சூழல் சீர்கேடு
சூழல் சீர்கேட்டை தடுக்க முடியுமா? நாம் பின்னோக்கிப் போவதால் சூழலை மீட்டெடுக்க முடியுமா அல்லது முன்னோக்கி நகர்ந்தபடியே மாற்றங்களை உருவாக்க முடியுமா? பொருளாதார வளர்ச்சிக்கு சூழலை பலியிடவேண்டுமா அல்லது சூழலை மீட்டெடுக்க பொருளாதார வளர்ச்சியை விட்டுக்கொடுக்க வேண்டுமா?
மனிதன் இயற்கையை மீறி பல்லாயிரமாண்டுகளாகி விட்டது. நாம் உணவை சமைத்து உண்பதே இயற்கைக்கு எதிரானதுதானே? விவசாயம், உடை, வீடு என நாம் இயற்கையைவிட்டு வெளியேறி அதிக தூரம் வந்தாகிவிட்டது. அப்படியிருக்கையில் சூழல் என்று புலம்புவது நியாயமல்ல. கல்லணையும் நர்மதையின் குறுக்கே கட்டப்பட்ட அணையும் சூழலுக்கு செய்யும் தீங்கின் அளவில் தான் வித்தியாசமே ஒழிய இரண்டும் தீங்கு செய்பவைதானே?
இப்போதைக்கு நாம் காண வேண்டிய மாற்றம் நமது மனநிலையில்தான். இந்த உலகத்தை நமது வீடாகப் பார்க்கவேண்டும். நாம் பூமியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதை எப்படி மறுசுழர்ச்சி செய்து தொடர் பயன்பாட்டுக்குத் தக்கவைப்பது என்று பார்க்கவேண்டும்... இன்று இயற்கை நமது சூழலுக்கு அதிபதி இல்லை. நாம்தான் நமது சுற்றுச்சூழலுக்கு அதிபதியாகிக் கொண்டிருக்கிறோம். நாம் எப்படி இந்த அதிகாரத்தைக் கையாளப்போகிறோம் என்பது தான் நமது உரையாடல்களில் முக்கியமான கருத்தாக இருக்கவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி சூழலுக்கு பாதிப்பு குறைவாக வைக்கும் பொருளாதார வளர்ச்சியை எட்டுவது என்பாதாக யோசிக்க வேண்டும்...
சூழலுக்காக பொருளாதார வலிமையை இழக்கத் தேவையில்லை. இப்போது மேக் இன் இந்தியா இயக்கம் வலுவடையும்போது நாம் மாற்று மறுசுழர்ச்சி செய்யக்கூடிய எரி சக்தி அமைப்புகளை அதிகளவில் பயன்படுத்துவது, சூரிய மின்திட்டங்களை புதிய உள்கட்டமைப்புகளோடு இணைத்து அமைப்பது என்பனபோன்ற திசையில் சிந்தனையை ஓட்ட வேண்டும். அது நமது மனித குலத்தின் எதிர்காலத்துக்கு இந்த பூமியை ஒரு வீடாகத் தக்கவைத்துக்கொள்ள உதவும். பெரும் சரக்குக் கப்பல்களை எப்படி கண்டம் தாண்டும் மின்சார ரயில்களாக மாற்றுவது என்பது ஒரு புது துவக்கமாக இருக்கும். டெஸ்லா நிறுவனத்தின் பவர் வால் (power wall) மின்கலங்கள் சூரிய மின் சக்தியை உபரியாக உற்பத்தியாகும் நேரங்களில் பெருமளவு சேமித்து வைத்து சூரியன் இல்லாத நேரங்களில் பயன்படுத்த தரும். இதுபோன்ற புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்குவது நமது பொருளாதார முன்னேற்றத்தை இன்னும் துரிதப்படுத்துவதோடு சூலலின் மீதான எதிர்மறைத் தாக்கங்களைக் குறைக்கவும் உதவும்...
நகரங்களிலும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தி கழிவாக வெளியனுப்பும் தண்ணீரைச் சுத்தீகரித்து மறுபயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது, ஆறுகளில் நீர்ப்பெருக்கெடுக்கும் காலங்களில் அருகாமையிலிருக்கும் மழை மறைவுப் பகுதிகளிலின் நீர்நிலைகளை நிறைக்கப் பயன்படுத்துவது, செம்மை நெல் சாகுபடி போன்ற குறைவான நீர் தேவைப்படும் வேளாண் முறைகளைப் பரவலாக்குவது, அதிக நீர் தேவைப்படும் ஆலைக் கரும்பு போன்ற பயர்களின் பயன்பாட்டைக் குறைத்து பணை (கரும்பாலை சர்கரைக்குப் பதிலாக பணையின் வெல்லம், கருப்பட்டி, கற்கண்டு) போன்ற குறைவான நீர் தேவைப்படும் பயிர்களை ஊக்குவிப்பது போன்றவை குறித்து கவனம் செலுத்தவேண்டும். கடல்நீரைச் அதிகளவில் சுத்தீகரித்து குளங்களையும் அணைகளையும் நிறைத்து நிலத்தடி நீர் மட்டத்தைத் தக்கவைப்பதும், அப்படிக் கடல்நீரைச் சுத்தீகரிக்க உருவாகும் கழிவுகளை கடலின் சூழலுக்கு பங்கம் வாராதபடியாக கடலில் கலப்பது குறித்தும் ஆராய்ந்து புதிய தொழில் நுட்பங்களை உருவாக்க வேண்டும்...
காடுகளை உருவாக்கும் பணியை இனி அணில்களுடனும் பறவைகளுடனும் இணைந்து நாம் செய்யவேண்டும்... பாலைவனங்களின் பரவலைத் தடுப்பதும் பாலைவனங்களில் சோலைகளை உருவாக்குவதும் குறித்து இப்போது நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு அரசு மற்றும் சமூக ஆதரவினை அதிகரிப்பது, சமூகக் காடுகளை அதிகளவில் உருவாக்குவது, சாலை ஓரங்கங்களில் மரங்களை வளர்ப்பது, காலியாக இருக்கும் வீட்டு மணைகளில் மரங்களை வளர்ப்பது, சுரங்கங்களின் கணிம வளம் வற்றியபிறகு அந்த நிலங்களில் காடுகளை வளர்ப்பதை சுரங்க அனுமதிக்கான முக்கியமான நிபந்தனையாக்குவது எனக் காடுகளை அதிகளவில் உருவாக்குவதை தேசிய அளவில் போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்தவேண்டும்... மரங்களை வளர்ப்பவர்களுக்கும் சூரிய மின்திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரியில் குறிப்பிட்ட சதவீதம் விலக்களிப்பது எனக் கார்பன் கிரெடிட்டை தனிமனிதனுக்கும் கொண்டு சேர்க்கவேண்டும்...
அணு மின் திட்டங்கள் குறித்து. ருசியாவில கப்பல்களில் மிதக்கும் அணு உலைகளை நிறுவி தொலைதூர சமூகங்களுக்கு எரிசக்தியை கொண்டு சேர்கின்றனர்... அமரிக்கக் கடற்படையின் பெரும் கலங்கள் அனைத்தும் அணுசக்தியில் இயங்குபவையே... நிற்க. நாம் அந்தத் தொழில்நுட்பத்தை பாம்பைக் கண்டால் அடித்துக் கொல்வோம் என்ற எண்ணத்தைக் கைவிட்டு அதை ஒரு தற்காலிக வாய்ப்பாகப் பார்த்து, எப்படி பாதுகாப்பான மற்றும் மறுசுழரச்சி செய்யத்தக்க எரிசக்தி ஆதாரமாக மாற்றுவது, உலைகளின் அளவைக் குறுக்கி அவற்றின் ஆற்றலை மின்சக்தியாக மாற்றும் வல்லமையை அதிகரிக்கப்பது என்ற திசையில் சிந்திக்கவும் ஆராயவும் வேண்டும்... அதே சமயத்தில் மேலே சொல்லப்பட்ட டெஸ்லாவின் பவர் வால் போன்ற தொழில்நுட்பங்களை மேலும் பரிணமித்து மறுசுழர்ச்சி செய்யத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் நம்பகத்தன்மை குறைபாட்டினை நிவர்த்தி செய்தும் சூரிய மின் தகடுகளின் மின்னுற்பத்தி திறனை அதிகரித்தும், அணு மற்றும் அணல் மின் திட்டங்களின் பயன்பாட்டினை படிப்படியாக குறைத்துக் கொள்ளலாம்...
இப்படியாக முன்னோக்கி நகர்ந்தபடியே சூழலின் மீதான தாக்கங்களைக் குறைப்பது குறித்தும் பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டே சூழலை மேம்படுத்துவது குறித்தும் சிந்தனைகளை இங்கே பதியப்படுகின்றன ... கருத்துக்களைப் பதியுங்கள், உரையாடுவோம்...