10ஆதாமின் அப்துல்லா - பொள்ளாச்சி அபி

சூரியன் உதித்து அரைமணி நேரத்திற்குப் பின்னும் மிகச் சோம்பலாய்த்தான் வெயிலை வீசிக் கொண்டிருந்தான்.சின்னக்கடைவீதி முழுக்க பொருட்களைக் கொண்டுவந்ததும்,வாங்கிச் செல்லவும் காத்திருந்த மாட்டுவண்டிகளும் சாலையையும் நடைபாதைகளையும் அடைத்துக் கொண்டிருந்தன.தங்கள் கடைகளைத் திறக்க வேண்டி வியாபாரிகளும்,பொருட்களை வாங்கவந்த மனிதர்களும் குறுக்கும் நெடுக்குமாகப் பறபறத்தபடி இருந்தனர்.அந்தக் கூட்டத்திற்குள் ஊடுருவிப் போய்க் கொண்டிருந்த சம்சுதீன் நடக்கிறானா..ஓடுகிறானா..என்றே தெரியாத வேக நடையில் சின்னக்கடைவீதியின் முகப்பில் இருந்த தனது பழக்கடையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.

தனது கடைக்கு வேண்டிய ஆப்பிள்,ஆரஞ்சு,திராட்சைப்பழங்களைக் கொண்டுவந்திருக்கும் ட்ரக்கு வண்டி வேறு காத்திருக்கும்.தனக்கு சரக்குகள் சப்ளை பண்ணும் ஆலீஸ் துரைக்கு நிலுவையிலுள்ள தொகையனைத்தையும் இன்றைக்கு பைசா பாக்கியில்லாமல் தந்துவிடுவதாக வேறு சொல்லியிருக்கிறான்.அணாக்களும்,ரூபாய்த்தாள்களுமாக ட்ரக்கு வண்டியோட்டியிடம் கொடுத்தனுப்புவதற்காக சட்டைப்பையில் கனத்துக் கொண்டிருக்கிறது.

இதனைக் கொடுத்துவிட்டால்,அவ்வளவுதான்.இனி கையில் வேறு எந்தப் பெரிய தொகையும் இருக்காது.தன்னிடம் சரக்குகளை எடுத்துச் செல்லும் சில்லறை வியாபாரிகளிடமும், வீடுகளுக்கு விற்பனை செய்வதற்காக பழங்களை எடுத்துச் செல்லும் கூடைக்காரிகளிடமும் சற்றுக் கறாராகப் பேசி,சீக்கிரம் வசூல் செய்துவிடவேண்டும்..,மற்றவர்கள் எல்லாம் குறிப்பிட்ட தொகையை “நாளை தருகிறேன் பாய்..” என்றால்,அதில் பாதியையாவது தந்துவிடுவார்கள்.
ஆனால் இந்த முனியம்மா இருக்கிறாளே..அவளிடம் மட்டும் தனது பப்பு எந்தவிதத்திலும்
வேகாது..எதையாவது சொல்லி சமாளித்துவிடுவதும்,வழக்கம்போல தான் அதற்கு தலையாட்டிவிடுவதுமாகவேக் கழிந்து கொண்டிருக்கிறது.இன்றைக்கு விடவே கூடாது .என்ன பசப்பினாலும்,கறாறாகச் சொல்லிவிடவேண்டும்.!

சம்சுதீன் தனது கடையைத் திறந்த அரைமணி நேர பரபரப்புக்குப் பிறகு,சில்லறை வியாபாரிகளும்,கூடைக்காரிகளும் ஒவ்வொருவராக வரத்துவங்கிவிட்டனர்.முந்தைய நாள் பாக்கி,இன்றைய சரக்குக்கான தொகை என்று கணக்குப் பார்த்துப் பார்த்து தொகையை வசூலித்துவிட்டு,பற்று வரவு எழுதிக் கொண்டு,தேவையானதை அளித்து நிமிரும்போது மணி ஒன்பதுக்கும் மேலாகிவிட்டது.இனி அரிபறி ஒன்றும் இல்லை.கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் வந்து தங்கள் தேவைக்கான பழங்கள் வாங்கிக் கொண்டு செல்லும் சில்லறை வியாபாரம் மட்டும்தான் இருக்கும்.

அக்கடாவென்று கடையில் உட்கார்ந்து,இப்போது மிக நிதானமாக சுக்குக் காப்பியை ரசித்து,ருசித்துக் குடித்துக் கொண்டிருந்தான் சம்சுதீன்.

கடை வாசலில் நிழலாடியது.முனியம்மா அமைதியாக நின்றிருந்தாள்.வேகமாக நடந்து வந்திருப்பாள் போலிருக்கிறது.நெற்றியிலிருந்து வழிந்த வியர்வைத்துளிகள் மெதுவாய் கன்னங்கள் வழியே இறங்கிக் கொண்டிருந்தது. எப்போதும் செய்து கொள்ளும் முடியலங்காரமோ,நெற்றிப் பொட்டோ கூடக் காணவில்லை.வழக்கமாய்ப் பார்த்திராத சோகம் முகத்தில் அப்பிக் கொண்டிருந்தது.

தினமும் அவள் வந்தவுடன், “என்ன பாய்..உனக்கு இந்தக் கலரு சட்டை நல்லாவே இல்லையே..” என்றோ,“என்ன நேத்து மீன் குழம்பா..இங்க வரைக்கும் மணக்குது..” என்றோ..அர்த்தமில்லாமல் ஏதேனும் ஒன்றைச் சொல்லித்தான் பேச்சையே துவங்குவாள்.

இதா..நீ வந்த வேலையென்னவோ..அதை மடடும் பாரு..சும்மா வம்பு இழுக்கறதுக்குன்னே பேசாதே..!” சிடுசிடுவென்று அவன் எரிந்துவிழுந்தாலும் அதனைப் பொருட்படுத்தவே மாட்டாள் முனியம்மா.ரவிக்கை போட்டு பழக்கமில்லாத,வாளிப்பான தோள்பட்டைகள் குலுங்க,பச்சை குத்தப்பட்ட முன்னங்கைகளை நீட்டி,அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் ஆரஞ்சு,அல்லது ஆப்பிளைக் கலைத்தோ, மேலும் கீழுமாகப் தூக்கிப்பிடித்துப் போட்டோ..ஏதேனும் சேட்டைகள் செய்தபடியே, கலகலப்பாகப் பேச்சைத் தொடருவாள்.கடையில் மற்ற வியாபாரிகள் இருந்தாலும்அவள் அதைப்பற்றியெல்லாம் கவலையும் பட்டுக் கொள்வதில்லை.

“அட என்ன பாய்..பொசுக் பொசுக்குன்னு பொண்டாட்டிகிட்டே கோவிச்சுக்குற மாதிரி கோவிச்சுக்கறே..?”

“ஊம்..நீதான் எனக்குப் பொண்ணு பாத்துக் கட்டிவச்சிருக்கியில்ல..அதான் நான் தினமும் கோவிச்சுக்கறேன்..”

நீ மட்டும் சரின்னு சொல்லு..உனக்கு உடனே ஒரு பொண்ணைப் பாத்து அடுத்த முகூர்த்தத்துலேயேக் கட்டி வெச்சுர்றேன்.

இப்ப அதான் முக்கியமா.. நேத்து வாங்கிட்டுப் போனதுக்கு இப்ப அரையணா பாக்கியில்லாம எடுத்து வை.மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்..!

அப்படியா..மொதல்ல எனக்கு வேணுங்கற சரக்கெல்லாம் குடு.அப்புறம் பாத்துக்கலாம் உன் கணக்கை..!

சரி..எடு..! பழத்தைக் கலைக்காதே..மெனக்கெட்டு இப்பத்தான் அடுக்கி வெச்சுருக்கேன். எல்லாமே நல்ல பழம்தான்..!

ம்..ம்..எனக்குத் தெரியும்..!

இன்றைக்கு அதுபோன்ற உரையாடல்கள் எதுவுமேயில்லை.வந்ததிலிருந்து அமைதியாக நிற்கும் முனியம்மாவைப் பார்க்கப் பார்க்க சம்சுதீனுக்கு என்னவோ போலிருந்தது. என்ன முனியம்மா..ரொம்பவும் அமைதியா நின்னுட்டே..என்னாச்சு ஒடம்புக்கு சரியில்லையா..?

அதெல்லாம் ஒண்ணுமில்ல பாய்..எங்க அம்மாக்குத்தான் ரொம்ப முடியலை.நெஞ்சைப் புடிச்சுகிட்டு இருமிக்கிட்டே இருக்குது.அப்படி மூச்சு வாங்குது.நேத்து ஆசுபத்திரிக்கு கூட்டிட்டுப் போய் மருந்து வாங்கிக் குடுத்தும் கொஞ்சம்கூட குணம் தெரியலை.இப்ப வெளிய வர்றதுக்கும் எனக்கு மனசேயில்லை பாய்..! ஆனா என்ன பண்றது..? கையிலேயும் சுத்தமாக் காசில்லை .இன்னைக்கும் பொழப்பைப் பாக்கலேன்னா நாளைக்கு எதாவதுன்னா ஆசுபத்திரிக்குக்கூட கூட்டிட்டுப் போகமுடியாது பாய்”. அவள் பொய் சொல்பவளில்லை.சும்சுதீனுக்கு நன்றாகத் தெரியும். தலைச்சுமையோடு வீடு வீடாகச் செல்ல,வீதிவீதியாகச் சுற்றியலைந்து உழைப்பவள்.

சரி..வேணுங்கறதெல்லாம் எடுத்துக்க..கணக்கெல்லாம் நாளைக்குப் பாத்துக்கலாம்..

நானே உங்கிட்ட அப்படித்தான் சொல்லலாம்னு இருந்தேன்.நல்ல வேளை நீயே சொல்லிட்டே. .இது ரொம்ப உதவியா இருக்கும் பாய்.

அட..சும்மா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே..!” சோர்வுடன் பழங்கள் பொறுக்கிக் கொண்டிருந்தவளுக்கு,அவனும் உதவி செய்தான்.

அதற்குப் பிறகு இரண்டு நாட்களாக முனியம்மா வரவில்லை.

முதல் நாளில் அவளது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்பத்திரிக்குப் போயிருப்பாள் என்று நினைத்திருந்தவனுக்கு அடுத்தநாளும் அவள் வரவில்லை என்றவுடன், அடிவயிற்றில் ஏதோவொரு சங்கடம் பரவியது.ஒருவேளை..அந்தம்மாள்..ஏன் கண்டதையெல்லாம் நினைக்கவேண்டும்.நேரிலேயே போய் பார்த்துவிடலாம்’ என்று முடிவு செய்தவன் மாலை மூன்று மணிக்கே கடையை அடைத்துப் பூட்டிவிட்டு,சில ஆப்பிள்களையும், ஆரஞ்சுகளையும் ஒருதுணிப்பையில் போட்டு எடுத்துக் கொண்டான்.வடகோவையிலுள்ள அவளது வீட்டைத் தேடி மெதுவாக நடந்தான்.

வடகோவை ரயில்பாதையை ஒட்டி சிறிதும் பெரிதுமாக இருந்த ஏராளமான குடிசைகளில், முனியம்மாவின் குடிசையைக் கண்டுபிடிப்பதொன்றும் பெரிய விஷயமாயில்லை. அப்பகுதியில் முதலில் தென்பட்ட ஒருவரிடம் கேட்டபோதே..ஓ..நேத்து பெரிய காரியமொன்னு ஆயிடுச்சே..அந்த வீடுதானுங்களே..!

இல்லே..பழம் விக்குற முனியம்மா வீடு..,

அதான்..அதான்..தா..பாருங்க..அங்க வடக்குப் பாத்து நிக்குற குடிசைக்கு முன்னாலே..நாலஞ்சு ஆளுக குத்தவெச்சு உக்காந்து இருக்கறது தெரியுதா..?

நேர்கோட்டில் அந்தக் குடிசை தெரிந்தது. ம்..தெரியுது..!

அதுதான் முனியம்மாவோட வீடு..போய்ப் பாருங்க..என்றபடியே அவர் கடந்து சென்றார்.

குடிசையின் வாயிலுக்கு செல்லும் முன்பே யாரோ ஒரு வயசாளி, வாங்க தம்பி..நேத்து வரமுடியலைங்களா..? இருமி இருமியே செத்துப் போனா..அந்தக் கெழவி.பாவம்..இந்த முனியம்மா..இனி தனியாவே அவளோட எல்லாக் காரியங்களையும் எப்படித்தான் பார்ப்பாளோ..?

குடிசைக்குள் நுழையலாமா..இங்கேயே நிற்கலாமா..என்று சம்சுதீன் யோசித்துக் கொண்டிருந்த போதே .."உள்ள போங்க தம்பி..தெரிஞ்சவங்க நாலு பேரு அந்தப்புள்ளைக்கு ஆறுதல் சொன்னாத்தானே அவளுக்கும் தெகிரியமா இருக்கும்..!"

சம்சுதீன் குனிந்து நுழைந்தான்.நிமிர்ந்தவன் கண்களில் உள்ளிருந்த இருட்டு அப்பிக் கொண்டது. சில விநாடிகள் இருந்த இடத்தைவிட்டு அசையவேயில்லை.

"வாங்க பாய்.." ஒரு மூலையில் இருந்து வரவேற்ற குரல் முனியம்மாவுடையது.!

----------------- தொடரும் ...

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (30-Dec-15, 8:28 pm)
பார்வை : 98

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே