காத்திருப்பு-சுஜய் ரகு
கனவுகளின் ஏக்க நதி
கரை மேவும் காலம்
கரையத் துவங்குகிறது
பூப்பதும் உதிர்வதும்
வாடிக்கையாகிவிட்டத்
தனிமைக்குள்
இருள் தூவிப் போகிறது
பின்னந்திக் காற்று
விரகமொரு
இருள் வாழ் சர்ப்பமாய்த்
தளைப்படுகிறது
அப்போதும் அவ்வப்போதும்
பறவைகளின் கவிதைகளைக்
கிளை எழுதட்டுமெனக்
காத்திருக்கிறேன்
பருவத்தின் வேர்கள் பரப்பி
கிளை
காலத்தின் தொன்மத்தில்
இணைந்திருக்கிறது
ஒவ்வொரு விடியலும்
ஒரு வெள்ளைக் காகிதத்தை
நீட்டுகிறது
நித்தமதில்
இசைக்க வியலாத யாழ்
வரைந்து
கசக்கி விடுகிறேன்
ஆசைகளின் ராகங்கள்
தொலைந்து போகின்றன
நான்
விழிகளால் வருடிய
நட்சத்திரத்திலொன்று
எரிந்து அணைகிறது
என் முன்
அது
இருளளந்து காற்றில் வரும்
நாய்களின் ஓலத்தினாலா?
அல்லது
என் மீசை நரையொன்றின்
மிகுதியினாலா?