தடம் மாற்றிய பண்டிகை
செவ்வாயின் நேரப்படி மணி மாலை 4.30ஐத்தொட்டதும் , தன்னுடைய அலுவலகத்தில் இருந்து வெளியேறி , புதிதாய் வாங்கியிருக்கும் தன்னுடைய ஹைட்ராலிக்ஸ் காரினுள் புகுந்தான் சிவராஜன் .காரினுள் இருக்கும் தொடுதிரையில் டார்கெட்எனும்கேள்விக்கு ரெட் மௌன்டைனில் இருக்கும் தன்னுடைய வீட்டினைக்குறிப்பிட்டுஆட்டோபைலட் மோடில்பறக்க ஆரம்பித்தான் .பூமியில் ஆக்ஸிஜன் உற்பத்திசெய்யும் அவனுடைய நிறுவனம் செவ்வாயிலும் தனது காலடியை எடுத்துவைத்தது .ஏற்கனவே செவ்வாயில் குடியேறிவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் , செவ்வாயின் நிலவுகளில் ஒன்றான தைமஸில் மனிதர்கள் குடியேறத்தேவையான வசதிகளை நிறுவிக்கொண்டிருந்தார்கள் . அதன் ஒரு அங்கமாக அங்கு ஆக்ஸிஜனை உற்பத்திச்செய்து நிலைநிறுத்தும் பணி இவன்வேலைசெய்யும்கம்பனி வாங்கியது . ஏற்கனவே செவ்வாயில் அவன் செய்திருந்த சிறப்பான பணியால் அவனை டீம்ஹெட்டாக மாற்றி , தைமஸிற்கு அனுப்பியிருந்தார்கள் .
இன்னும் பத்து நிமிடங்களில்அந்தகார் 5000 கிலோமீட்டரைக்கடந்து அவனின் வீட்டினைச்சென்றடைந்துவிடும் .நாளை பொங்கல் என்பதால் , டிடிஎச்சில் ரிலிஸாகும் புதுத்திரைப்படத்தின் சந்தாவை காரினுள் இருந்தவாறே ஆன்லைனில் செலுத்தினான் .மேலும் நாளை மறுநாள் சனிகிரகத்திற்குச்செல்லவிருக்கும் குடும்பசுற்றுலாவையும் ஒருமுறை உறுதிசெய்தான் . இந்த இருநாட்கள் குடும்பத்தோடு செலவழிக்கவேண்டும் என்று முடிவெடுத்தபடியே பயணத்தைத்தொடர்ந்தான் .நடுவே அவனுக்கு போன் வர , அழைத்தவள் அவன் மனைவி நிலா தான் . அவளின் அழைப்பை ஏற்று , அவளின் முகத்தைப்பார்த்தவாறு பேசினான் .
‘சொல்லுமா .’
‘பொங்கலுக்கு என்ன பிளானுங்க ?’
‘படத்துக்கு புக் பண்ணிருக்கேன் .நாளான்னைக்கு சாட்டர்ன் டூர் . அவ்ளோதான் . உனக்கு ஓகேதான ?’
‘எனக்கு ஓ.கேங்க . ஆனா உங்க அப்பாவுக்கு பூமிக்கு போகனுமாம் ’
‘விடு . நா வரேன் ’ என்றவாறு அவளின் இணைப்பைத்துண்டித்தான் .இவனின் தந்தையின் காலத்துச்சூழல் வேறு , இன்றைய நிலை வேறு . பசித்தால் மாத்திரை எடுத்துக்கொள்ளும் காலம் இது . இந்நிலையில் பொங்கல் வைக்க அரிசிக்கு எங்கு போவது ? அப்படியே வாங்கினாலும் ஒரு பருக்கையின் விலை 1 கோடியைத்தொடும்.இதெல்லாம் சொன்னால் புரிந்துகொள்ளவே மாட்டார் .சாவதற்குள் ஒருமுறையாவது தான்பிறந்த ஊருக்குச்சென்று பொங்கலைக்கொண்டாட வேண்டும் என்று தழுதழுத்தவாறே கூறுவார்.
அவனுக்கு விவரம் தெரியஆரம்பித்த நாட்களிலிருந்தே அவரின் பெரும்பாலான பேச்சுகள் இதையே சுற்றியிருக்கும் .அவர்சிறுவனாக இருந்தபோதுபொங்கலைக்கொண்டாடினார்களாம் . அவருக்குத்திருமணம் ஆகும்போது ஓசோன்படலம்முற்றிலும் அழிந்து UVகதிர்களின் தாக்குதலுக்கு பூமி உள்ளானது . UV தாக்குதல் மட்டுமின்றி பூமியின் வெப்பநிலையையும் உயர ஆரம்பித்ததால்நீர்வறட்சி ஏற்பட்டுஉணவு உற்பத்தி என்பது அடியோடு அழிந்தது. புறஊதாக்கதிர்களின் தாக்கத்தாலும் , பூமியின் காலநிலைமாற்றத்தாலும் , உணவுத்தட்டுப்பாட்டாலும் பலகோடிக்கணக்கானோர் இறந்தனர். அந்தநிலையில் சிலரின் முயற்சியால் பசி மற்றும் தாகத்தை அழிக்கும் மாத்திரைச்சந்தைக்கு வந்தது . என்னதான் அறிவியல் இருந்தாலும் உணவையும் தண்ணீரையும் மீண்டும் உற்பத்திச்செய்யமுடியவில்லை.எப்படியோ அவர் தன்மனைவியை இழந்தாலும் சிவராஜனை மிகக்கஷ்டப்பட்டு காப்பாற்றினார் .அன்றிலிருந்து ஒவ்வொரு பொங்கலுக்கும் எப்படியாவது பொங்கல்வைக்கவேண்டும் என்பதே அவரின் ஆசை.சிவராஜனுக்கு எப்படித்தெரியும் ? அவனின் தந்தையும் தாயும் முதன்முதலில் சந்தித்தது ஒரு பொங்கலில்தானென்று .
இம்முறை அவன்மனதில் ஏதோ வருத்த , அவருடன் செல்லவிருந்த சனி பயணத்தை கேன்சல் செய்துவிட்டு பூமியை நோக்கிய பயணத்துக்கு ஆன்லைனில் டிக்கெட் எடுத்தான் . அவனுடைய கார் செவ்வாயில் செயற்கையாய் உருவாக்கப்பட்டிருந்த வளிமண்டலத்தினுள் நுழைந்தது .அடுத்தநிமிடம் அவனுடைய வீட்டை அடைந்தவன் விடுமுறைக்குதுகலத்துடன் வீட்டினுள் நுழைந்தான் . ஆனால் அங்கே அவன் மனைவி கண்ணீருக்குத்தன் முகத்தைவார்த்திருந்தாள் .
‘என்ன நிலா ஆச்சு ?’
‘மாமா இறந்துட்டாருங்க ’என்றாள்.அவனால் ஜீரணிக்கமுடியாமல் தந்தையின் அறைக்குச்சென்றான் .உயிரற்ற உடலில் மென்புன்னகையும் நிறைவேறாத ஏக்கமும் அவரின் முகத்தில் தென்பட்டன.மனதைச்சமாதானப்படுத்தியவன் நேரே இன்டர்நெட்டிற்குச்சென்று தன்னுடைய புதுக்காரை விற்றான்.அடுத்த ஒருமணி நேரத்தில் பூமியை நோக்கிய பயணத்திற்கு மேலும் இரண்டு டிக்கெட்களும் ஒரு கிலோ அரிசியையும் வாங்குவதற்குரிய கட்டணத்தைச்செலுத்தினான் .