விவசாயம் மல்லிகைப் பூ --- தொகுப்பு மலர் ---- கட்டுரை

மலர்களிலே மல்லிகை
By S.V.P. வீரக்குமார்

சிரியா நாட்டில் உள்ள டமாஸ்கஸ் நகரின் குறியீட்டு மலர் மல்லிகை. இந்தியாவில் மல்லிகை என்றாலே மதுரை. மதுரை என்றாலே மல்லிகைதான். மல்லிகைச் செடியா? கொடியா? இல்லை இரண்டும்தான். மல்லிகை ஆலிவ் குடும்பமான ‘ஒலிசியே’ எனும் புதர் மற்றும் கொடிகள் சார்ந்த பேரினம். ‘ஜாஸ்மினும் சம்பக்’ (Jasminum Sambac) எனும் தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் மல்லிகை, இந்தியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து, மியான்மர் நாடுகளில் காணப்படும் மலரினமாகும். பூ…இவ்வளவுதானே என்று எளிதாக எண்ணிவிடவேண்டாம். இன்றைய உலகில் வர்த்தகத் தடையும் கட்டுப்பாடும் குறைந்த உலக சுதந்திர வர்த்தகம் எளிதாக நடைபெறும் காலத்தில் ‘மலர் வணிகம் என்பது அந்நிய செலவாணியை அள்ளிக் குவிக்கும், டாலர்களை அறுவடை செய்யும் தொழில்.
கொய் மலர், அலங்கார மலர், உலர் மலர் என மலர் வணிகம் வளர்ந்த நாடுகளின் வசம் 80 சதவிகிதமும், வளரும் நாடுகள் வசம் 20 சதவிகிதமும் இருக்கின்றன. நமது நாட்டில் ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மலர் உற்பத்தி நடைபெறுகின்றது. தமிழகத்தில் தோட்டக் கலைத்துறையின் கீழ் வருகின்ற மலர்ச் சாகுபடி சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகின்றது. பசுமைக் குடில் (Polyhouse) திறந்தவெளி சாகுபடி என இரண்டு முறையிலும் சம்பங்கி, மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, ரோஜா, மரிக்கொழுந்து, பிச்சி, அரளி, ஜாதிமல்லி, முல்லை, காக்கட்டான் என பல்வேறு வகை மலர் திறந்தவெளி சாகுபடியிலும், கார்னேஷன், ஆர்கிட் போன்றவை பசுமை குடிலிலும் சாகுபடி செய்யப்படுகின்றது.

பெண்கள் தலையில் சூடி மகிழ, கோவிலுக்கு, விழா அலங்காரம் செய்ய, மங்கல காரியங்களுக்கு, அசுப நிகழ்விற்கு, எசன்ஸ் எடுக்க, மணமூட்டிகள் செய்ய, நிறமிகள் பிரித்தெடுக்க என மலர்களின் பயன்பாட்டை தொடுத்துக் கொண்டே போகலாம். அகிலத்தில் அதி அற்புதமான படைப்புகளில் மல்லிகை தலைசிறந்ததென்று சொன்னால் அது மிகையில்லை. இயற்கையின் சிலிர்ப்பும், சிரிப்பும் பூக்கள் தான். பூக்கள் இயற்கையின் அருட்கொடை. அழகு, ஜீவன், உயிர்த்துடிப்பு என வண்ணமயமான தோற்றப் பொலிவையும் பெற்றுள்ளது.

மலர்களிலே பல நிறமும், மணமும் இருந்த போதிலும் வெண்மை நிற மல்லிகை தூய்மை, அமைதி, ஆர்வம் ஆகியவற்றிற்கு இலக்கணமாக இருக்கின்றது. தனது தனித்துவமான மணத்தினால் மல்லிகைக்கு ஈடு இணையான மலரேதுமில்லை எனலாம். ஜாஸ்மினம் சம்பக் (Jasminum Sambac) எனும் மல்லிகை இனம் இந்தோனேஷியாவின் தேசிய மலர். அங்கு ‘மெலாடி’ என மல்லிகை அழைக்கப்படுகின்றது. மேற்கு சீனாவின் இமயமலைத் தொடக்கம்தான் மல்லிகையின் பூர்வீகம் என கருதப்படுகின்றது. அநேக மல்லிகை இனங்களில் வெண்மை அதன் நிறமாக இருந்த போதிலும், சில ரகங்கள் இளம் மஞ்சளாகவும் காணப்படுகின்றன.


Jasmine என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மல்லிகையின் தாவரவியல் பெயரை Jasminum Sambac எனவும், Jasminum Olaceae என்றும் சிலர் குறிப்பிடுகின்றார்கள்.. ஆகவே, இதில் ஒரு தெளிவான கருத்து இல்லை. மல்லிகைச் செடியானது ஆண்டிற்கு 12-24 அங்குலம் வளரும். அதிகபட்சம் 10 அடி வரை கூட வளரலாம். மல்லிகையின் இலைகள் அடர் பச்சை நிறமுடையவை. சுமார் 2 ½ அங்குலம் அளவுள்ள இரட்டை வரிசை இலை அமைப்பை உடைய மெல்லிய, வளையக் கூடிய, பச்சை மற்றும் இளம் பழுப்பு நிறமுடைய தண்டு இருக்கும். Jasminum Grandiflorum, Jasminum Afficinale எனும் இரண்டுவகை மல்லிகை மலர்கள் உள்ளன. மல்லிகை வாசனை எண்ணெய் எடுப்பதற்கும் பயன்படுகின்றது. அழகு சாதனப்பொருட்களில் மல்லிகை வாசனை எண்ணெய் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது.

போகமிக வுண்டாகும் பொங்குகபங் கட்பிரமை

யாகவனற் சூனியமு மண்டுமோ – பாகனையாம்

மன்னு திருவசியம் வாய்க்குஞ்சூ டென்றேவரும்

பன்னு மல்லி கைப்பூவாற் பார்

என்கிறது மல்லிகையைப் பற்றிய பழம்பாடல் ஒன்று. ஆண் பெண் உடல் சேர்க்கைக்கு விருப்பம் உண்டாகத் தூண்டும் மலர் இது. கோழை, கண் மயக்கம், உடல் சூடு, சூனியம் ஆகியவற்றை மல்லிகை மலர் நீக்கும். இலக்குமி கடாட்சமுண்டாகும். தலைக்குத் தேய்க்கும் சுத்தமான தேங்காய் எண்ணெயில் மல்லிகை மலர்களைப் போட்டு அதனை நல்ல வெயிலில் வைத்து பூக்கள் வாடி வதங்கி, கருமை நிறமடைந்த பின்னர் அதனை வடிகட்டி பாட்டிலில் வைத்துக் கொண்டு பெண்கள் தினசரி கூந்தலில் தடவி வந்தால், மல்லிகையின் சுகந்தமான மணம், மனமகிழ்வைக் கொடுக்கும். பால் சுரப்பை நிறுத்த விரும்பும் தாய்மார்கள், மார்பில் மல்லிகையைச் தொடர்ந்து 3 நாட்கள் கட்டினால் பால் சுரப்பு நின்றுவிடும்.

மல்லிகை என்பது நமது பாரம்பரியமான மலர். இந்த மல்லிகை மலரில் எசென்ஸ் எடுக்கின்றனர். மல்லிகை மொட்டுக்களால் மட்டும் கட்டப்படும் ‘மண மாலை’ மிகவும் சிறப்பானது. தலையில் சூடுவதற்காகப் பூக்கள் சரம் சரமாக தொடுக்கப்பட்டு விற்பனையாகிறது. கருமையான கூந்தலில் பளீர் வெண்மை நிறத்தில் சூடப்படும் மல்லிகைப் பூச்சரம் பெண்களுக்கு அழகு சேர்க்கின்றது. அதனால்தான் திரை இசையில், ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரலல்லவா’ என சிலாகித்துப் பாடப்பட்டது. மணமகன், மண மகள் தலைப்பாகை, முகத் திரையாகவும் மல்லிகை பயன்படுகின்றது. கூந்தல் அலங்காரம் செய்யத் தைக்கப்படும் ஜடை அலங்காரத்தில் மல்லிகைப்பூ பிரதான இடத்தை பெறுகின்றது. நவ நாகரிக காலத்தில் உடைக்கு மேட்சிங்காக இருக்க, வண்ணம் பூசிய மல்லிகையையும் பயன்படுத்துகின்றனர்.



மணமூட்டும் இந்த மல்லிகையை எப்படி சாகுபடி செய்வது இதற்கான பூச்சி நோய் கட்டுப்பாடு என்ன என்பதை அறிவோமா!

மல்லிகையில் பல்வேறு ரகங்கள் உண்டு. ஒற்றை மோர்கா (Single Morga) இரட்டை மோர்கா (Double Morga) இருவாட்சி, ராமநாதபுரம் அல்லது மண்டபம் மல்லி, அர்க்கா ஆராதனா போன்ற பலவகை இருந்தாலும் ராமநாதபுரம் அல்லது மண்டபம் மல்லிதான் வணிகரீதியில் வெற்றியடைந்த ரகம். இதுதான் மதுரை மல்லி அல்லது குண்டு மல்லி என அழைக்கப்படும் ரகம்.

நல்ல, வடிகால் வசதியுள்ள, வளமான, இருமண் பாடுகொண்ட செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை. வடிகால் வசதியில்லாத களர், உவர், நிலங்கள் மல்லிகை சாகுபடிக்கு ஏற்றவை அல்ல. மண்ணின் கார அமிலத்தன்மை pH 6 முதல் 8 வரை இருக்க வேண்டும். குண்டு மல்லி அதிக மழையைத் தாங்கி வளரக் கூடிய ஒரு வெப்பமண்டல பயிர்.

வேர்விட்ட குச்சிகள் அல்லது பதியன்கள் மூலம் குண்டு மல்லிகைச் செடியை இனப்பெருக்கம் செய்யலாம். ஜூன் முதல் நவம்பர் மாதம் வரையிலுள்ள மாதங்கள் குண்டு மல்லிகை நடவு செய்ய ஏற்ற காலங்களாகும், ஒரு ஏக்கர் மல்லிகை நடவு செய்ய 2600 வேர்விட்ட பதியன்கள் தேவைப்படும். மல்லிகை ஒரு நீண்ட காலப்பயிர். ஆகவே நிலம் தயாரித்தல் மற்றும் நடவு விவசாயத்தில் கவனமாக இருக்கவேண்டும். நிலத்தை களைகளின்றி பராமரிக்க வேண்டும் என்பதால் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழவு செய்ய வேண்டும். 4 ½ அடி இடைவெளியில் கயிறு பிடித்து அடையாளம் செய்து கொள்ளவேண்டும். அடையாளம் செய்த இடத்தில் 1 அடி நீளம் X 1 அடி அகலம் X 1 அடி ஆழகுள்ள குழிகளை எடுத்து ஆற விட வேண்டும். பின் ஒவ்வொரு குழியிலும் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தை நிலத்தின் மேல் மண்ணுடன் கலந்து மூடி, குழிக்கு நடுவே மல்லிகை பதியனை வேர்பகுதிக்கு எந்தவித சேதமும் இன்றி நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்த உடன் முதல் தண்ணீரும், மூன்றாம் நாள் உயிர் தண்ணீரும் பாய்ச்சி, பின் நிலத்தின் ஈரம் காக்கும் தன்மை, தட்ப வெப்ப நிலையை அனுசரித்து நீர் பாசனம் செய்யவேண்டும். மல்லிகை நீண்ட காலப் பயிர் என்பதாலும், வரிசை சாகுபடி செய்வதாலும் சொட்டு நீர் பாசன அமைப்பை நிறுவுவது நல்ல நன்மை கொடுக்கும். சிறிய தெளிப்பு நீர்ப் பாசன அமைப்பு (Micro springler irrigation) அமைப்பதால் நிலத்தில் அதிகப்படியாக களைகள் காணப்படும். ஆனால் அதிகப்படியாக பனி விழும் காலத்தில் அதிகாலை, மாலை வேளைகளில் தெளிப்பு நீர் மூலம் தண்ணீர் தெளித்தால் பனியின் தாக்கத்தை குறைக்கலாம்.



மல்லிகைச் செடியை இயற்கை முறையிலும் சாகுபடி செய்யலாம். ரசாயன முறையில் மல்லிகை சாகுபடி செய்ய விரும்புவர்கள் 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து, 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய உரங்களை இரண்டு பகுதிகளாக பிரித்து கவாத்து செய்தவுடன் ஒருமுறையும், ஜூன், ஜூலை மாதங்களில் மறுமுறையும் மக்கிய தொழு உரத்துடன் கலந்து செடியினை சுற்றி இட்டு மண்ணோடு கலக்கச் செய்து நீர் பாசனம் செய்ய வேண்டும். கரையும் ரசாயன உரத்தை தெளிப்பு நீர்ப் பாசனத்தில் வெஞ்சுரி மூலம் செலுத்தி தெளிக்கும் போது இலைவழியே செடிக்கு உரத்தை கொடுக்கலாம். மல்லிகை நுண் ஊட்ட குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்படக்கூடியப் பயிர். அதனால் நிலத்து மண்ணை மாதிரி எடுத்து நுண்ணூட்டச் சத்துக்களின் அளவை மண் பரிசோதனை மூலம் கண்டறிந்து அதன்படி குறைபாடுள்ள நுண் ஊட்டங்களை தேவையான அளவு இடவேண்டும்.

தரையிலிருந்து 1 ½ அடி உயரத்தில் நவம்பரின் இறுதிவாரத்தில் மல்லிகைச் செடியை கவாத்து செய்ய வேண்டும். அப்போதுதான் செடி நன்கு படர்ந்து பக்கக்கிளைகள் அதிகரித்து, மகசூல் அதிகரிக்கும். கவாத்து செய்யும்போது நோயுற்ற உலர்ந்த இணை குச்சிகளையும், குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டிவிட்டு, செடியில் சூரிய ஒளி நன்கு படும்படியும் காற்றோட்டமுள்ளதாகவும் ஆக்கவேண்டும்.

பெரிய அளவிலோ, சிறிய அளவு மல்லிகை சாகுபடியில் உள்ள முக்கியமான பிரச்னைகளில் தலையானது பூச்சி மற்றும் நோய்கள்தான் மல்லிகை சாகுபடியை பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாக்குவது மண்ணில் உள்ள நூற்புழுக்கள்தான். மண் மாதிரி எடுத்து நூற்புழு தாக்குதலை கண்காணிக்கவேண்டும். நூற்புழுவை குறைக்க செண்டுமல்லி எனப்படும் துலுக்க சாமந்தியை ஊடுபயிராக பயிர் செய்தால் நூற்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம். நூற்புழு தாக்கப்பட்ட செடிகளின் இலைகள் வெளியே மஞ்சள் நிறத்தில் காணப்பட்டு பின்னர் கருகிவிடும். இதனைக் கட்டுப்படுத்த 10 கிராம் டெமிக் குருணை மருந்தை வேர் பாகத்தில் இட்டு தொடர்ந்து நீர் பாய்ச்ச வேண்டும்.



இலைகள் மஞ்சளாவது நூற்புழு தாக்குதலால் மட்டும் உண்டாவதில்லை. இரும்புச் சத்து பற்றாக்குறை அல்லது வேர்ப் புழு தாக்குதலாலும் கூட இலைகள் மஞ்சள் நிறமடையலாம். இரும்புச் சத்து குறைபாட்டினால் இலைகள் மஞ்சளாவதை மாற்ற ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் பெரஸ் சல்ஃபேட்டைக் கரைத்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தெளிக்க வேண்டும். வேர் அழுகல் காணப்பட்டால் காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25 சதவிகிதம் கரைசலை செடியினைச் சுற்றி மண்ணில் ஊற்ற வேண்டும். வேர்ப் புழு தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த தண்ணீர் பாசனத்துடன் கழிவு ஆயில் கலந்துவிடலாம் அல்லது செடியை சுற்றி வேப்பம் புண்ணாக்கு தூளைத் தூவி தண்ணீர் பாசனம் செய்ய வேண்டும். ரசாயன விவசாயிகள் 5 கிராம் பியூராடான் குறுணைகளை செடிகளை சுற்றி இட்டு மண்ணுடன் கலந்து பின்னர் நீர் பாய்ச்சவேண்டும்.

மல்லிகை மகசூலைப் பாதிக்கின்ற அடுத்த விஷயம் மொட்டுப்புழு. இந்தப் புழுக்கள் இளம் மொட்டுக்களை தாக்கி பலத்த பொருளாதார இழப்பை உண்டு செய்யும். இயற்கை வழி விவசாயிகள் மூலிகை பூச்சி விரட்டியை தெளித்து மல்லிகை மொட்டுப் புழுவை கட்டுப்படுத்தலாம். ரசாயன விவசாயிகள் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி மோனோ குரோட்டா பாஸ் பூச்சி கொல்லி நஞ்சைத் தெளித்து மல்லிகை மொட்டுப் புழுவைக் கட்டுப்படுத்தலாம். இலைகளை கடித்து சேதப்படுத்தும் சிலந்திப் பூச்சியை கட்டுப்படுத்த நனையும் கந்தகத் தூளை 0.2 சதவிகிதம் என்கின்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

மகசூல் ஏக்கருக்கு

1 ம் ஆண்டு

500 கிலோ

2 வது ஆண்டு

1000 கிலோ

3 வது ஆண்டு

2000 கிலோ

4 ஆண்டுக்குமேல்

3500 கிலோ

மல்லிகைச் செடியானது மார்ச், ஏப்ரல் மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். செடிகள் நட்ட முதல் ஆண்டிலேயே பூக்க ஆரம்பித்தாலும் செடியின் வளர்ச்சிக்கு ஏற்பத்தான் மகசூல் அதிகரிக்கும். சுமார் 15 ஆண்டு காலத்திற்கு தொடர் வருமானம் கொடுக்கும். மல்லிகைச் செடியைப் பொருத்தவரை பராமரிப்பு மிகவும் முக்கியம். களையின்றி நிலத்தை பராமரிப்பது, சரியான சமயத்தில் தண்ணீர் பாசனம் செய்வது, பூச்சி நோய்த் தாக்குதல்களை கவனித்து உடனடியாக அதற்கு நிவாரணம் தேடுவது என தொழிலை நன்றாக கவனித்தால் நல்ல வருமானம் நிச்சயம்.



ஒருமுறை அரும்பு எடுக்கத் துவங்கிய பின்னர் தினமும் புதுப்புது மொட்டுகள் தோன்றிக் கொண்டே இருக்கும். செடியின் அனைத்துப் பகுதிகளிலும் மொட்டுகள் தோன்றியதும் மல்லிகை மகசூல் குறையத் துவங்கும். இவ்வாறு ஒரு சுழற்சி மொட்டுக்கள் தோன்றி மகசூல் குறைவதற்கு, ‘ஒரு கன்னி’ என வழக்கு சொல்லில் கூறுவர். ஒரு முறை மகசூல் ஒய்ந்ததும் லேசாக கவாத்து செய்து ரசாயன உரமோ, இயற்கை உரமோ வைத்து நீர்ப் பாய்ச்சினால் புதுப்புதுக் கிளைகள் தோன்றும். அதிக அளவில் மொட்டுக்கள் தோன்றும். மல்லிகை மகசூலில் சீசன், ஆஃப் சீசன் உண்டு. சீசனில் கிலோ 100 ரூபாய்க்கும் குறையாமல் விற்பனையாகும் மல்லிகை, ஆஃப் சீசனில் கிலோ 2000 ரூபாய்க்கும் வந்து நிற்கும். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாத பனிக்காலம் தான் ஆஃப் சீசன். வழக்கமான முறையில் செய்பவர்களுக்கு இந்த மாதங்களில் பூ வரத்து இருக்காது. ஆனால் விலை உச்சத்தில் இருக்கும். சீசன் இல்லாத மாதங்களில் என்ன விலை கொடுத்தும் பூ வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக இருப்பார்கள்.

வருடம் முழுவதும் ஒரே சீராக மல்லிகையில் மகசூல் எடுக்க பசுமைக்குடில் (Poly House) தொழில்நுட்பம்தான் ஏற்றது. பசுமைக் குடில் அமைக்க ஆரம்ப கட்ட மூலதன முதலீடு அதிகம். தோட்டக்கலைத் துறை பசுமை குடில் அமைக்க மானியம் தருகின்றன. வங்கிகளிலும் கடனுதவிச் செய்யத் தயாராக உள்ளனர். பசுமைக் குடிலில் மல்லிகை வளர்த்தால் பனிக்காலத்திலும் மகசூல் எடுக்கலாம். பசுமைக் குடிலுக்குள் போகர் Fogger எனும் நுண் நீர் பாசனம் அமைத்தால் ஆண்டு முழுவதும் ஒரே சீரான தட்ப வெப்ப நிலையை பராமரிக்கலாம். போகர் பாசனத்தினால் செடிகள் மேல் தூறல் போல தண்ணீர் விழுவதால் செடிகள் பச்சை பசேலென்றிருக்கும். பசுமைக் கூடாரத்திற்குள் மழை, வெயில், காற்று, பனி என்ற எவ்வித தட்பவெப்ப நிலையும் பாதிக்காததால், மல்லிகைக்குத் தேவையான தட்பவெப்ப சூழ்நிலையை ஆண்டு முழுவதும் ஒரே போல பராமரிக்கலாம். அதனால் ஆண்டு முழுவதும் ஒரே சீரான மகசூல் கிடைக்கும்.

பசுமைக் குடிலில் சாகுபடி செய்யும்போது கவாத்து செய்த 25 நாட்களில் அரும்பு வெளிவரும். அடுத்த 20 வது நாளில் மலரைப் பறிக்கலாம். ஆனால் திறந்தவெளியில் வழக்கமான முறையில் சாகுபடி செய்யும்போது கவாத்து செய்த பின்னர் பூ எடுக்க 3 மாத காலம் ஆகிவிடும். பசுமைக் குடிலுக்குள் ஒரே சீரான தட்ப வெப்ப நிலை பராமரிக்கப்படுவதாலும், மூடிய அறையில் வளர்ப்பதாலும் பூச்சிகள் தாக்குதலுக்கும் நோய் தாக்குதலுக்கும் வாய்ப்பில்லை. வழக்கமான சாகுபடியை விடப் பசுமைக் குடிலுக்குள் சாகுபடிச் செலவு மிகக் குறைவு. அடுத்த அரும்பு சீக்கிரம் வருவதால் மகசூல் விரைவாகவும் அதிகமாகவும் கிடைக்கும். பூவின் காம்புகள் அடர் பச்சை நிறத்தில் திடமாக இருக்கும். பூ மொட்டுகளின் அளவும் பெரிதாக, பருமனாக இருக்கும். வழக்கமான சாகுபடி முறையில் பறிக்கப்படுகின்றன மல்லிகை மொட்டுகள் விரைவில் மலர்ந்துவிடும். ஆனால் பசுமைக் குடிலுக்குள் அறுவடையாகின்ற மல்லிகை மொட்டுகள் நான்கு மணிநேரம் கழித்துதான் மலரும். இதனால் பூவின் தரம் மேம்படுகின்றது.

ஆரம்ப கட்ட மூலதனம் பசுமைக் குடிலுக்கு அதிகம்தான். ஆனால் அதன் மூலதனத்தை விலை அதிகமான நேரத்தில் வரும் மகசூல் விரைவில் மீட்டு எடுத்துக் கொடுத்துவிடும். மல்லிகையை மொட்டாகப் பறித்து எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அருகிலுள்ள நகரத்து மலர் சந்தைக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவில் அனுப்பி விற்பனை செய்யவேண்டும். கிராமத்து விவசாய பெரியவர்கள் சொல்வார்கள் ‘மொத வேலை முத்து வேலை’.



இந்த மல்லிகை ஏற்றுமதியாளர்களால் வாங்கப்பட்டு மின்னல் வேகத்தில் வாடிக்கையாகப் பூ தொடுத்துக்கொடுக்கும் நபர்களுக்கு கொடுத்துப் பூவை சரமாக தொடுத்து, உடனடியாக பேக் செய்து உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மதுரை மல்லியை மாலையில் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வழியே நடந்து செல்லும்போது முழம் போட்டு விற்கும் ஆட்களை பார்க்கும் போது சின்னஞ்சிறிய வெண்மை நிறப் பூக்களில் பின்னே இத்தனை தொழில்நுட்பமும் வியாபார ரகசியமும் இருக்கின்றதா என வியக்க வைக்கிறது!

எழுதியவர் : (26-Dec-15, 4:53 pm)
பார்வை : 1964

மேலே