பயணம்

நீண்ட நாட்களுக்குப் பிறகு பேருந்து பயணம். அதிலும் ஜன்னல் ஓரம் இருக்கை வேறு. சுட்டெரித்த வெய்யிலுக்கு பிறகு இதமான மாலை நேரக் காற்று. .
சுற்றிலும் பலதரப்பட்ட மக்கள். காதில் முணுமுணுக்கும் பல விஷயங்கள். திருமணம் ஆன பெண்ணுக்கு தாயின் அறிவுரை, எது நடந்தாலும் பொறுத்துக் கொள் மா என்று .. மற்றொருபுறம் ஒரு இளைஞன் தொலைபேசியில், மச்சான் எனக்கு வேலை கிடச்சுடுச்சி டா, இந்த மாசம் சம்பளம் வந்தவுடன் எல்லாருக்கும் ட்ரீட் ... ஒரு பக்கம் அரசியல் பேச்சு வேறு , இந்த அம்மா திரும்ப ஆட்சிக்கு வருவாங்களா மாட்டாங்களா... தொலைவில் ஒரு குரல், டாலர் மதிப்பு குறைஞ்சிடுச்சி போல. இப்படி பலர் பலவற்றை பேச என் கவனம் என் முன் அமர்ந்த சிறுவன் மீது பட்டது.
தன் தாயிடம் வெகு நேரமாக சைகையிலே பேசிக் கொண்டு இருந்தான்.
ஒரு நிமிடம் கூட ஓயாமல் இருந்தது அவன் சைகை.
பார்பதற்க்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. அவன் தாய் தன்னிடம் இருந்த நொறுக்கு தீனியை எடுத்து கொடுத்தாள்.
பக்கத்தில் இருந்த ஒருவர் அந்த சிறுவனை பார்த்து ஓ இவன் லூசு போல என்று நறுக்கென்று சொல்லிவிட்டார். வந்த ஆத்திரத்தை அடக்கி கொண்டு அந்த சிறுவனையே பார்த்தேன்.
தான் பாசமாக தன் தாய்க்கும் ஊட்டுகிறான். அம்மா எனக்கு வேண்டாம் நீயே சாப்பிடு என்கிறாள். அவன் பிடிவாதம் தாங்காமல் ஒரு வாய் வாங்கிக் கொண்டவுன் அவளுக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்து விட்டது. அவன் சட்டென்று தன்னிடம் இருந்த தண்ணீரை தாய்க்கு கொடுத்து சைகையில் குடிம்மா என்றான். தாயின் தலையை தட்டியபடி என்னையும் பார்த்து ஒரு மௌனமான சிரிப்பு.
எனக்குள் எதோ ஒரு இனம்புரியாத உணர்ச்சி. அவன் தாயிடம், நீங்க உண்மையிலே குடுத்து வச்சவங்க என்று கூறினேன்.
அதற்க்கு அந்த தாய் இவன் மனவளர்ச்சி குன்றியவன் என்று கண்ணீர் விட்டாள்.
அவன் மனவளர்ச்சி குன்றியவன் என்றால் நாம் எல்லாம் யார் என்பதை உணர வைத்தான்.
அப்போது புரிந்தது, கடவுளுக்கும் பரிட்சை உண்டு அதில் அவனுக்கு தோல்வியும் உணடென்பது.
சற்றே கனத்த இதயத்துடன் அந்த சிறுவனுக்கு BYE சொல்லி விடைபெற்றேன்..!

எழுதியவர் : ஸ்வப்னா ஸ்ரீனிவாசன் (26-Dec-15, 2:11 pm)
Tanglish : payanam
பார்வை : 144

மேலே