புயல்வரவால்
அயர்ந்து    விடாமல்    தமிழ்வளர்ப்போம்
அறிவியல்  ஆயிரம்   படைத்தமொழி
அதிசயம்    அகிலத்தில்   விதைத்தமொழி
மூடத்தை  அழித்திட   முயன்றமொழி
மூப்பின்றி    திகழ்ந்திடும்    மூத்தமொழி
ஒற்றுமை  இன்றி   இருப்பதனால்
பற்றினை  மொழியில்   இழக்கின்றோம்
சுற்றமென   அயல்   ஆங்கிலத்தை
உற்றதென   நாம்   போற்றுகின்றோம்
ஆர்த்தெழு   தமிழா   தமிழுயர்த்த
போர்த்தொடு   அயல்மொழி   தலைகவிழ
எத்தனை   மொழிகளைக்   கற்றாலும்
என்மொழி    தமிழென   கர்வம்கொள்
கம்பன்   இளங்கோ   கருத்தினிலே
கருவாய்  இருந்தே   கனிந்தமொழி
இந்திய   நாட்டொடு  உலகெங்கும்
முந்திப்   பிறந்தே   இனித்தமொழி
நீரென்றும்   நீரினை   வெறுத்திடுமா?
நெருப்பும்   நெருப்பினை   கைவிடுமா?
நம்விரல்   நம்கண்ணைக்  குத்துவதா?
நம்மொழியை    நாம்   ஒதுக்குவதா?
வேண்டாம்   தமிழா   இந்தநிலை
விலக்கிடுவோம்  உள்ள   மந்தநிலை
வேற்றுமொழி   இங்கு   வளர்வதையே
வேர்பிடுங்கி   தமிழ்  வாழவைப்போம்
                                       எழுதியவர்
                              பாவலர். பாஸ்கரன்
 
                    

 
                             
                            