வறுமை வேண்டும்

ஓடி ஆடி உழைக்க வேண்டும்
உழைத்து களைத்து
உறங்க வேண்டும்
வியர்வை துளிகள் வழிய வேண்டும்
என் வீட்டுக்காரி துடைக்க வேண்டும்
அதற்காக வறுமை வேண்டும்

காசைப் பார்த்து காரைப் பார்த்து
காதல் கொள்ளும் கன்னி வேண்டாம்
உறவை மதித்து உணர்வில் கலக்கும்
உண்மை அன்புள்ள
ஒருத்தி வேண்டும்
அதற்காக வறுமை வேண்டும்

அன்னை மடியில் உறங்க வேண்டும்
அவளின் சேலை போர்வையாகணும்
அக்கா தங்கை ஆனந்தமாய் வாழ
அயராது நான் உழைக்க வேண்டும்
அதற்காக வறுமை வேண்டும்

தேனிருக்கும் இடத்தினை
தேடி ஈக்கள் மொய்ப்பது போல
காசு பணம் கண்டவுடன்
காலைச்சுற்றும் உறவுகளின்
வேஷ உறவு வேண்டாம்
வெறும் மனிதனாய் என்னை
உறவு சொல்லும் உண்மை உறவாய்
ஓரிருவர் போதும்
அதற்காக வறுமை வேண்டும்

சிறுக சிறுக சேமித்து
சிரித்து நாளும் வாழவேண்டும்
தினம் தினம் போராடி
துன்பங்களை ஜெயிக்க வேண்டும்
சோகங்களும் துயரங்களும்
சூழ்கின்ற போதிலும்
தன்மானம் காக்கின்ற
தமிழ்மகனாய் இறக்க வேண்டும்
அதற்காக வறுமை வேண்டும்.

எழுதியவர் : கோணேஸ்சர்மி (7-Jan-16, 8:51 pm)
Tanglish : varumai vENtum
பார்வை : 148

மேலே