காட்சிப் பிழைகள் 28

மணற் பூக்களாய்
உன் பாதச் சுவடுகள்..
பூக்களைப் பறிக்கும்
கள்வர்களாய் கடலலைகள்..

எழுத்தில்லா கவிதையாய்
உன் மௌனங்கள்..
எழுதிடவே சொல் தேடும் என் சிந்தைகள்..

எரிகின்ற நெருப்பாய் உன் காதல்
விரும்பி விழும் விட்டிலாய் என் மனம்...

கருப்பு வெள்ளை மீன்கள்
உன் கண்ணிரண்டில் நீந்துதே
கவிதை கோடி எழுதவே
காதல் என்னை தூண்டுதே

காற்றிலாடும் கார்மேகமாய்
உன் கருங்கூந்தல்..
களிநடன மயிலாய்
என் இதயம்..

கோடிக் கம்பன் குடியிருக்கும்
நூலகமாய் உன் விழிகள்
தேடித் தேடி தினம் படிக்கும்
வாசகனாய் என் விழிகள்...

************************************
முடிந்து கொள்ளடி கார்குழலை
பாவம் மயில்கள்
ஆடியாடிக் களைத்து விட்டது..

பல்லாங்குழி ஆடுகிறது காதல்
உன் கன்னக் குழியில் என்னைப் போட்டு...

சிதறிக் விழுகிறது என் பூமியில்
சில பல பிறை நிலவுகள்
நீ நகம் வெட்டும் வேளைகளில்...

சிறைப்பட்டுக் கிடக்கிறது கவிதைகள்
நீ பேசாத மௌனங்களில்...

கோழிக் கிண்டலில் கூட புதையல்
எனது கையெழுத்தில் அவள் பெயர்...

வெற்றுக் குடம்தான் உன் இடையில்
தளும்பவே செய்கிறது என் மனம்..

நீயோ கோவிலைச் சுற்றி படியிலமற்கிறாய்
கருவறை சிலையோ தவம் செய்கிறது
படிக் கற்களாய் பிறக்கும் வரம் கேட்டு...

*************************************
உன் காதல் குல சாமிக்கு
பலி ஆடு நான்...

செவிகளில் நுழைந்து விழிகளில் வழிகிறது
நீயுனக்கு பிடிக்குமென்று சொன்ன பாடல்களெல்லாம்..

கழுத்தறுப்பட்ட சேவல்
கலப்பையில் சிக்கிய புழு
காதல் கொண்ட என் இதயம்
எத்தனை கூர்மையடி உன் நினைவுகளுக்கு...

"அவ நல்லா இருக்கா அண்ணா" என
உன் தோழிகள் சொல்லி கேட்க
என் விழிகளில் வழிவது
ஆனந்தக் கண்ணீர் என கொள்க...

தினமும் சாகிறேன் தினமும் உயிர்த்தெழுகிறேன்
அனுதினம் அறைகிறாய் நீயென்னை
உன் நினைவுச் சிலுவைகளில்...

"மழையில் நனைந்து விடாதீர்கள்" என்று
நீ கூறிய அக்கறை வார்த்தைகள்தான்
குடைப் பிடித்தும் நனைத்துப் போகிறது
இன்றைய மழைக் காலங்களில் என் விழிகளை

என் புத்தக பக்கங்களில் ஒழித்து வைத்துள்ளேன்
நீ தலை வாரும் வேளைகளில்
மயிலிறகு சேகரிக்கும் மழலையாக மாறிய காலங்களை...

அடிக்கடி அழுகின்றேன் இப்போதெலாம்
அழ வைப்பதென்னவோ
அன்று நீ கேட்ட
"ஆம்பள அழலாமா லூசு"???

ஒழித்து வைத்துக் கொள்கிறேன் இதயத்திற்குள்ளேயே
யாரவது வரும் வேளைகளில்...
விழிகளைத் தாண்டி வரும் உன் நினைவுகளை...

வானம் பார்த்த பூமி நான்
வான் மழைதான் நீ
ஆயினும் உன்னையேச் சாரும்
என்னை தரிசாக்கிச் சென்ற பெருமை...

தீரா தாகம் போல
என் தலையனையில் அடைத்து வைத்துள்ள
உன் நினைவுகளுக்கு..

"கண்வலிப் பூக்கள்"
உன் நினைவுகளைதான் சொல்கிறேன்

கஸல் பற்றி எனக்கொன்றும் தெரியாது
எண்ணிப் பார்க்கிறேன் உன் காதலை
கண்ணீர் வருகிறது.. கூடவே கஸலும்..

எழுதியவர் : மணி அமரன் (8-Jan-16, 10:50 am)
பார்வை : 494

மேலே