காட்சிப் பிழைகள் - 26 - ஆனந்தி

காட்சிப் பிழைகள் - 26
-----------------------------------

நான் வாழ்வதற்கு இப்போதைய,
உன் மௌனம் போதுமாயிருக்கிறது...

என்னை பட்டாம்பூச்சி
என முன்பு சொல்லி,
பின்பு சிறகொடித்தாய்...

நீ தீர்மானி - என்
மரணத்தையாவது...

உன்னால் சிலுவையில்
முக்காலமும் அறையப்பட்டவன்
நான்...

உனக்காக உதிர்ந்தது கஸல்கள்
மட்டுமல்ல - நானும் தான்...

உனக்கான முத்தங்கள் இன்னும்
என் உதடுகளில் ஈரம் காயாமல்
மண்டியிட்டு மடிகிறது....

முன் எதையும் விட, பிடித்திருக்கிறது
இப்பொழுதுகளில் நீ என்னை வெறுப்பதை...

தேடி கொண்டிருக்கிறேன்
உன்னையல்ல - என்னை...

அவஸ்தைகள்
அர்த்தமற்று காத்திருப்பதில் அல்ல.
அடுத்தடுத்து உனை பார்த்திருப்பதில்.

நீ தயங்காமல் கொள்ளியிடுவது,
என் காதலுக்கு அல்ல - என்
வாழ்வின் மிச்ச நாட்களுக்கு...

ஒரே ஒரு முறை பெயரை சொல்லி
அழைத்து விடு.
பிறந்த பயனை அடைந்து விட்டு
போகிறேன் நானும்...

உடலை விட்டு உயிர் பிரியவும் தயார்
உன்னையும் பிடிக்குமென,
இரட்டை சொல் சொல்...

ஞாயிறுகளில் தலைகீழாய்
தொங்கும் மாமிச கடை ஆடாய்
ரத்தம் சொட்ட சொட்ட,
உன் நினைவுகளுக்குள் நான்
தடையின்றி தலையின்றி...

ஒரு கண்ணில் அறுபடுகிற
நரம்புகளின் அவஸ்த்தையையும்,
மறு கண்ணில் விண்மீன்களின்
சொலிப்பையும் தருபவளே
எவரிடம் முறையிடுவேன்
உம் செயலை...

ஒற்றை பார்வையில் கனலோடும்
தள்ளுகிறாய்,
காதலோடும் தள்ளுகிறாய்
என்ன தான் செய்ய நான்
நீயே சொல்?

கொடி கயிறாகவாவது கட்டிவிடு
காய்ந்து விட்டு போகிறேன்
உன் ஆடைகளோடு சேர்ந்து நானும்...

சாத்தானின் வேட்டையும்
கடவுளின் ஆசிர்வாதமும்
ஒரு சேர - நீ என் கனவுக்குள்...

குழந்தையாய் அகப்பட்டு
தவழுகிறேன் நேசத்திற்குள்,
பொறுப்பு நான் மட்டுமல்ல
உன் கண்களும் தான்...

ஓர் விண்ணப்பம் ஏக்கப்பட விட்டே,
கொல்வதற்கு ஒரே ஒரு முறை
கருணை கொலை செய்து விடேன்...

பாராளுமன்றத்திலும்
சட்டமன்றத்திலும் இரங்கல் தீர்மானம்
இப்போது நம் காதலிலும்..

எழுதியவர் : ஆனந்தி.ரா (6-Jan-16, 12:09 am)
பார்வை : 617

மேலே