தமிழ் அவமானம் அல்ல நம் அடையாளம்
ஆதியிலே பிறந்த தமிழ்
சாதியினை துறந்த தமிழ்
இதர பல மொழிகளையும்
ஈன்றெடுத்த இனிய தமிழ் - உன்னை
பாதியிலே வந்த மொழி
பகட்டான ஆங்கிலம் பால்
ஏக்கம் கொண்ட உன் மக்கள்
எறிந்தனரோ வீதியிலே...!
ஆண்டி முதல் அரசன் வரை
அத்துனை பேரின் வாழ்க்கை முறை
ஈரடியில் ஈந்த எம் தாய் மொழியாம் தமிழுனக்கு
ஈடு இணை எந்த மொழி...?
ஐம்பெருங் காப்பியமும்,
ஆய கலை அறுபத்து நாலும்
அழகுறத் தந்த தமிழ்
அகில உலகின் அரிய மொழி
இயல், இசை, நாடகமும்
ஈடில்லா இலக்கணமும்
தன்னகத்தே கொண்ட தமிழ்
தரணியிலே தனித்த மொழி
அத்தகைய ஆதி மொழி
அகல் விளக்கு ஜோதி மொழி
உலகத்து செம்மொழியாம்
உயர் தமிழர் நம்மொழியாம்
நம் தாய்மொழி தமிழிருக்க
நாகரிகம் என்றெண்ணி
பிற மொழியில் பேசுவோரே,
உம்மைப் பெற்றெடுத்த தாயிருக்க
பிறதாயை தேடுவீரோ...!
வெற்றித்தாயின் மடியில் பிறந்த வீரத்தமிழா...
பெருமையுடன் மார் தட்டு
நீ மிகத்தொன்மையான மொழியின் மரபுவழி வந்த பச்சைத் தமிழன்
அத்தமிழின் பெருமையை பறை சாற்றும் வகையில்
உலகிற்கு உரக்கச் சொல்,
எட்டுத்திக்கும் ஒலிக்கச் சொல்,
வான் எட்டும் வரை எகிறிச் சொல்
"தமிழ் அவமானம் அல்ல
எங்கள் அடையாளம்" என்று
திராவிடன் எனும் பெயருடன்
சற்றே தமிழன் எனும் திமிருடன்.