பொய்மையும் வாய்மையிடத்து

மூச்சிறைக்க, உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான், டாக்டர் வீரா. மொபைல்போன் அதிர, டாக்டர் அசோக்கின் அழைப்பை பார்த்ததும், ''சொல்லு அசோக்...'' என்றான்.
''வீரா... காலையிலேயே உன்னை தொந்தரவு செய்றதுக்கு மன்னிச்சுக்க. இப்ப நான் ஊர்ல இருக்கேன்; உடம்பு முடியாம இருந்த என் மாமனார் இறந்துட்டாரு,'' என்றான்.

''அடடே... இப்ப, நான் அங்க வரவா?'' என்று கேட்டான்.
''அதெல்லாம் வேணாம்; நான் பாத்துகிறேன். இப்ப நான் கூப்பிட்டது வேற விஷயத்துக்கு... இன்னிக்கி, உனக்கு ஆபரேஷன் ஏதும் இருக்கா?''
''இல்ல; ரெகுலர் ஒர்க் தான்.''

''நல்லதாப் போச்சு; என் பேஷன்ட் ஒருத்தருக்கு, இன்னைக்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி... வயசானவரு. சுகர், ரத்த அழுத்தம்ன்னு எல்லாத்தையும் சரி செய்தாச்சு. இப்ப இருக்கற சூழ்நிலையில, நான் போக முடியாது; அதான் உன்னால முடியுமான்னு கேக்கத்தான் போன் செய்தேன்,'' என்றான்.

''கவலைப்படாத... நான் பாத்துக்கறேன்; கேஸ் பத்தின தகவல் யாருக்கு தெரியும்?''
''சீப் நர்ஸ் சகுந்தலா தான், 'டீல்' செய்றாங்க... நீ ஆஸ்பத்திரிக்கு போனா அவங்க குடுப்பாங்க.''
''ஓகே... எத்தனை மணிக்கு, 'பிக்ஸ்' பண்ணியிருக்க?''
''11:30க்கு!''
''நான் ரெகுலர் டூட்டிய முடிச்சுட்டு போய் பாத்துக்கறேன்; நீ அங்க உள்ள வேலைய பாரு,'' என்று சொல்லி, இணைப்பை துண்டித்தான் வீரா.

மருத்துவனையில் வழக்கத்தை விட வேலைகள் சீக்கிரமாகவே முடிந்து விட்டதால், அசோக்கின் மருத்துவமனைக்கு கிளம்பினான் வீரா. இவனை பார்த்ததும், எழுந்து வந்த நர்ஸ், நோயாளியின் பைலைக் கொடுத்தாள்.

பெயர் தர்மராஜன்; வயது, 60. சுகர், ரத்த அழுத்தம்ன்னு பல வியாதிகளுடன், இதய நோயும் இருந்தது. காலையில் எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்டில், எல்லாம் நார்மல் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

''பேஷன்ட பாத்துடுவோமா...'' என்றான், நர்சிடம்!
''வாங்க சார்...'' என்று, 6ம் எண் அறைக்கு கூட்டி சென்றாள் நர்ஸ். அறைக்கு வெளியில் அமர்ந்திருந்தோரில் சிலரை எங்கோ பார்த்தது போன்று இருந்தது.
அறைக்குள் நுழைந்து பேஷன்டை பார்த்த போது, தூக்கி வாரி போட்டது.
'அடப்பாவி... நீயா...' என்று மனம் கொதித்தது.

இவன் முகத்தில் ஏற்பட்ட மாறுதலைக் கவனித்த நர்ஸ், ''என்ன சார்... என்னாச்சு...'' என்றாள்.
''ஒண்ணுமில்ல...'' என்று கூறிக்கொண்டே, வெளியே வந்த போது, நோயாளியின் உறவினர்கள் அனைவரையும், அவனுக்கு அடையாளம் தெரிந்தது.
வேகமாக தன் அறைக்குள் நுழைந்தவன், இருக்கையில், 'தொப்'பென்று அமர்ந்தான்.
''என்ன சார்... பேஷன்ட பாத்ததும் ஒரு மாதிரி ஆகிட்டீங்க... தெரிஞ்சவங்களா...'' என்றாள் நர்ஸ்.

என்ன சொல்வது என்று புரியாமல், வெறுமனே தலையை ஆட்டினான் வீரா.
''இப்ப என்ன சார் செய்ய... ஆபரேஷன் தியேட்டர, 'ரெடி' செய்யவா... இல்ல ஆபரேஷன் செய்ற நாள தள்ளி வச்சுடலாமா?'' என்று கேட்டாள்.
மருத்துவக் கல்லூரியின் இறுதி நாளில் பேராசிரியர் ராகவாச்சாரி கூறியது, நினைவுக்கு வந்தது...

'உன் முன் நிற்கும் நோயாளி, உனக்கு வேண்டியவனாகவோ, வேண்டாதவனாகவோ இருக்கலாம்; ஆனால், அந்த இடத்தில், அவன், உன்னால் தன் உயிர் காப்பாற்றப்படும் என, உன்னை நம்பி வந்த ஜீவன். எனவே, உன் சொந்த பிரச்னைகளை ஒதுக்கி வைத்து, அவன் நோயாளி; அவனை காப்பாற்ற, ஆண்டவனால் நீ அனுப்பப்பட்டவன் என்ற சிந்தனை மட்டுமே உனக்குள் இருக்க வேண்டும்; பிற சிந்தனைகளுக்கு அங்கே இடமில்லை...' என்று கூறியது, மனதில் ஓடியது.

''சார்...'' என்ற நர்சின் குரலில், நினைவுக்கு வந்தவன், ''சிஸ்டர்... தியேட்டர ரெடி பண்ணுங்க; நான் தயார்,'' என்றான்.
மனம் முழுவதும், தன் பேராசிரியர் நிறைந்திருக்க, ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தான்.
தியேட்டரை விட்டு வெளியே வந்த அவனை, நோயாளியின் உறவுவினர் சூழ்ந்து, 'சார்... எங்கய்யா எப்படி இருக்காங்க... நாங்க எப்ப பாக்கலாம்; எப்ப நினைவு வரும்...' என, இவன் சொல்லும் பதிலுக்காக, ஆவலுடன் முகத்தையே பார்த்தனர்.

''ஒரு பிரச்னையுமில்ல... நல்லபடியா முடிஞ்சது. கொஞ்சம் செக்கப் இருக்கு... முடிச்சுட்டதும் வார்டுக்கு கொண்டு வந்துடுவாங்க; தைரியமா இருங்க. சீக்கிரமாவே பேச ஆரம்பிச்சுடுவாரு,'' என்று சொன்னதும், காதில், பாம்படம் மாட்டியிருந்த கிழவி, ''அய்யா... நீங்க தான் எங்க குலசாமி...'' என்று கூறி வீராவின் காலில், படாரென்று விழுந்தாள்.

''அடேடே... எழுந்திருங்கம்மா... எல்லாம் கடவுள் செயல்,'' என்றவன், அங்கிருந்து விலகி, தன் அறைக்கு வந்து, கிளவுசை கழற்றியவன் மனதில், பழைய நினைவுகள் நிழலாடியது.
'இருபது ஆண்டுகளுக்கு முன், ஜாதி பிரச்னைக்காக, எங்கள ஓட ஓட விரட்டினீங்க. இன்னைக்கு நான் உங்க குலசாமியா... சுய நினைவு திரும்பட்டும்; நாக்கை பிடுங்குறது மாதிரி, 'நறுக்'ன்னு நாலு கேள்வி கேட்குறேன்...' என்று நினைத்துக்கொண்டே மொபைலை எடுத்துப் பார்த்த போது, கணபதி வாத்தியாரிடமிருந்து, 'மிஸ்டு' கால் வந்திருந்தது. கணபதி வாத்தியார், அவனது பள்ளி ஆசிரியர்; ஊரில் அனைவராலும் மதிக்கப்படும் மனிதர். மீண்டும் அவன் நினைவுகள் பின்னோக்கி சென்றது.

இருபது ஆண்டுகளுக்கு முன், ஒருநாள் மாலையில், வீராவின் வீட்டுக்கு வந்த கணபதி வாத்தியார், அவன் தந்தையைக் கூப்பிட்டு, 'முனியா... நம்ம ஊர் பெருந்தனத்தோட கரும்புத் தோட்டத்துல, உங்க ஜாதிக்காரங்க யாரோ தீ வச்சுட்டாங்களாம்; அதனால, அவங்க ஜாதிக்காரங்க காலனிய கொளுத்தப் போறோம்ன்னு கோபத்துல இருக்காங்க; உடனே, நீங்க எல்லாரும் இங்கிருந்து கிளம்புங்க...' என்றார்.

'என்னாங்கய்யா திடீர்ன்னு இப்படி சொல்றீங்க... எங்களுக்கும், தீ வெச்சவங்களுக்கும், எந்த தொடர்பும் கிடையாதுன்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியுமில்ல... எம்மவனுக்கு பேர் வெச்சதே, நம்ம பெருந்தனம் தான்; அப்பறம் எப்படி பிரச்னை வரும்...' என்று கேட்டார், வீராவின் தந்தை.

'முனியா... காலனிய கொளுத்தப் போறது நம்மூர்க்காரங்க இல்ல; வெளியூர்ல இருந்து ஆளுங்க வரானுங்களாம்... அவனுங்களுக்கு காலனி வீடுன்னு தான் தெரியுமே தவிர, பெருந்தனத்துக்கு வேண்டியவன், வேண்டாதவன்னெல்லாம் தெரியாது. உங்க ஜாதிக்காரங்களும், வெளியூர்ல இருந்து, ஆளுங்கள தயார் செய்துருக்காங்களாம்... அதனால, இப்பயே கிளம்புங்க... கிழக்கயோ, மேற்கயோ போகாதீங்க; நேரா வடக்க போயி, மெயின் ரோட்ல வர்ற பஸ்ச பிடிச்சு, மதுரைக்கு போயிடுங்க. இதுல, என் அண்ணன் வீட்டு அட்ரஸ் இருக்கு; அவங்க வீட்டுக்குப் போங்க. ஊர்ல பிரச்னை சரியானதும், நான் வந்து கூப்புடுறேன்...' என்றார்.

பிறந்து வளர்ந்த ஊரையும், ஆடு, மாடுகள், உடைமைகள் என, அனைத்தையும் விட்டு விட்டு, உயிரைக் கையில் பிடித்தபடி, முனியனும், அவன் தம்பி குடும்பத்தினரும் மதுரை வந்தனர்.

கணபதி வாத்தியார் சொன்னது போலவே, அன்றிரவு ஊர் பற்றி எரிந்தது, செய்திதாள்களில் பெரிதாக வந்தது. வீராவின் வீடு, வைக்கோல் போர் அனைத்தும், கருகிக் கிடந்தது. எதிர் தரப்பிலும் பெரும் சேதம். அத்துடன், ஊருக்குள் அமைதியை திரும்ப விடாமல், அரசியல்வாதிகள் ஊதிக் கொண்டே இருக்க, நாட்கள் வாரமாகி, வாரம் மாதமானது. எவ்வளவு நாட்கள் தான் பள்ளி கூடத்துக்கு செல்லாமல் இருக்க முடியும். ஒரு மாதம் கழித்து வந்த கணபதி வாத்தியார், தன் அண்ணனிடம் சொல்லி, மதுரையில் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் சேர்த்து விட்டார்.

அதற்குப் பின் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பவே இல்லை. சில ஆண்டுகளுக்குப் பின், கணபதி வாத்தியாரின் அண்ணனுக்கு சென்னைக்கு மாற்றலாக, வீரா குடும்பத்தையும், உடன் அழைத்துச் சென்றார். சென்னையில் வீராவின் கல்லூரிப் படிப்பு தொடர்ந்தது. இயல்பாகவே, நன்றாக படிக்கும் வீராவுக்கு, சென்னை வாசம் கைகொடுக்க, படிப்படியாக முன்னேறி, இன்று இந்த இடத்தை அடைந்துள்ளான்.
'உயிரோடு வாழ்வதற்கு காரணமே, கணபதி வாத்தியாரும், அவர் அண்ணனின் குடும்பமும் தான்...' என்ற எண்ணம், வீரா குடும்பத்தினருக்கு உண்டு.

அவன் நினைவுகளை கலைக்கும் விதமாக, மொபைல் போன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தான்; கணபதி வாத்தியாரிடம் இருந்து அழைப்பு.
'' சொல்லுங்க சார்...'' என்றவனிடம், ''வீரா... நம்மூரு பெருந்தனத்துக்கு ஆபரேஷன்னு சென்னையில சேத்துருக்காங்க; அந்த ஆஸ்பத்திரியில, உனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா, நல்லா பாக்கச் சொல்லு. நான், இன்னும் ஒரு மணி நேரத்துல சென்னை வந்துடுவேன்; நேரா உங்க வீட்டுக்குத் தான் வரேன்,'' என்றார்.

மருத்துவமனையில் ரவுண்ட்ஸ் போய் விட்டு, வீட்டுக்கு புறப்பட்டான் வீரா.
வீட்டுக்குள் நுழையும் போது, அப்பாவிடம், கணபதி வாத்தியார் பேசுவது கேட்டது.
''இன்னைக்கு நீங்க நல்லாயிருக்கீங்கன்னா, அதுக்கு, இப்ப ஆஸ்பத்திரில கிடக்கறாரே நம்ம பெருந்தனம்... அவரும் ஒரு காரணம். அன்னிக்கு, காலனிய கொளுத்தப் போறாங்கன்னதும், 'நம்ம பண்ணக்காரங்களுக்கு எதுவும் நடந்துடக் கூடாது; இந்த சூழ்நிலையில அங்க நான் போனா, வேற மாதிரி பிரச்னையாயிடும்; அதனால, நீங்க போயி அவங்கள உடனே ஊர விட்டு கிளம்பச் சொல்லுங்க'ன்னு சொல்லி, 'இந்த விஷயம் உங்களுக்கும், எனக்கும் மட்டும் தான் தெரியணும். யாருக்கும் தெரியக் கூடாது'ன்னு சொல்லியிருந்ததால தான், நான் உங்க கிட்ட கூட இதச் சொல்லல,'' என்றார்.

இதைக் கேட்டதும், வீராவுக்கு காலையில் இருந்த மனக்குழப்பமும், கோபமும் அடங்கி, பெருந்தனம் மீது மரியாதை தோன்றியது.

வீட்டிற்குள் நுழைந்தவனைப் பார்த்து, ''வா வீரா... எப்படி இருக்க... நம்ம பெருந்தனத்த சேர்த்துருக்கிற ஆஸ்பத்திரி உனக்கு தெரியுமா... சாயந்தரம் போய் பாக்கலாமா...'' என்றார்.

''அவருக்கு ஆபரேஷன செய்ததே நான் தான்; அவர் இப்ப நல்லா இருக்கார். நீங்க சாப்பிட்டுட்டு ஓய்வு எடுங்க; 4:00 மணிக்கு போய் பாப்போம்,'' என்றான் வீரா.
மாலையில், வீராவுடன் மருத்துவமனைக்கு வந்த கணபதி வாத்தியார், பெருந்தனத்திடம், ''இவரு யாரு தெரியுதுங்களா... நம்ம முனியனோட மகன்...'' என்று அறிமுகம் செய்தார். பெருந்தனத்தின் முகத்தில் ஒரு மரியாதையான பார்வை, தோன்றி மறைந்தது.

ஊருக்கு கிளம்பிய கணபதி வாத்தியாரை, பஸ் ஏற்றி விட்டு திரும்பும் போது, வீராவின் மனது லேசானது போல இருந்தது.

'நல்ல மனிதர்களையும் சூழ்நிலைகள் தப்பாக நினைக்க வைத்து விடுகிறதே...' என நினைத்துக் கொண்டான்.

பஸ்சில் ஏறிய கணபதி வாத்தியார், ஜன்னலுக்கு வெளியே தெரிந்த பஸ் நிலைய சுவரில் எழுதப்படிருந்த, பொய்மையும் வாய்மையிடத்து புறை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்
பொருள்: தீமை செய்தவருக்கும், நம்மால் ஒரு நன்மை ஏற்படுமானால், நாம் கூறும் பொய்யான சொற்களும், வாய்மை என்றே கருதப்படும்.
- என்ற குறளைப் படித்ததும், தான் கூறிய பொய்யை நினைத்து, தனக்குள் சிரித்துக் கொண்டார்.

கே.ஸ்ரீவித்யா

எழுதியவர் : மீள் (4-Jan-16, 1:39 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 118

மேலே