அந்த நிமிடங்கள்

இரவு முழுவதும் தூங்காமல் விடியல் காண வேண்டிய ஒரு புது முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன் அன்று . சரி விடியல் வருவதற்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கிறதே என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது செல்போன் மணி ஒலித்தது இரவில் நானிருந்த அனைத்து வாட்சாப் (சரி ! இந்த வாட்சாப் என்பதற்கான தமிழ் சொல்லை இன்னும் யாரும் கண்டுபிடிக்கவே இல்லையா ? இல்லை என்னக்கு தான் தெரியாமல் இருக்கிறதா ? பிறகு பார்ப்போம் ) குழுக்களிலும் உள்ள சக தோழர்களும் தோழியர்களும் வாழ்த்து பகிர்த்து கொண்டிருந்தனர். சரி நாமும் ஒரு வாழ்த்துப் பதிவைப் போடுவோம் (அப்பத் தான நம்மளும் இருக்கோம்னு காட்டிக்க முடியும்) என்று நினைத்துத் தட்டச்சு செய்ய எனது அலைபேசியின் அழகிய இடையை இரு கரம் கொண்டு பூ போல ஏந்திய சமயம் சட்டென்று உதயமானது எனது பழைய புத்தாண்டுகளின் நினைவுகள். இந்தப் பதினேழாம் வயதில் நான் கண்ட இந்த ஸ்மார்ட் போனும் இண்டர்நெட்டும் ஒரு மூன்று ஆண்டுகட்கு முன்பு எனக்குப் பரிச்சயமானவையே அன்றி அதற்கு முன்பெல்லாம் இருந்த புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எனது நினைவுத் திரையில் குறுகிய ஒளிப்படமாய் ஓடிக் கொண்டே இருந்தன (அந்த டொக் டொக் என்ற வாட்சாப் செய்திகளின் சத்தத்தில் அவையெல்லாம் இனிமையாக நகர்ந்தன). அப்பொழுது எனக்கு வயது பதிமூன்று இருக்கும் இரவில் வெடி சத்தம் கேட்டு பதறி அடித்து 'ஓஹோ புத்தாண்டோ' என்று ஆசுவாசப் படுத்திக்கொண்ட காட்சி இதழோரம் சிரிப்பை ஏற்படுத்தியது. அந்தச் சிரிப்போடு படங்களை கொஞ்சம் ஓட்டுகையில் பதினான்காம் வயதின் புத்தாண்டு, பருவ மாற்றங்களுக்கு இடமளித்த வயதில் ஒரு பைத்தியக் காரனைப் போல 'எதற்காக வாழ்கிறோம்' என்ற கேள்விகள் நெஞ்சம் நிறைக்க கொட்டக் கொட்ட விழித்த காட்சிகள் மனதோரம் புரியாதா ஒரு கசப்பினைத் தந்தது. திடீரென வந்த மற்றொரு டொக் சத்தம் என்னை சுய நினைவுக்குக் கொண்டு வர வாட்சாப்பில் பதிவினைப் போடா ஆயத்த மாயினேன். சரி இது நவீன காலம் நம்மிடம் எல்லாம் இருக்கிறது , அதாவது உலகமே இருக்கிறது. எந்த மாதிரி ஒரு வாழ்த்து போடலாம் என்று ஒரு எண்ணம் எழுந்தது ! சரி என்ன செய்யலாம் யோசித்திக் கொண்டே கடிகாரத்தின் நகர்வினைக் கவனித்துக் கொண்டே இருந்தேன். சும்மா எப்பொழுதும் போல இல்லாத இந்த வாழ்த்துக் கவிதை கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டுமென்று யோசித்தேன். (வெறும் கடிகாரத்தின் நகர்வு என்ன தந்துவிடப் போகிறது என்று எண்ணுகிறீர்களா சும்மா ஒரு சிந்தனை ஓட்டதிற்காகத் தான் மேலும் கை வசம் நம்ம தளபதி போல ஒரு கியூப் இல்லாத காரணமும் தான்) வெறுப்போடும் கசப்போடும் இருந்தது இல்லாமல் சந்தோசமாக இந்தப் புத்தாண்டுக்குள் அடியெடுத்து வைக்க ஒரு ஆசை நெஞ்சில் துளிர்விட்டது. சரி ஒரு ஹைக்கூ படைத்து வாழ்த்து சொல்வோம் என்று நினைத்தேன். கடிகாரத்தின் முட்களின் நகர்வை விட்டு என் விழிகள் மட்டும் நகராத நிலையில் அப்படியே இருந்தன. திடீரென சுவற்றின் மேலிருந்து ஒரு பல்லி எனது வலது கழுத்தோரம் பட்டு கீழே விழுந்தது நான் திடுக்கிட்ட அந்த ஒரு தருணத்தில் மீண்டும் ஒரு பதட்டத்தோடு பிறந்து விட்டது இந்தப் புத்தாண்டு
(ச்ச அந்தப் பல்லி மட்டும் கைல கிடச்சிச்சி...) சரி வாழ்த்தையாவது சொல்வோம் என்று எண்ணுகையில் பிறந்துவிட்டது ஹைக்கூ....

ஒரு பல்லி விழுந்திட
பிறந்தே விட்டது
காண நினைத்த புத்தாண்டு !


-விவேக்பாரதி

(ஆஹான் ! சொல்ல மறந்துட்டேனே) விடியலைக் காணும் வரை உறங்குவதில்லை என்ற ஒரு தீர்மானம் பல்லியின் வீழ்ச்சியால் கலைந்து போய் தூக்கத்தில் ஆழ்த்திவிட்டது ( உண்மையச் சொல்லணும் என்றால் எனக்கு தூக்கம் வந்து விட்டது....ஹா ஹா வெளியே எங்கேயும் சொல்லிடாதீங்க )

எழுதியவர் : விவேக்பாரதி (1-Jan-16, 1:16 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
Tanglish : antha nimidangal
பார்வை : 118

மேலே