காலைச் சாரல் 23 - குணம்

04-01-2016

அதிகாலை எண்ணங்கள்..

அதிகாலை எழுந்தவுடன் ஐந்து மணி அளவில் மாடத்தில் வந்து அமர்ந்து பார்த்தால் அந்த எதிர் கட்டத்தின் உச்சியில் வானத்தில் ஒரு விமானம் வருவதுபோல் வெளிச்சம்... மீனம்பாக்கம் அந்தப் பக்கம் இருப்பதால் விமானம் என நினைத்தேன்.. எழுந்தவுடன் கண்கள் மச மச வென்று இருக்க அதிலிருந்து ஒளிக் கீற்றுக்களும் தெரிந்தன... அடுத்த நாளும் அதே நேரத்தில், அதே ஓளி, அதே இடத்தில்.... அதே கோணத்தில் என்னைக் கண் காணிப்பதுபோல்.. கொஞ்சம் தீவிரமாகப் பார்க்க, ஒரு நட்சத்திரம் என்றே நினைக்கிறேன்... சூரியன் வரும்வரை அங்கே இருந்துவிட்டு மறைந்துவிடுகிறது....

வானின் இரவுக் குத்தகைக்காரன்(ரி) நிலா சில நாட்கள் அதன் அருகிலும், காணாமலும், சற்றுத் தள்ளியும், தன்னிஷ்டத்திற்கு வானத்தில் வலம் வர இந்த நட்சத்திரம் அதே இடத்தில் தான்.... இதை நான் ஒரு இரண்டு வாரமாகத்தான் கவனிக்கிறேன்.... தொடர்ந்து எவ்வளவு நாட்கள் தெரிகிறது என்று பார்க்க வேண்டும்... நான் அதிகாலை எழாத நாட்களிலும் வந்து என் மாடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்றே எண்ணுகிறேன்...

****
ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் நிற்பது, இங்கும் அங்கும் அலைவது இவை அவரவர் குணாதிசையமாகக் கொண்டாலும், நிறைய பழக்கங்கள் / குணங்கள் பயிற்சியால் பெறலாம்..

உதாரணமாக...

உணவு - அளவோடு / கட்டுப்பாடின்றி, பிடிக்கும் / பிடிக்காது, குறிப்பிட்ட நேரத்தில் / எப்பொழுது வேண்டுமெனிலும் ...

தூக்கம் - அதிகாலை எழுவது, முடியும் வரை தூங்குவது.... இரவு வெகு நேரம் விழிப்பது, சீக்கிரம் தூங்குவது...

வேலை / படிப்பு - சிரத்தையின்றி இருப்பது, மிதமாகச் செய்வது, தீவிரம்/மிகத்தீவிரம்...

ஒழுக்கம் - நேரம் தவறாமை / மெய் - பொய் / கண்ணியம் காத்தல்.. / உடல் நலம் / பிறர் நலம் / பிறரை மதிப்பது / தீய பழக்கங்கள்

வாழ்வியல் - அன்பு / நேசம் / சேமிப்பு / சிக்கனம் - ஊதாரித்தனம் /தன்னலம் / குடும்ப நலம் / சமுதாய நலம் ...

****

எல்லா குணங்களிலும் நல்லவை தீயவை இருக்க நாம் தேர்வு செய்பவையே நம்முடன் இருக்கும்.. நாம் தேர்வு செய்பவை நம்மால் பழகப்பட்டு அவை நம்முடையதாக அவையே நாமாக ஆகிறோம்...

எதற்கும் உணர்ச்சி வசப்பட்டு கோபப்பட்டு வெளிப்படுத்துவது ஒரு குணமாகப் பயின்று உள்ளோமெனில், சற்று நிதானித்து ஆராய்ந்து பதட்டமில்லாமல் பதில் அளிப்பத்தையும் ஒரு குணமாகப் பயிலலாம்...
****

நம் முன்னே கடைவைக்கப் பட்டுள்ள குணங்களில் எதை நாம் தேர்வு செய்து பழகுகிறோமோ அதுவாக நாம் ஆகிறோம்...

வெற்றியும் தோல்வியும், சாதனையும், வேதனையும், நம்மால் நாமே தேர்வு செய்யப்படுகிறது - பிறர் கொடுப்பது அல்ல (இது புதுசு அல்ல - அன்றே ஓளவை அருளிச் சென்றதுதான்)

அதிகமாக தீயனவற்றை உல்லங்கனம் செய்ய, மிகுதியாக நல்லன தங்கும்...
****

நட்சத்திரம் ஓரிடத்தில் நிற்கும்.. நிலா சுற்றிச் சுற்றி வரும்...
இவற்றிலிருந்து வித்தியாசப்படும் மனிதன் -
இவைகளிலிருந்து தெரிவு செய்யக் கற்றவன்..


---- முரளி

எழுதியவர் : வாழ்க்கை (4-Jan-16, 7:29 am)
பார்வை : 177

மேலே