முயற்சியையே ஏற்றிடுவீர் முன்பு ----- வெண்கலிப்பா
நாளும்நாம் முயற்சிதனை நன்றெனவே செய்திடுவோம் .
சூளுரைத்தே இவ்வுலகில் சுகமாக வாழ்ந்திடுவோம் .
மூளுகின்ற பிணக்குகளும் முயற்சியினால் தீர்ந்திடுமாம்
மாளுகின்ற சோம்பல்கள் மாறிவிடும் பூமியிலும்
வேண்டுகின்ற முயற்சியினால் வேளாண்மை பல்கிடுமாம்
யாண்டுமிதைச் சொல்லிடுவேன் யாங்கணுமே அனுபவத்தில்
ஆண்டிடலாம் ; வெற்றிதோல்வி அயராத முயற்சியினால்
மாண்புடைய மானிடரே மாறிவிடும் எந்நாளும் .
கல்வியினில் முயற்சிசெய்தால் காலமதை வென்றிடலாம்
பல்லோரும் இதனைத்தான் பாரோர்க்குச் சொல்லிடுவார் .
நல்லவர்கள் முயற்சினால் நன்மைகளும் விளைந்திடுமே .
அல்லவர்கள் சோம்பலினால் அவதியுறும் இவ்வுலகுச்
சாதனைகள் படைத்திடலாம் சாதிப்போம் நாமிங்குச்
சோதனையும் தீர்ந்துவிடும் சோகமது மாறிவிடும் .
வேதனையும் இனியில்லை வேண்டுவனக் கிட்டிடுமாம்
சீதனமும் இதுவென்றே சீர்பெறுவீர் முயற்சியினால் .
வெற்றிகள் படிந்திருக்கும் வென்றவர்கள் முயற்சியினால்
தோற்றவர்கள் வென்றிடலாம் தொடரட்டும் முயற்சியுமே .
மாற்றங்கள் உண்டாகும் மாற்றமில்லை முயற்சியினால் .
சாற்றுகிறேன் இவ்விடத்தில் சாதிப்பீர் முயற்சியினால் .
முயற்சிதன்னில் கவனத்தை முழுமையுடன் செலுத்தியவர்
அயர்ச்சியின்றி எந்நாளும் அகிலத்தில் வாழ்ந்திடுவர் .
பயிற்சினாலே பெற்றிடலாம் பதித்திடுவீர் நெஞ்சத்தில் .
முயற்சியையே ஏற்றிடுவீர் முன்பு .