குறட்பா வித்தகம் - 2

சீர்காழி சம்பந்தர் செப்பிய தேவாரம்
சேர்ந்தே யிசைத்திடச் சீர் .

மதுரையின் மல்லிகை வாசம் கொடுக்கும்
புதுமையில் தோற்கும் மது .

திருப்பதி சென்றால் திருப்பம் வருமாம்
விருப்புடன் தூங்கா திரு .

குளித்தலையில் தைப்பூசக் கொண்டாட்டம் கண்டு
களிப்புடன்கா வேரி குளி

தேனியின் கூட்டைச் சிதைத்திடில் கொட்டிடும்
மேனி நடுங்கிடு தே !

கொடைக்கானல் ஏரியும் கூடும் முகிலும்
விடைதல் விலக்கும் கொடை .

இராய புரத்தில் துறைமுக முண்டே
இராப்போதி லச்சம் இரா .

விருதுநகர் மாரியம்மன் மேன்மை யுடனே
தருவாள் கவிக்கு விருது .

கடலூரைத் தாக்கும் கடும்புயலால் சத்தம்
அடங்காமல் சீறும் கடல் .

பட்டுக்கோட் டையாரின் பாட்டின் இனிமையில்
மொட்டவி ழும்கவரப் பட்டு .

குறட்பா வித்தகம் :முதற்சொல் முடிவில்
*************************************************************
[இந்த உத்தியில் முதற்சீரில் வரும் சொல் ஈற்றுச் சீர்களில்
வேறு பொருளில் வரும்.]

இப்பாக்களில் முதல் சீர் ஊர் பெயரைச் சுமந்து வந்துள்ளது .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Jan-16, 1:49 am)
பார்வை : 93

மேலே